தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கும் விவசாயிகள்

பதிவு செய்த நாள் : 01 டிசம்பர் 2018

சத்­திஷ்­கர் மாநில விவ­சா­யி­கள் சட்­ட­சபை தேர்­தல் முடி­வு­கள் வரட்­டும் என்று நெல் விற்­பனை செய்­ய­மால் காத்­தி­ருக்­கின்­ற­னர். “உங்­கள் நெல்லை இப்­போது விற்­கா­தீர்­கள்” என்று சக விவ­சா­யி­க­ளுக்கு அறி­வுரை கூறு­கின்­றார் மகேஷ் சந்­தி­ர­கார். சத்­திஷ்­கர் மாநி­லம் துர்க் மாவட்­டத்­தில் உள்ள சந்­திக்­குரி என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி மகேஷ் சந்­தி­ர­கார். இவர் மேலும் சக விவ­சா­யி­க­ளி­டம், “இன்­னும் ஒரு மாதம் காத்­தி­ருங்­கள். காங்­கி­ரஸ் தேர்­த­லில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தால், உங்­க­ளுக்கு நெல்­லுக்கு கூடு­த­லாக குறைந்­த­பட்ச ஆத­ரவு விலை அதி­க­மாக கிடைக்­கும். விவ­சாய கடன்­க­ளும் தள்­ளு­படி செய்­யப்­ப­டும். ஏனெ­னில் காங்­கி­ரஸ் தேர்­தல் அறிக்­கை­யில் உறு­தி­ய­ளித்­துள்­ளது. காங்­கி­ரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைப்­ப­தற்கு அதிக வாய்ப்பு உள்­ளது” என்று மகேஷ் சந்­தி­ர­கார் கூறு­கின்­றார்.

சத்­திஷ்­கர் மாநில சட்­ட­சபை தேர்­தல் வாக்­குப்­ப­திவு நவம்­பர் ௧௨,௨௦ ஆகிய இரு கட்­டங்­க­ளாக நடந்து முடிந்­துள்­ளது. வாக்­கு­கள் வரும் ௧௧ ம் தேதி எண்­ணப்­பட்டு முடி­வு­கள் அறி­விக்­கப்­பட உள்­ளது. இந்த மாநி­லத்­தில் கடந்த ௧௫ வரு­டங்­க­ளாக பார­திய ஜனதா ஆட்சி நடை­பெ­று­கி­றது. முதல்­வ­ராக ராமன் சிங் உள்­ளார். இரண்­டாம் கட்ட வாக்­குப்­ப­திவு சென்ற ௨௦ம் தேதி நடை­பெற்­றது. இரண்­டாம் கட்ட வாக்­குப்­ப­திவு நடை­பெ­று­வ­தற்கு மூன்று நாட்­க­ளுக்கு முன், தனது சக விவ­சா­யி­க­ளுக்கு மகேஷ் சந்­தி­ர­சே­கர் மேற்­கண்­ட­வாறு அறி­வு­றுத்­தி­னார். அவர் தொடர்ந்து கூறு­கை­யில், நிலத்­தில் இன்­னும் ஈரப்­ப­தம் உள்­ளது. நாம் டிசம்­பர் ௧௧ம் தேதி வரை காத்­தி­ருக்­க­லாம். பா.ஜ.,மீண்­டும் ஆட்சி அமைத்­தா­லும் கூட, தற்­போது நெல்­லுக்கு கிடைக்­கும் விலை கிடைக்­கும்” என்­றும் கூறி­னார்.

விவ­சாயி மகேஷ்  சந்­தி­ர­காரை சுற்றி அமர்ந்­தி­ருந்த விவ­சா­யி­கள் அவர் கூறு­வதை ஆமோ­திக்­கின்­ற­னர். யாரும் எதிர் கேள்வி கேட்­க­வில்லை. காங்­கி­ரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்­கும். தங்­க­ளுக்கு அதிக விலை கிடைக்­கும் என்று சத்­திஷ்­கர் விவ­சா­யி­கள் நெல்லை அர­சி­டம் விற்­பனை செய்­யா­மல் காத்­தி­ருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன. சென்ற வரு­டத்­து­டன் ஒப்­பி­டு­கை­யில் நவம்­பர் ௧௯ம் தேதி வரை ௫௦ சத­வி­கித நெல் மட்­டும் விவ­சா­யி­கள் விற்­பனை செய்­துள்­ள­னர். இந்த பரு­வம் நவம்­பர் முதல் தேதி தொடங்­கி­ய­தில் இருந்து ௧௯ நாட்­க­ளில் ௪,௬௭,௪௩௮ டன் மட்­டுமே விவ­சா­யி­கள் அர­சி­டம் விற்­பனை செய்­துள்­ள­னர். சென்ற வரு­டம் இதே கால­கட்­டத்­தில் விவ­சா­யி­கள் ௧௦,௪௭,௪௫௪ டன் நெல் விற்­பனை செய்­தி­ருந்­த­னர்.  

விவ­சா­யி­கள் அர­சி­டம் நெல் விற்­பனை செய்ய தயங்­கு­வ­தற்கு கார­ணம், காங்­கி­ரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்­தால் பத்து நாட்­க­ளில் விவ­சாய கடன்­கள் தள்­ளு­படி செய்­யப்­ப­டும். நெல்­லுக்கு குறைந்­த­பட்ச ஆதார விலை­யாக குவிண்­டா­லுக்கு ரூ.௨,௫௦௦ கொடுக்­கப்­ப­டும் என்று காங்­கி­ரஸ் தலை­வர் ராகுல் காந்தி அறி­வித்­தார். நவம்­பர் ௧௩ம் தேதி மகா­ச­முந்த் என்ற இடத்­தில் நடை­பெற்ற பொதுக் கூட்­டத்­தில் ராகுல் காந்தி பேசும் போது, முத­ல­மைச்­சர் ராமன் சிங் விவ­சா­யி­க­ளுக்கு துரோ­கம் செய்து விட்­டார். அவர் நெல்­லுக்கு குறைந்­த­ பட்ச ஆதார விலை­யாக குவிண்­டா­லுக்கு ரூ.௨,௧௦௦ கொடுக்­கப்­ப­டும் என்று அளித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்­ற­வில்லை. அவர் நெல்­லுக்கு ரூ.௨,௧௦௦ கொடுப்­ப­தாக கூறி­னார். ஆனால் ரூ.௧,௭௫௦ மட்­டுமே கொடுத்­தார். மத்­திய அரசு ௧௫ பேருக்கு ரூ.௩ லட்­சத்து ௫௦ ஆயி­ரம் கோடி கடன் தள்­ளு­படி செய்­துள்­ளது. ஆனால் சத்­திஷ்­கர் மாநில விவ­சா­யி­க­ளின் கடனை தள்­ளு­படி செய்­ய­வில்லை.  இது நியா­யமா? என்று ராகுல் காந்தி கேட்­டார்.

ராகுல் காந்­தி­யின் பேச்சை நம்பி சத்­திஷ்­கர் மாநில விவ­சா­யி­கள் நெல்லை விற்­பனை செய்­யா­மல் தேர்­தல் முடி­வு­க­ளுக்­காக காத்­தி­ருக்­கின்­ற­னர். இது பற்றி சத்­திஷ்­கர் பிர­க­தி­சில் கிஷான் சங்­கா­தன் என்ற விவ­சாய சங்க தலை­வர் ராஜ் குமார் குப்தா கருத்து தெரி­விக்­கை­யில், “இந்த வாக்­கு­று­தியை காப்­பாற்­று­வது அவ்­வ­ளவு எளி­தல்ல. ஆட்சி அமைத்­த­வு­டன் புதிய குறைந்­த­பட்ச ஆதார விலையை அதி­க­ரித்து அறி­வித்­து­விட முடி­யாது. அதற்கு நீண்ட நடை­முறை உள்­ளது. அத்­து­டன் ஏற்­க­னவே அர­சி­டம் நெல்லை விற்­பனை செய்த விவ­சா­யி­க­ளுக்கு, புதிய விலை­யால் பலன் இல்லை. ஆனால் காங்­கி­ரஸ் ஆட்சி அமைத்­தால் வாக்­கு­று­தி­ய­ளித்­தது போல் ௧௦ நாட்­க­ளில் கடன் தள்­ளு­படி செய்ய முடி­யும். இத­னால் விவ­சா­யி­கள் நேர­டி­யாக பலன் அடை­வார்­கள். சத்­திஷ்­கர் மாநில விவ­சா­யி­கள் தொடக்க வேளாண்மை கூட்­டு­றவு சங்­கங்­க­ளி­டம் இருந்து கடன் வாங்­கு­கின்­ற­னர். விவ­சா­யி­க­ளின் நெல்­லை­யும் இந்த கூட்­டு­றவு சங்­கங்­கள் கொள்­மு­தல் செய்­கின்­றன. விவ­சா­யி­கள் விற்­பனை செய்­யும் நெல்­லுக்கு, அவர்­கள் வாங்­கிய கடனை கழித்­துக் கொண்டு மீதம் உள்ள பணத்தை கொடுக்­கின்­ற­னர். எனவே விவ­சா­யி­கள் நெல்லை விற்­கா­மல் வைத்­தி­ருந்­தால், கடன் தள்­ளு­ப­டி­யா­கும் போது கடனை திரும்ப செலுத்த தேவை­யில்லை. இத­னால் விற்­பனை செய்­யா­மல் வைத்­தி­ருப்­ப­தால் எவ்­வித நஷ்­ட­மும் இல்லை.” என்று விவ­சா­யி­க­ளி­டம் கூறி வரு­கின்­றோம் என்று ராஜ் குமார் குப்தா தெரி­வித்­தார்.

சத்­திஷ்­கர் மாநில மக்­கள் தொகை ௨ கோடியே ௫௫ லட்­சம். இதில் ௭௦ சத­வி­கி­தம் பேர் விவ­சா­யம் செய்­கின்­ற­னர். இவர்­க­ளில் ௪௬ சத­வி­கி­தம் பேர் சிறு, குறு விவ­சா­யி­கள். விவ­சா­யம் கடும் நெருக்­க­டி­யில் உள்­ளது. மாநில அர­சின் தக­வல்­படி, ௨௦­௧௫ ஏப்­ர­லில் இருந்து ௨௦­௧௭ அக்­டோ­பர் வரை­யி­லான கால­கட்­டத்­தில் ௧,௩௪௪ விவ­சா­யி­கள் தற்­கொலை செய்து கொண்­டுள்­ள­னர்.

துர்க், மகா­ச­முண்ட், ஜாங்­கிர்–­­சம்பா, ரெய்­கார்க் மாவட்­டத்­தைச் சேர்ந்த விவ­சா­யி­கள் உரம், விவ­சாய வேலைக்­கான கரு­வி­கள், தொழி­லா­ளர் கூலி, டீசல், மின்­கட்­ட­ணம் ஆகி­யவை அதி­க­ரித்­துக் கொண்டே உள்­ளன. அத்­து­டன் மத்­திய அர­சின் பயிர் காப்­பீடு திட்­ட­மான பிர­தான் மந்­திரி பீமா சுரக்சா யோஜ­னாவை அமல்­ப­டுத்த மாநில அரசு தவ­றி­விட்­டது என்று குற்­றம் சாட்­டு­கின்­ற­னர்.

மகா­ச­முண்ட் மாவட்­டத்­தில் உள்ள முங்­கா­சார் கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி சாந்த் ராம் துருவ், “கடந்த நான்கு வரு­டங்­க­ளாக மகா­ச­முண்ட் மாவட்­டத்­தில் வறட்சி போன்ற நிலை நீடிக்­கி­றது. மாநில அரசு எதை பற்­றி­யும் கவ­லைப்­ப­ட­வில்லை” என்று கூறு­கின்­றார்.

சத்­திஷ்­கர் முதல்­வர் ராமன் சிங் தொகு­தி­யான ராஜ்­நந்த்­கண்ட்­டில், ௨௦­௧­௩ம் வருட தேர்­த­லின் போது பா.ஜ.,அளித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்ற வலி­யு­றுத்தி, சென்ற வரு­டம் ௫௦ ஆயி­ரம் விவ­சா­யி­கள் பங்­கேற்ற மாபெ­ரும் பொதுக்­கூட்­டம் நடை­பெற்­றது. அதற்கு பிறகு விவ­சா­யி­கள் ராஜ்­நந்த்­கண்­டில் இருந்து தலை­ந­கர் ரெய்ப்­பூர் வரை வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற வலி­யு­றுத்தி கிஷான் சங்­கல்ப் யாத்­திரை செல்ல திட்­ட­மிட்டு இருந்­த­னர். “விவ­சா­யி­கள் பேர­ணி­யாக வந்­தால் ஏற்­ப­டும் விளை­வு­களை கண்டு பயந்து மாநில அரசு எட்டு மாவட்­டங்­க­ளில் ௧௪௪ தடை உத்­த­ரவு பிறப்­பித்­தது. முக்­கிய தலை­வர்­களை கைது செய்­தது என்று சுதேஷ் திகாம் என்ற விவ­சாய சங்க தலை­வர் கூறி­னார். இவ­ரை­யும் அரசு கைது செய்­தி­ருந்த்து.

கொதிப்­ப­டைந்து போயி­ருந்த விவ­சா­யி­களை சமா­தா­னப்­ப­டுத்த, ராமன்­சிங் அரசு நெல்­லுக்கு குறைந்­த­பட்ச கொள்­மு­தல் விலை­யு­டன் குவிண்­டா­லுக்கு கூடு­த­லாக ரூ.௩௦௦ போனஸ் அறி­வித்­தது. அர­சின் போனஸ் அறி­விப்பை பற்றி ஜாங்­கிர்–­­சம்பா மாவட்­டத்­தைச் சேர்ந்த முர்­டிலி கிரா­மத்­தைச் சேர்ந்த அனில் குமார் சோனா­வானி என்ற விவ­சாயி, “தேர்­த­லுக்கு இரண்டு  மாதம் இருக்­கும் போது ஏன் போனஸ் அறி­விக்­கின்­ற­னர் என்­பதை நாங்­கள் புரிந்து கொள்ள மாட்­டோம் என்று நினைக்­கின்­ற­னர். அவர்­கள் எங்­களை முட்­டாள்­கள் என்று கரு­து­கின்­ற­னர் என்று கோப­மாக கூறி­னார். இது தேர்­த­லுக்கா செய்­யும் தந்­தி­ரம். இதற்கு நாங்­கள் இரை­யாக மாட்­டோம் என்­றும் கூறி­னார்.

சத்­திஷ்­கர் மாநி­லத்­தில் நெல் விவ­சா­யி­கள் மட்­டும் பாதிக்­கப்­ப­ட­வில்லை. கொண்­டைக்­க­டலை பயி­ரி­டும் விவ­சா­யி­க­ளும், மாநில அரசு கொண்டை கட­லையை குறைந்த விலைக்கு கொள்­மு­தல் செய்­கி­றது என்­கின்­ற­னர். இது பற்றி திகாம் என்ற விவ­சாயி விளக்­கும் போது, “கொண்­டைக்­க­ட­லைக்கு மத்­திய அரசு குவிண்­டா­லுக்கு ரூ.௪,௪௦௦ என அறி­வித்­துள்­ளது. ஆனால் ரூ.௨,௯௦௦ முதல் ௩, ௪௦௦ வரை மட்­டுமே கொள்­மு­தல் செய்­யப்­ப­டு­கின்­றன. இதற்கு கார­ணம் வியா­பா­ரி­கள் பயன் பெறு­வ­தற்கே. ‘சுவா­தே­சித் சென்னா வித்­ரம் யோஜனா’ திட்­டத்­திற்­காக மாநில அரசு வியா­பா­ரி­க­ளி­டம் இருந்து கொண்­டைக்­க­ட­லையை குவிண்­டால் ரூ.௫,௫௦௦ என்ற விலைக்கு வாங்­கு­கி­றது. சத்­திஷ்­கர் மாநில அரசு வியா­பா­ரி­க­ளி­டம் இருந்து ௬௦ ஆயி­ரம் டன் கொண்­டைக்­க­டலை வாங்­கு­கின்­றது. வியா­பா­ரி­க­ளுக்கு கொடுக்­கும் அதே விலை ஏன் விவ­சா­யி­க­ளுக்கு கொடுக்க கூடாது? இது எல்­லாம் வியா­பா­ரி­கள் லாபம் அடை­யவே செய்­யப்­ப­டு­கி­றது என்­பதை விவ­சா­யி­கள் உணர்ந்­துள்­ள­னர் என்று திகாம் கூறி­னார். விவ­சாயி திகாம் மேலும் கூறு­கை­யில், வியா­பா­ரி­கள் பலன் அடைய வேண்­டும் என்­ப­தற்­காக மாநில அரசு தந்­தாரி பிராந்­தி­யத்­தில் உள்ள விவ­சா­யி­கள் வரு­டத்­திற்கு இரண்டு முறை நெல் பயி­ரி­டக்­கூ­டாது. அதற்கு பதி­லாக கொண்­டைக் கடலை பயி­ரிட வேண்­டும் என்று அச்­சு­றுத்­து­கி­றது. வரு­டத்­திற்கு இரண்டு முறை நெல் பயி­ரி­டும் விவ­சா­யி­க­ளுக்கு மின்­சா­ரம், நீர்­பா­சன வசதி நிறுத்­தப்­ப­டும் என்று அரசு எச்­ச­ரிக்­கி­றது. வியா­பா­ரி­கள் பலன் அடை­வ­தற்­காக கொண்­டைக்­க­டலை பயி­ரி­டு­மாறு கூறு­கின்­றது என்று தெரி­வித்­தார்.

ராமன் சிங் அரசு பிர­தான் மந்­திரி பீமா சுரக்சா யோஜன பயிர் காப்­பீடு திட்­டத்தை சரி­யாக அமல்­ப­டுத்­த­வில்லை என்று மகா­ச­முண்ட் பகுதி விவ­சா­யி­கள் கோபத்­தில் உள்­ள­னர். இந்த பகு­தி­யில் உள்ள ஜலாப் என்ற கிரா­மத்­தைச் சேர்ந்த் விவ­சாயி லக்­சு­ம­ணன் தாகுர் கூறு­கை­யில், “தனது நெல் பயிர் இழப்­பீடு பற்றி கணக்­கெ­டுக்­கும்­படி அதி­கா­ரி­களை ஒரு வார­மாக அணு­கி­னேன். அவர்­கள் இந்த காப்­பீடு திட்­டத்­தின் கீழ் நஷ்­ட­ஈடு பெறு­வ­தற்கு எவ்­வித அக்­க­றை­யும் செலுத்­த­வில்லை. ஆனால் அவர்­கள் என்­னி­டம் இருந்து காப்­பீடு பிரி­மி­யத்தை தவ­றாது பிடித்­தம் செய்­கின்­ற­னர். அவர்­கள் உதவி செய்ய முடி­யா­விட்­டால், ஏன் என்­னு­டைய பணத்தை எடுத்­துக் கொள்ள வேண்­டும். அடுத்து அமை­யும் அரசு விவ­சா­யி­கள் மீது அக்­கறை செலுத்­தும் அர­சாக இருக்­கும் என்று நம்­பு­கின்­றேன்” என்று கூறி­னார்.

மகா­ச­முந்த் பகுடா கிரா­மத்­தைச் சேர்ந்த விவ­சாயி சுரேஷ் மகா­கல், பா.ஜ., அர­சின் அனைத்து திட்­டங்­க­ளும் செலவு வைக்­கக்­கூ­டி­யதே. அவர்­கள் இல­வ­ச­மாக செல் போன் தரு­வ­தாக கூறு­கின்­ற­னர். ஆனால் யார் ரீசார்ச் செய்­வது. இல­வ­ச­மாக ஸ்கூட்­டர் தரு­வ­தாக கூறு­கின்­ற­னர். பெட்­ரோ­லுக்கு யார் செல­வ­ழிப்­பது. அவர்­கள் எனக்­காக வங்கி கணக்கு தொடங்­கி­னார்­கள். அந்த் கணக்கு செய­லில் வைக்க வேண்­டும் எனில் ஆயி­ரம் ரூபாய் இருப்பு வைக்க வேண்­டி­ய­துள்­ளது. அவர்­கள் குறைந்த விலை­யில் காஸ் சிலிண்­டர் கொடுத்­த­னர். புதிய சிலிண்­டர் வாங்க ஆயி­ரம் ரூபாய் செல­வ­ழிக்க வேண்­டி­ய­துள்­ளது. இதற்­கெல்­லாம் பணத்­திற்கு நான் எங்கே போவது. நான் விவ­சா­யத்­திற்­காக செய்த மூத­லீட்டை கூட திரும்ப வழங்க மாட்­டேன் என்­கி­றார்­கள். இந்த இல­வ­சங்­களை எல்­லாம் எனது ஓட்டை பெறு­வ­தற்­காக வழங்­கு­வ­தாக கூறு­கின்­ற­னர். இந்த மாதிரி திட்­டங்­க­ளுக்­காக ஏமாற மாட்­டோம். இந்த மாதிரி திட்­டங்­கள் எல்­லாம் என்­னைப் போன்­ற­வர்­கள் பய­ன­டை­வ­தற்­காக அல்ல. பெரிய தொழில் நிறு­வ­னங்­கள் பயன் அடை­வ­தற்கே” என்று கூறி­னார்.

சத்­திஷ்­கர் மாநில விவ­சா­யி­கள் ஆளும் பா.ஜ., அரசு மீதும், முதல்­வர் ராமன் சிங் மீதும் பல்­வேறு குற்­றச்­சாட்­டு­களை முன்­வைக்­கின்­ற­னர். நடந்து முடிந்­துள்ள சட்­ட­சபை தேர்­த­லில் இவர்­க­ளின் வாக்­கு­க­ளால் ஆட்சி மாற்­றம் ஏற்­ப­டுமா? அல்­லது இந்த நெருக்­க­டியை தாண்டி பார­திய ஜனதா மீண்­டும் ஆட்சி அமைக்­குமா அல்­லது காங்­கி­ரஸ் வெற்றி பெற்று ஆட்­சியை அமைக்­குமா என்­பது டிசம்­பர் ௧௧ம் தேதி தெரிந்து விடும். அத்­து­டன் அஜித் ஜோகி­யின் சத்­திஷ்­கர் ஜனதா காங்­கி­ரஸ் கட்­சி­யும், மாயா­வ­தி­யின் பகு­ஜன் சமாஜ் கட்­சி­யும் கூட்­டணி அமைத்து போட்­டி­யிட்­டன. அஜித் ஜோகி­யின் கூட்­டணி வாங்­கும் வாக்­கு­கள் பார­திய ஜன­தா­வின் வெற்­றியை பாதிக்­குமா அல்­லது காங்­கி­ரஸ் கட்­சி­யின் வெற்­றியை பாதிக்­குமா என்­ப­தும் தெரிந்து விடும். சத்­திஷ்­கர் மாநி­லத்­தில் அஜித் ஜோகி, மாயா­வ­திக்கு உள்ள செல்­வாக்கு பற்­றி­யும் தெரிந்­து­வி­டும்.

 நன்றி: ஸ்கோரல் டாட் இன்

இணை­ய­த­ளத்­தில் ஆகாஷ் பிஸ்த்.