எருமேலி கோயில்கள்!

பதிவு செய்த நாள் : 04 டிசம்பர் 2018

எருமேலியில் பெரியம்பலம், சிறியம்பலம் என்ற இரண்டு சாஸ்தா கோயில்கள் உள்ளன.

சபரிமலை யாத்திரையில் முதலில் இங்குதான் செல்ல வேண்டும். தாயின் வயிற்று வலி போக்க புலிப்பால் தேடி ஐயப்பன் காட்டுக்கு சென்ற போது, எருமை தலையுடன் கூடிய மகிஷியை கொன்ற இடம், எருமேலி. அந்த இடத்தை முதலில் 'எருமைக்கொல்லி' என்றும், பின்னர் 'எருமேலி' என்றும் அழைக்கின்றனர்.

ஐயப்பன் வில்லும் அம்பும் ஏந்தி நிற்கும் சிலைகள் இந்த கோயில்களில் உள்ளன. பகவதி, நாகராஜா சன்னிதிகளும் இங்குள்ளன. சிறிய கோயிலில் பேட்டை கட்டும் பக்தர்கள், பெரிய கோயிலில் வந்து பேட்டை துள்ளலை நிறைவு செய்வர். சிவபூத கணங்களை வணங்கி கோயிலில் உள்ள தலப்பாறையில் காணிக்கை செலுத்தி, கொடுங்காடு வழியாக பயணத்தை தொடர்வர்.

மகரவிளக்குக்கு மூன்று நாட்களுக்கு முன், எருமேலியில் நடக்கும் அம்பலப்புழா, ஆலங்காடு ஐயப்ப பக்தர்களின் பேட்டை துள்ளல் பிரசித்தி பெற்றது.

எருமேலி பெரிய கோயில் மற்றும் சிறிய கோயில் அதிகாலை 5.00 –- 11.30 மணி வரையிலும், மாலை 5.00 –- 8.00 மணி வரையிலும் திறந்திருக்கும். பெரிய கோயிலில் மாசி மாதம், கார்த்திகை நட்சத்திரத்தில் கொடியேறி உத்திரம் நட்சத்திரத்தில் ஆறாட்டு நடக்கும்.

சபரி யாத்திரையின் தனித்தன்மை!

யாத்திரைகளில் தனித்தன்மை மிக்கதாக சபரிமலை பயணம் அமைந்துள்ளது. 41 நாட்கள் விரதமிருந்து மனதாலும், உடலாலும் துாய்மை காப்பது முக்கியம். காட்டுப்பாதையில் குளிர்காலத்தில் மலையேறிச் செல்வதற்கும், பம்பை ஆற்றில் நீராடுவதற்கும், உடலில் வலிமை தேவையாக உள்ளது. எனவே, பிரம்மச்சர்யம் அனுஷ்டிக்கின்றனர். எல்லா பக்தர்களும் நீலம், கறுப்பு உடையில் சமத்துவத்தை வளர்க்கின்றனர்.

விரதத்தில் கடுமை!

ஐயப்பனுக்கு மாலையணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் மனம், வாக்கு, செயல் ஆகிய மூன்றாலும் துாய்மையானவர்களாக இருக்க வேண்டும். இதனை 'திரிகரணசுத்தி' என்பர். அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி, பக்தியுடன் சரணம் சொல்ல வேண்டும். பாய் விரித்துப் படுக்க வேண்டும். தலையணை கூடாது.

பிரம்மச்சர்யம் கடைப்பிடிக்க வேண்டும். மலைப்பாதையில் பனிக்காலத்தில் செல்லவும், மன அடக்கத்திற்காகவும் இத்தகைய கடின பயிற்சிமுறைகள் பக்தர்களுக்கு விதிக்கப்பட்டன.

சாஸ்தா பாட்டு!

மலையாளத்தில் ஐயப்பன் வரலாற்றை 'சாஸ்தா பாட்டு' என்கின்றனர். இதில், மலையாளப் போர் வீரனாக ஐயப்பன் சித்தரிக்கப்படுகிறார். அவரது வெற்றிக்கு கறுப்பன், வாபர் துணை நின்றனர். பாண்டிச்சேவம், புலிச்சேவம், இளையரசுச்சேவம், வேளிச்சேவம், ஈழச்சேவம், பந்தளச்சேவம், வேளார்சேவம் என்னும் ஏழு சேவங்கள் இந்தப் பாடல்களில் உள்ளன. 'சேவம்' என்றால் 'சேவகம்'. பாண்டிய மன்னரிடம் ஐயப்பன் போர்வீரனாக பணி செய்ததாக கதை சொல்வர். உடுக்கை அடித்தபடியே பாடல்களைப் பாடுவர்.