சென்செக்ஸ் 249 புள்ளி சரிவு; நிப்டி 86 புள்ளி வீழ்ச்சி

பதிவு செய்த நாள் : 05 டிசம்பர் 2018 20:05

மும்பை,

   வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் சரிவைச் சந்தித்துள்ளன. இந்தியப் பங்குச் சந்தையில் இன்றைய வர்த்தகம் சரிவுடன் முடிந்து.

இந்திய ரிசர்வ் வங்கியின் 5வது நிதிக் கொள்கைக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில் வெளியிடப்பட்ட அறிக்கையில் வட்டி விகிதங்கள் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து 6.5 சதவீதமாக நீடிக்கும் என  அறிவித்துள்ளது.

மேலும் அமெரிக்கா மற்றும் சீனா இடையே தொடரும் வர்த்தகப் போர் போன்ற பல காரணங்களால் உலக வர்த்தகம் தற்பொழுது சரிவை சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் நாணய மாற்று மிகவும் பலவீனமான நிலையில் இருப்பதும் பங்குச்சந்த சரிவுக்கு ஒரு முக்கிய காரணம் ஆகும்.

இதன் எதிரொலியாக இன்றைய இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் வீழ்ச்சி கண்டது.  

இந்திய பங்குச்சந்தையில் இன்று துவக்கத்தில் சென்செக்ஸ் சரிவுடன் தொடங்கியது. மாலை நேர வர்த்தக இறுதியிலும் சென்செக்ஸ் சரிவடைந்தது.

இந்நிலையில் சென்செக்ஸ் 249.90 புள்ளிகள் சரிந்து 35,884.41 புள்ளிகளில் நிலைபெற்றது.

தேசியப் பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிப்டி 86.60 புள்ளிகள் சரிந்து 10,784.95 புள்ளிகளில் உள்ளது.

சன் பார்மா  நிறுவனம் இன்று 6.59 சதவீத பங்குகள் சரிந்து பெரும் வீழ்ச்சியை சந்தித்தது. இதைபோல் டாட்டா ஸ்டீல், வேதாந்தா, டாடா மோட்டார்ஸ், எம் & எம், கோல் இந்தியா, ஐடிசி ஆகிய நிறுவனங்களின் பங்குகள்  4.27 சதவீதம் வீழ்ச்சியடைந்தது.

எச்.யூ.எல்., எச்.டி.எஃப்.சி, எச்.டி.எஃப்.சி வங்கி, விப்ரோ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் 2.07 சதவீதம் உயர்ந்துள்ளன.

இந்திய ரூபாயின் மதிப்பு

இந்திய ரூபாயின் மதிப்பு இன்று காலை (05-12-2018) வர்த்தகம் துவங்கியதும், அந்நிய செலவாணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் சரிந்து ரூ.70.75 காசுகளாக இருந்தது.

மாலை வர்த்தகத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.70.43 காசுகளாக நிலைபெற்றது.

நேற்று வர்த்தக இறுதியில் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 70.49 காசுகளாக இருந்தது குறிப்பிடத்தக்கது.