ஆன்மிக கோயில்கள் : நினைத்ததை அருளும் குப்ரீ மலை மகேஸ்வரி! – ஜே.வி.நாதன்

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2018

டில்லியிலிருந்து சண்டிகர், அம்பாலா வழியாக சிம்லாவுக்கு சாலை மூலம் பயணித்தால் 390 கி.மீ. தூரம். டில்லியிலிருந்து கல்கா எனுமிடம் சென்று அங்கிருந்து மீட்டர்கேஜ் ரயில் வண்டியில் 90 கி.மீ. தூரம் அற்புதமான மலைப்பாதையில், குகைகளின் ஊடாகப் பயணித்து சிம்லாவை அடையலாம். சிம்லா, இமாசலப் பிரதேச மாநிலத்தின் தலைநகர். சுற்றுலாப் பயணிகளின் கனவு தேசம்!

சிம்லாவில் பாகூ பள்ளத்தாக்கு, மாஷோ மலைச்சிகரம், ஆப்பிள் தோட்டம், தேஷூ சிகரம் - என அனைத்தையும் குதிரையில் ஏறிச் சென்றுதான் பார்க்க முடியும்! கட்டணம் ரூ.380. குப்ரீ மலையிலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ள பாகூ பள்ளத்தாக்கு சென்று மகேஸ்வரி கோயிலைத் தரிசித்துத் திரும்ப குதிரைப் பயணக் கட்டணம் ரூ.250. நகராட்சிக்கு ரூ.5 தனியாகச் செலுத்த வேண்டும்!

சிம்லாவிலிருந்து 16 கி.மீ. தூரத்தில் குப்ரீ மலை. இங்கு, திரும்பிய இடமெல்லாம் குதிரைகள். மொத்தம் 1250 குதிரைகள் இங்கு பயணிகளைத் தங்கள் முதுகில் ஏற்றிக் கொண்டு மலையேறுகின்றன என்கிறார் நாம் சந்தித்த பஸ்வன் என்கிற குதிரைக்காரர். ஒரு நாளைக்கு ஒரு குதிரை சுமார் பத்து முறை மகேஸ்வரி கோயிலுக்குப் போய்த் திரும்பி விடுமாம்.

நாம் குதிரையில் ஏறினோம். குறுகலான பாதை.. குண்டு குண்டாய் கற்கள், சில இடங்களில் சேறு, சகதி. அந்தப் பாதையில் அநாயாசமாய் குதிரை ஏறியது. மேலே ஏறும்போது நம் உடம்பை முன்புறம் வளைக்கவும், சரிவில்  போகும்போது  உடம்பைப் பின்னுக்கு சாய்த்துக் கொள்ளவும் கிளாஸ் எடுத்தார் பஸ்வன். நம் கனமான உடம்பைக் கஷ்டப்பட்டுத் தூக்கிச் சென்ற குதிரையிடம் ‘‘இன்னிக்கு நெறய தீனி போடுறேன்டா என் ராஜா!’’ என்று குதிரையிடம் இந்தியில் பேசியபடியே லகானைப் பிடித்து நடத்தி வந்தார் அவர்.

பாகூ பள்ளத்தாக்கு, திருவிழாக் கோலத்தில் காட்சியளித்தது. வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர், ஆண்கள், பெண்கள் எனப் பலதரப்பட்டவர்கள் குதிரைச் சவாரி செய்து மகேஸ்வரி கோயில் இருந்த பகுதிக்கு வந்திருந்தனர்.

ஆங்காங்கு சாய், பிரெட் பாவுபாஜி மற்றும் வெஜிடபிள் சாண்ட்விச் விற்பனைக் கடைகள், ரூ. 20 கட்டணத்தில் இமாசலப் பிரதேச மாநிலத்தில் வாழும் மக்களின் பாரம்பரிய உடை அணிந்து கையில் துப்பாக்கி பிடித்து காட்டெருமையில் கம்பீரமாக அமர்ந்து போஸ் கொடுத்துப் புகைப்படம் எடுக்கும் இடங்கள், ரூ. 100 கட்டணத்தில் தூரத்து மலைச் சிகரங்களை டெலஸ்கோப் மூலம் பார்க்கும் இடம், கலைப் பொருட்கள் விற்கும் கடைகள் என்று பயணிகளை ஈர்க்கும் விஷயங்கள் ஏராளம்!

இவற்றைத் தாண்டி ஒரு மேட்டில் மகேஸ்வரி கோயில் இருக்கிறது. துர்க்கைதான் இங்கு மகேஸ்வரியாக வணங்கப்படுகிறாள். தனி சன்னிதிகளில் துர்க்கை, சிவன், ஆஞ்சநேயர் ஆகியோர் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள்.. கோயிலின் மேற்புறம் மொட்டை மாடி போலக் காட்சியளிக்கிறது. அதன் கைப்பிடிக் கட்டையில் நீளமான சரிகைத் துணி ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்த ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த யாத்ரீகர் சாரதா, ‘‘இங்கே இந்த ஜரிகைத் துணியைக் கட்டி  மகேஸ்வரி மாதாவைப் பிரார்த்தித்துக் கொண்டால், மனதில் நினைத்தது நிறைவேறும்!’’ என்று நம்மிடம் சொன்னார்.

கைப்பிடிச் சுவர் போன்ற கட்டையிலும் அங்குள்ள பைன் மரத்திலும் நீண்ட சரிகைத் துணியை, மகேஸ்வரிதேவியைப் பக்தியோடு வேண்டிக் கொண்டு  கட்டினால், மனதில் நினைத்தது கட்டாயம் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை!

மகேஸ்வரி ஆலயத்தை ஒட்டி நாக தேவதைக்கும் ஒரு ஆலயம் தனியாக இருக்கிறது.

நிறையக் குரங்குகள் இங்கு செல்பவரை வரவேற்கின்றன. உங்கள் கையில் உள்ள பையில் உணவுப்பொருளை என்னதான் மூடி வைத்திருந்தாலும் எக்ஸ்ரே கண் கொண்டு பார்த்து அதைக் குரங்குகள் ‘அபேஸ்’ செய்வது உறுதி!

குருக்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மகேஸ்வரி கோயிலில் துர்க்கைக்கு முன் வைக்கப்பட்டுள்ள தட்டில் பக்தர்கள் பணம் போட்டுவிட்டுப் போகிறார்கள். குறைந்தபட்சம் 10 ரூபாய்  நோட்டு. பக்தர்கள் காணிக்கைத் தட்டு நிரம்பி வழிந்தாலும் அர்ச்சகர் அலட்டிக் கொள்வதில்லை!

மா துர்க்கை மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டு காட்சி அளிக்கிறாள். ஆஞ்சநேயர் உடல் முழுவதும் செந்தூரச் சாந்துக் கோலத்தில் அபயக்கரம் காட்டி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

ஆஞ்சநேயர் சன்னிதியில் இருந்த குருக்கள் யாத்ரீகர்களிடம், ‘‘ஜானகி மாதாவிடம் ஆஞ்சநேயர் ‘அம்மா! நீங்க ஏன் உங்க நெற்றியில் குங்குமம் வெச்சிருக்கீங்க?’ என்று கேட்டாராம்.. அதற்கு சீதாப்பிராட்டி, ‘நான் குங்குமம் அணிந்தால் என் கணவருக்கு ஆயுள் கூடும்!’ என்று பதில் சொன்னார். இதைக் கேட்ட ஆஞ்சநேயர், ‘அப்படியா? ராமபிரானின் ஆயுள் நீடிக்க நான் உடம்பு முழுவதும் குங்குமத்தைப் பூசிக்கொள்ளப் போகிறேன். அவரோட ஆயுள் ரொம்ப ரொம்ப பெருகட்டும்!’ என்று கூறி அதன்படியே செந்தூரத்தை உடம்பு பூராவும் பூசிக் கொண்டதாகப் புராணக் குறிப்பு இருக்கு!’’ என்று கூறினார்.

தசராவின்போது இந்த மகேஸ்வரி கோயிலில் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுவதாகவும் ஆலய குருக்கள் குறிப்பிட்டார்.

திரும்பவும் குதிரையில் ஏறி, கரடுமுரடான கற்கள், சேறு, சகதிப் பாதையில் குப்ரீ வந்து சேர்ந்தபோது நமக்கு அது ஓர் அற்புதமான அனுபவமாக இருந்தது. குதிரைகளிலிருந்து இறங்கிய யாத்ரீகர்கள் முகங்களில் நிலவிய மகிழ்ச்சியும் திருப்தியும் அதை உறுதிப்படுத்தின!

------------* * *