ஆன்மிக கேள்வி – பதில் – மயிலாடுதுறை ஏ.வி.சுவாமிநாத சிவாச்சாரியார்

பதிவு செய்த நாள் : 04 டிசம்பர் 2018

 * வயதில் மூத்தவர் மட்டும்தான் திருஷ்டி சுற்ற வேண்டுமா? சுப. மீனாட்சி, சுசீந்திரம்.

 திருஷ்டி சுற்றுவதும் ஒரு வகையில் ஆசீர்வாதம் செய்வது போல்தான். எனவே, வயதில் பெரியவர்கள்தான் செய்யவேண்டும்.

* பூஜையறையும், சாமி படங்களும் எந்த திசை நோக்கியிருக்க வேண்டும்? எஸ். மதுரைமுத்து, நெல்லை.

பூஜையறை கிழக்கு நோக்கியே இருக்க வேண்டும். சாமி படங்கள் கிழக்கு நோக்கி வைக்க வேண்டும் என்பது பொது விஷயம். தட்சிணாமூர்த்தி, நரசிம்மர் படங்களை தெற்கு நோக்கியும், துர்க்கை, லட்சுமி படங்களை வடக்கு நோக்கி வைப்பதும் சிறப்பு.

* பவுர்ணமியன்று கிரிவலம் செய்ய ஏற்ற நேரம் பகலா, இரவா? மு. அன்புராஜ், தென்காசி.

கிரிவலம் எப்போது செய்தாலும் புண்ணியம்தான். இருப்பினும், பவுர்ணமி கிரிவலத்தை நிலவு உதயம் ஆனபின்பு செய்வதே சிறப்பு.

* எலுமிச்சம்பழத்தில் குங்குமம் தடவி வாசலில் வைப்பது ஏன்? எம். ராஜசேகரன், பாபநாசம்.

திருஷ்டி தோஷம் கழியவும், செய்வினைக் கோளாறுகள் வீட்டை அணுகாமலும் இருக்க இப்படி செய்கிறார்கள். ஆனால், இது தமிழர் வழக்கமில்லை.