ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உலக கோப்பை ஹாக்கி போட்டிகள் நடக்கிறது. இந்தியா, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, ஜெர்மனி உள்ளிட்ட 16 அணிகள் கலந்து கொள்கின்றன. தர வரிசையில் 5வது இடத்திலிருக்கும் இந்தியா தனது முதல் போட்டியில் தென்னாப்ரிக்காவை 5–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
3வது இடத்திலிருக்கும் பெல்ஜியம் அணி 2–1 என்ற கணக்கில் கனடாவை வீழ்த்தியது. இதுவரை இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதிய 19 ஆட்டத்தில் பெல்ஜியம் 13 போட்டியிலும், இந்தியா 5 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி எந்த அணிக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் டிராவில் முடிந்தது. இன்று நடந்த போட்டியில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. இரு அணிகளும் தொடக்கம் முதலே ஆவேசத்துடன் விளையடின. ஆட்டத்தின் தொடக்கத்தில் கிடைத்த 2 பெனல்டி கார்னர்களை பெல்ஜியம் அணி வீணடித்தது. அதற்கு பிறகு 39வது நிமிடத்தில் கிடைத்த பெனல்டி கார்னரை பெல்ஜியம் அணி வீரர் அலெக்சாண்டர் ஹென்ரிக் பந்தை பிளிக் செய்து முதல் கோலை அடித்தார். 3வது குவார்டரில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 37 வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் அடித்த பந்தை இந்திய கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ் அற்புதமாக தடுத்து ரசிகர்களின் கரகோசத்தை அள்ளினார்.
3வது குவார்டரின் 39வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்தார். 47வது நிமிடத்தில் இந்திய வீரர் சிம்ரன்ஜித் சிங் ஒரு கோல் அடித்து இந்திய அணிக்கு முன்னிலை ஏற்படுத்தினார். எப்படியும் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை சமன் செய்யும் முனைப்பில் பெல்ஜியமும், வெற்றி பெறும் எண்ணத்தில் இந்தியாவும் கடுமையாக போராடின. இந்தியா வெற்றி பெறும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். 55வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி தனது கோல் கீப்பரை மாற்றியது. 56வது நிமிடத்தில் பெல்ஜியம் வீரர் சைமன் ஒரு கோல் அடித்து இந்திய வெற்றி பெறும் என நினைத்ததை தவிடு பொடியாக்கினார். இதன் காரணமாக இந்த போட்டி 2–2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. தர வரிசையில் 3வது இடத்திலிருக்கும் பெல்ஜியத்திற்கு இந்தியா கடும் சவாலை தந்தது. இரண்டு அணிகளும் தலா ஒரு வெற்றி ஒரு டிரா செய்துள்ளது.
இதே பிரிவுக்கான மற்றொரு போட்டியில் கனடா, தென்னாப்ரிக்கா அணிகள் மோதின. ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் தென்னாப்ரிக்காவின் டுனி தனது அணிக்கான முதல் கோலை அடித்தார். ஒரு கோல் விழுந்த அடுத்த 2வது நிமிடத்தில் கனடாவின் டுப்பர் 45வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து சமன் செய்தார். அதற்கு பிறகு இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி டிராவில் முடிந்தது.