![]() | ![]() |
விடுதலை போராட்ட வீரர் சுப்பிரமணிய சிவா!
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்களிப்பு என்பது பெருமைக்குரியது. மிகவும் சிறப்புக்குரியது. 18ம் நூற்றாண்டில் வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, மருது பாண்டியர்கள் தொடங்கி, பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, வாஞ்சிநாதன், நீலகண்ட பிரம்மச்சாரி, மடத்துப்பட்டி சிதம்பரம் பிள்ளை, வேம்பு அய்யர், வந்தேமாதரம் சுப்பிரமணிய அய்யர், சுப்பையா பிள்ளை,ஜெகன்னாத அய்யங்கார் என தொடர்ந்து பின்னாளில் ராஜாஜி, காமராஜர், சத்தியமூர்த்தி என பட்டியல் நீளும்.
கப்பலோட்டிய தமிழன் என மக்களால் போற்றப்பட்ட வ.உ.சி. என்ற வ.உ.சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய சகாவான தேசப்பற்றாளர் சுப்பிரமணிய சிவா என்ற வீரத் தியாகியை பற்றிய சில குறிப்புகளை இந்த வாரம் காண்போம்.
இன்றைய திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு நகரில் ராஜம் அய்யர் – நாகம்மாள் தம்பதியருக்கு 1884ம் ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி மகனாகப் பிறந்தவர்தான் சுப்பிரமணிய சிவம். இளம் வயதிலேயே இறைப்பற்றும், தேசபக்தியும் அவரிடம் குடிகொண்டிருந்தது. எதன் மீதும் நாட்டம் இன்றி வளர்ந்த சுப்பிரமணிய சிவம், நாட்டுப்பற்றில் தீவிரம் கொண்டவராக இருந்தார்.
தந்தையின் கவனிப்பின்றி தாய்வழி தாத்தாவின் பராமரிப்பில் வளர்ந்த சிவம், தமது பெயருக்கு தகுந்தாற்போல பெரும் சிவபக்தராகவே திகழ்ந்தார். மிகச்சிறிய வயதிலேயே ஆன்மிக ஈடுபாடு கொண்ட சிவம், நாள்தோறும் சிவபூஜை செய்வதை தம் கடமைகளில் ஒன்றாக கொண்டிருந்தார்.
மதுரை நகரில் ஆரம்பக் கல்வி பயின்ற சிவம், வறுமை காரணமாக குடும்பத்தோடு கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் நிலை உருவானது. சுப்பிரமணிய சிவத்தின் தந்தை ராஜம் அய்யர் வேலை எதுவும் இன்றி, ஊர் சுற்றித் திரிந்ததால், அவரால் குடும்பத்தை பராமரித்து, சிவத்தையும் படிக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டதால், ராஜம் அய்யரின் நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி திருவனந்தபுரம் சென்று அங்கு குடியேறினர்.
அந்த காலத்தில், கேரள பூமியில் ஏராளமான அன்ன சத்திரங்கள் ‘ஊட்டுப்புறை’ எனும் பெயரில் இருந்தன. மிகப் பெரிய செல்வந்தர்கள் மட்டுமல்லாது மன்னர்களும் இந்த ஊட்டுப்புறைகளை பெரிய அளவில் நடத்தி வந்தனர். அந்த வகையில் திருவனந்தபுரம் சமஸ்தானம் நடத்தி வந்த ஊட்டு புறையில் மூன்றுவேளை உணவு இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. வேளைக்கு சுமார் நான்காயிரம் பேர் வரை சாப்பிட்டு வந்துள்ளனர். அந்த பகுதியிலுள்ள ஏழைக் குடும்பங்கள் பல இந்த ‘ஊட்டுப்புறை’ சாப்பாட்டை நம்பியே வாழ்ந்துள்ளனர்.
திருவனந்தபுரம் வந்த சுப்பிரமணிய சிவத்தின் குடும்பத்தினருக்கும் ஆரம்பத்தில் இந்த ‘ஊட்டுப்புறை’ உணவுதான் வாழ்வாதரமாக விளங்கி உள்ளது. மிகுந்த சிரமத்திற்கிடையே உயர்நிலை கல்வியை திருவனந்தபுரத்தில் முடித்த சிவம், மிகுந்த இலக்கிய ஆர்வம் உள்ளவராகவும் திகழ்ந்துள்ளார். பள்ளியில் படிக்கும் போதே இலக்கிய மன்றச் செயலாளர் பொறுப்பேற்று பல்வேறு ஆன்றோர்களை, சமய சான்றோர்களை வரவழைத்து சொற்பொழிவாற்ற வைத்துள்ளார். அவரும் மிகச் சிறந்த பேச்சாளராக தம்மை வளர்த்துக் கொண்டார். உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போதே, 15வது வயதில் சிவத்திற்கு திருமணம் ஆனது. அடுத்த சில மாதங்களிலேயே சிவம் கோவை மாநகருக்கு உயர்நிலைக் கல்வி பயிலச் சென்றார். அங்கு சென்றது முதல் சிவத்தின் நடவடிக்கைகள் மாறிப்போனது. ஆன்மிகம், இலக்கியம் என்று மிகுந்த ஈடுபாட்டுடன் வளர்ந்த சிவம் தமது 16வது வயதில் இருந்து, அதற்கு நேர் எதிரான மனப்போக்கு உடையவராக மாறிப்போனார். பெரும் முரடனாக நடந்து கொண்டார். மீண்டும் திருவனந்தபுரம் வந்த சிவம், அங்கு மல்யுத்தம், சிலம்பம், குத்துச்சண்டை ஆகியவற்றில் பயிற்சி பெற்றதுடன், முரட்டுத் தனமான மீசையுடன், எவரையும் வம்புக்கு இழுத்து சண்டை போட்டு, அடிக்கடி போலீசுக்கு சென்ற சிவம், உறவினர் ஒருவர் உதவியுடன் போலீஸ் துறையிலேயே குமாஸ்தா வேலையில் சேர்ந்தார். ஆனால் அடுத்த நாளே அந்த வேலையை உதறி விட்டு, தேச விடுதலைப் போராட்டத்தில் தீவிரம் காட்டத் தொடங்கினார்.
‘தர்ம பரிபாலன சமாஜம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பல கூட்டங்களை நடத்திய சிவம், அக்கூட்டங்களில் அனல்பறக்க, கனல் தெறிக்க உரையாற்றுவார். அவரது உரை கேட்க மக்கள் கூட்டம் அலை மோதும். இதை கண்ட திருவனந்தபுரம் சமஸ்தானம், அவரை திருவனந்தபுரம் நகரை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டது. சிவமும் அதை மறுக்காமல் திருநெல்வேலி மாவட்டத்திற்கு சென்றார். தனியொரு மனிதராக, எந்த வசதியும் இன்றி கால்போன போக்கில் சென்ற சிவம் வழி நெடுக நெல்லை மாவட்டத்தின் பல பகுதிகளில் தேச விடுதலை குறித்த சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். மக்கள் அவருக்கு அமோக வரவேற்பளித்தனர்.
‘தென்னாட்டுத் திலகர்’ எனப் போற்றப்பட்ட வ.சி.சிதம்பரம் பிள்ளையை சிவம் சந்தித்த பிறகு, தேசபக்தி உணர்வு அவரிடம் கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது. இந்த இருபெரும் விடுதலை போராட்ட வீரர்கள் இணைந்து சொற்பொழிவாற்றி மக்களிடம் தேசபக்தி தொடர்பான எழுச்சியை ஏற்படுத்தினர்.
ஒருமுறை தூத்துக்குடிக்கு வருகை தந்தை மகாகவி பாரதியார், சுப்பிரமணிய சிவத்தின் பேச்சை கேட்டு மெய்சிலிர்த்துப் போனார். கூட்டம் முடிந்ததும் சிவத்தை கட்டிப்பிடித்துப் பாராட்டிய பாரதியார் ‘‘இளைஞனே, நீ மராட்டிய வீர சிவாஜி போல விளங்குகிறாய்’’ என்று புகழந்துரைத்துள்ளார். தேச விடுதலைப் போராட்டக் களத்தில் இருந்த சுப்பிரமணிய சிவத்திற்கு எதிராக பிரிட்டிஷ் அரசு பலமுறை வழக்குப்பதிவு செய்து கடுங்காவல் சிறைத் தண்டனைகளை வழங்கியது. சிறை மீண்ட சிவம், தாடிவளர்த்து துறவரம் பூண்டு இருந்த நிலையிலும் தமது போராட்ட உணர்வை தேசப்பற்றை கைவிடவில்லை.
‘ஞானபானு’, இந்திய தேசாந்திரி, பிரபஞ்ச மித்திரன்’ என்ற பெயர்களில் பத்திரிகைகளை நடத்தி அதில் தேசப்பற்று தொடர்பான கட்டுரைகளை செய்திகளை வெளியிட்டார். அண்ணல் காந்தி அடிகள், திலகர் உள்ளிட்ட தேசத்தலைவர்களின் நன்மதிப்பை பெற்றவர் சிவம். ஒரு கட்டத்தில், திருச்சி சிறையில், கடுங்காவல் தண்டணையை அனுபவித்த போதுதான் அவருக்கு காசநோயும், அதை தொடர்ந்து தொழு நோயும் தாக்கியது.
அந்த நிலையிலும், பாரத ஆஸ்ரமம் நிறுவுவது பாரதமாதாவுக்கு கோயில் கட்டுவது ஆகிய முயற்சியில் ஈடுபட்டார். பல ஊர்களுக்கு சென்று நிதி திரட்டினார். இதை அறிந்த சிவத்தின் நண்பர், சின்னமுத்து முதலியார் என்பவர் தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி என்ற ஊரின் அருகே, மக்களின் துணையோடு ஏழு ஏக்கர் நிலத்தை வாங்கி சிவத்திடம் நன்கொடையாக வழங்கி, அங்கே பாரதமாதவுக்கு கோயில் எழுப்பச் சொன்னார்.
அந்த இடத்தை பாரதபுரம் என பெயரிட்ட சிவம், அங்கே ‘பாரத ஆஸ்ரமம்’ நிறுவி தொண்டு புரிந்து வந்தார். அந்த காலகட்டத்தில் சேலம் வந்த விடுதலைப் போராட்ட வீரர் தேசபந்து சித்தரஞ்சன் தாஸை பாப்பாரப்பட்டிக்கு வரவழைத்து அவரது கையால் ‘பாரத மாதா கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார். எப்படியாவது இக்கோயிலை நிர்மாணித்துவிட வேண்டும் என விரும்பிய சிவம், நிதி வசூலிப்பதற்காக சென்னை, மதுரை, கோவை என பல ஊர்களுக்கு சென்றார். சொற்பொழிவாற்றினார். தாமே எழுதி தயாரித்த நாடகங்களை நடத்தினார். நாட்கள் செல்லச்செல்ல நோயின் தாக்கம் அதிகரித்து, 1925ம் ஆண்டு ஜூலை மாதம் அவர் நிர்மாணித்த பாப்பாரப்பட்டி பாரதபுரத்திலேயே சுப்பிரமணிய சிவம் காலமானார். அவரது உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.