திண்ணை – 02–12–18

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2018

நம்பினார் கெடுவதில்லை!

தன்னை விட உயர்ந்தவர்களிடம் நம்பிக்கை வைக்க வேண்டும். தன்னைவிட தாழ்ந்தவர்களிடம் எச்சரிக்கை உணர்வுடன் செயல்பட வேண்டும்.

அதாவது, ஆசிரியர், மாணவர் போன்று. மாணவர்கள் ஆசிரியர் மீது நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர் மாணவர்களிடம் எச்சரிக்கை உணர்வுடனேயே செயல்பட வேண்டும். அப்பொழுதுதான் மாணவனை சீர்படுத்த முடியும். அதுதான் மாணவனின் வெற்றிக்கு வழி வகுக்கும்.

ஆதிசங்கரர் காலடியில் பிறந்தார். இளம் வயதிலேயே ஞானம் அதிகம். ஆன்மிக ஈடுபாடு இந்து மதக் கொள்கைப் பிடிப்பில் தீவிரமாக இருந்தவர். இளம் வயதிலேயே துறவறம் பூண்ட ஞானி. அப்படிப்பட்ட மகான், கேரளாவின் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் ஆலயத்தில், அதன் ஆன்மிக சக்தியை பெருக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கான முயற்சிகளில் இறங்கினார்.

மைசூரில் உள்ள நந்தி மலையில் சாமுண்டீஸ்வரி ஆலயம் சென்றார். அம்மனை மனதார வேண்டினார். உள்ளம் உருக அவர் வேண்டியதை ஏற்று அம்மன் சங்கரருக்கு தரிசனம் அளித்தது. “சங்கரா... உனக்கு என்ன வேண்டும்...?” என்று அம்மன் கேட்க, “அன்னையே... அனைத்தையும் அறிந்த உனக்கு என் வேண்டுகோள் நான் சொல்லியா தெரிய வேண்டும்? நான் பிறந்த ஊரில் சோட்டாணிக்கரை பகவதி அம்மன் மக்களின் தீய சக்திகளை தன்னகத்தே நிறுத்தி, மக்களை பாதுகாக்கிறாள். அந்த பகவதி அன்னை சக்தி இதனால் குறைகிறது. அதனால் சர்வ சக்தி படைத்த சாமுண்டீஸ்வரியாகிய தாங்களே லட்சுமி, சரஸ்வதி அம்சத்துடன் இணைந்து முப்பெருந்தேவியாக வந்து சோட்டாணிக்கரை பகவதி அம்மனுடன் கலந்து புதிய சக்தியை கொடுத்து அருள வேண்டும்” என்று கேட்டார்.

அம்மனும், “குழந்தாய், உன் வேண்டுகோளை ஏற்றுக் கொள்கிறேன். நான் உன்னை பி் தொடர்ந்து வருவேன். நீ உன்னுடைய இலக்கை அடையும் வரை திரும்பிப் பார்க்காமல் முன்னே போக வேண்டும். என் மீது நம்பிக்கை இல்லாமல் திரும்பிப்பார்த்தால், நான் அந்த இடத்திலேயே அமர்ந்து விடுவேன்” என்று சொல்ல, சங்கரர், “அன்னையே, முன்னால் செல்லும் எனக்கு உங்கள் வருகையை புரிந்து கொள்ளும் வழி சொல்ல வேண்டும்” என்று கேட்டார்.

நீ முன்னால் நடந்து செல். அது உனக்கே புரியும் என்று சொன்ன அம்மன் சரஸ்வதி, லட்சுமி துணையுடன் சங்கரரை பின் தொடர்ந்தது. சங்கரர் நடக்க அம்மன் நடந்து வரும் காலடி ஓசை, கொலுசு சத்தமாக அவர் காதில் ஒலித்தது. ஒரு குறிப்பிட்ட இடம் வந்தவுடன் சங்கரருக்கு அம்மன் கொலுசு சத்தம் கேட்கவில்லை. அம்மன் நம்மை சோதிக்கிறதா... என்ற ஐயப்பாடு சங்கரருக்கு வந்தது.

நீண்ட நேரம் சத்தம் வராததால், அவசரப்பட்டு தனது திட சிந்தனையிலிருந்து விலகி தன் ஐயப்பாட்டை தெரிந்து கொள்ள திரும்பிப்பார்த்தார்.

அம்மன் முப்பெருந்தேவியாக காட்சி தந்து, “சங்கரா... என் மீது உனக்குள் நம்பிக்கை போய்விட்டது. நான் சொன்னபடி நீ திரும்பிப்பார்க்காமல் போயிருந்தால் நான் உன்னுடன் நீ கேட்டுக்கொண்டபடி சோட்டாணிக்கரை வந்திருப்பேன். ஆனால், இந்த கொல்லுாரில் நான் அமர்ந்து பரிபாலனம் செய்யும் வகையில் உனது செயல் அமைந்துவிட்டது என்று கூறி அந்த தலத்திலேயே ஐக்கியமாகிவிட்ட அம்மன் மூகாம்பிகையாக முப்பெருந்தேவியின் அம்சமாக பத்மாசனத்தில் அமர்ந்து காட்சியளித்தார்.” சங்கரரின் ஒரு உயர்ந்த முயற்சி வெற்றி பெறாமல் பாதிகிணறு தாண்டிய சூழ்நிலையாகிவிட்டது.

அம்மன் குறிப்பிட்டபடி நம்பிக்கையுடன் சங்கரர் சோட்டாணிக்கரைக்கு சென்றிருந்தால் அவரது எதிர்பார்ப்பு நிறைவேறியிருக்கும். எனவே பெரியவர்கள் சொல்வதை மதித்து நடக்க வேண்டும். சின்னவர்களை உஷார் படுத்தி எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும். அது தான் வெற்றிக்கு வழி வகுக்கும்.

யானைக்கும் அடி சறுக்கும்!

எந்த காலத்திலும் எந்த ஒரு மனிதனும் தன்னை உயர்வாக எண்ணி மமதை கொள்ளக்கூடாது. நம்மை விட வல்லவன் இருக்கிறான் என்ற முன்னெச்சரிக்கையுடன் இருந்தால் தான் நமக்கு எந்த பாதிப்பும் வராது. இதற்கு உதாரணமாக ஒரு விஷயம் சொல்கிறேன். ஒரு நாட்டில் அரசன் ஒருவன் தன்னைப் பெரிய அறிவாளி, தன்னை விட யாரும் பெரிய ஆள் கிடையாது என்று நினைத்துக்கொண்டிருந்தான். அப்படிப்பட்ட மன்னனுக்கு ஒரு நாள் திடீர் என்று ஒரு சந்தேகம் வந்தது. பெரிய அறிவாளிகள் கூட சில நேரம் ஏமாந்து போய் விடுகிறார்களே.. அது எப்படி... என்று சந்தேகப்பட்டான்.

அவனோட சந்தேகத்தை யாராலும் தீர்த்து வைக்க முடியவில்லை. தன் சந்தேகத்தை தீர்த்து வைப்பவர்களுக்கு தன் ராஜ்ஜியத்தில் பாதியை கொடுப்பதாக அறிவித்தார். மறுநாளே ஒரு வாலிபன் தன்னிடம் வந்து அவருடன் தனிமையில் பேச விரும்புவதாக கூறினான். அரசனும் அவனை தனிமையில் சந்தித்தான். அப்போது அந்த வாலிபன் மன்னனிடம், “அரசே... நான் உங்கள் அண்டை நாட்டு மன்னனின் அந்தரங்க செயலாளன். இது வரை நீங்கள் அவரை வெல்ல முயன்றதெல்லாம் முடியாமல் போய்விட்டது. நாளை எங்கள் ராஜா காட்டின் மத்தியில் உள்ள கோயிலுக்கு பூஜை செய்ய தனியாக வருவார். அப்போது அவரை நீங்கள் பிடித்துக் கொள்ளலாம். அந்த மன்னர் எந்த தப்பும் செய்யாத என் தம்பியை அநியாயமாக கொன்றுவிட்டார். அதற்குப்பதிலாகத்தான் பழிக்கு பழி வாங்க இந்த விஷயத்தை உங்களிடம் சொல்கிறேன் என்று சொல்ல, மறுநாள் அந்த ராஜா முன்தினம் சந்தித்த அந்த வாலிபனுடன் காட்டிற்குப் போனான். ஆனால், வழியில் நாலைந்து பேர் ராஜாவை சூழ்ந்துக்கொண்டார்கள். ராஜா பதறிப்போய், “இதென்ன துரோகம்...” என்று வாலிபனிடம் கேட்டார். அப்போது அந்த வாலிபன் சொன்னான், “மன்னிக்க வேண்டும் மகாராஜா. நான் உங்கள் குடிமகன் தான். மாபெரும் மேதைகள் கூட இப்படித்தான் ஏமாந்து போவார்கள். நீங்கள் பெரிய அறிவாளிதான், முன்பின் தெரியாத என் பேச்சைக்கேட்டு இப்படி பாதுகாப்பின்றி காட்டிற்கு வந்திருக்கிறீர்களே... அறிவாளிகள் சில சமயம் இப்படித்தான் ஏமாந்து போகிறார்கள்” என்று சொல்ல, மன்னருக்கு தன் சந்தேகம் தீர்ந்துவிட்டாலும், நடுக்காட்டில் மாட்டிக்கொண்டோமே என்று ஒரு பக்கம் பயமாகிவிட்டது. அதை சமாளிக்க அவர் உடனே, “நீ உண்மையிலேயே புத்திசாலி. நீ என் சந்தேகத்தை தீர்த்து வைத்துவிட்டாய். உனக்கு என் ராஜ்ஜியத்தில் பாதியை கொடுக்கிறேன். வா அரண்மனைக்கு போகலாம்” என்று அவனோடு இருந்த ஆட்களையும் கூட்டிக்கொண்டு நாட்டுக்கு திரும்பி வந்து, அவனுக்கு தன் மகளை திருமணம் செய்துவைத்து, நாட்டில் பாதியை கொடுத்தான். இப்படித்தான் நாட்டில், சில பேர் தன்னை உயர்வாக நினைத்துக்கொண்டு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொள்கிறார்கள். இதற்குப் பெயர்தான் ஓவர் கான்பிடன்ஸ். அது நம் வெற்றிக்கு தடைக்கல்லாக அமைந்துவிடக்கூடாது. புத்திசாலித்தனமும் வேண்டும். அதே சமயம் நிதானமும் வேண்டும். இதை மனதில் வைத்துக்கொண்டு நாம் எந்த காரியத்தில் ஈடுபட்டாலும் அது நம் வெற்றிக்கு வழிவகுக்கும்.

– ஹெச். வசந்தகுமார்