கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 40

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2018வீட்டை வாங்கி பார், மெட்டை போட்டு பார்!

மகாதேவனின் வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்திய  அந்த நிகழ்ச்சி என்ன? பல வாய்ப்புகள் பெற்று வந்தாலும், தெரு வீட்டில் வசித்துக்கொண்டிருந்த மகாதேவனுக்கு சொந்தமாக நல்ல வீடு வாங்கும் நாள் வந்தது. சென்னைத் தியாகராய நகரில் கனவான்கள் வசித்த ஜி.என். செட்டி சாலையில் அவருக்குத் தனி பங்களா கிடைத்தது,  அதுவும் ஒரு பெரிய நீதிபதி வசித்த வீடு!

திருவல்லிக்கேணியின் நெரிசலிலே, தேவராஜ முதலி தெருவிலிருந்த தனது வீட்டிலிருந்து, விஸ்தாரமான மனையில் மாமரங்கள் அடர்ந்து, அழகாகக் கொலுவிருந்த பெரிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார் மகாதேவன்.

ஆகஸ்ட் 28, 1958 அன்று  ஓமங்கள் வளர்க்கப்பட்டு, கிரகப்பிரவேச விழா கோலாகலமாக நடந்தது. மகாதேவனின் நெருங்கிய நண்பரான பாடலாசிரியர் மருதகாசி, மகாதேவனின் புதுவீட்டிற்கான கோ -பூஜை நடந்தேறுவதற்கு, ஒரு பசுவை தானமாக அனுப்பினார். மருதகாசியின் தம்பி முத்தையன், அதிகாலையில்  அந்த ஜெர்ஸி பசுவை  மகாதேவனின் புதுவீட்டில் கொண்டுபோய் சேர்த்தார். மகாதேவனின் வாழ்க்கை நன்றாக அமையவேண்டும் என்று மருதகாசி மனதார விரும்பியதால், அருமையான பசுவை அவருக்கு அளித்தார். ‘‘இருவருக்கும் இருந்த நட்பு ஆழமானது. மரியாதை கலந்த அன்பு அது. ஒருவருக்கு இன்னொருவர் எந்த உதவி வேண்டுமானாலும் செய்யக்கூடிய நட்பு அது’’ முத்தையன் என்றார்.

மகாதேவனுக்கு நாயன இசையென்றால் உயிர் ஆயிற்றே. அன்றைக்குப் பிரத்யேகமாக, மகாதேவனின் இன்னொரு நெருங்கிய நண்பரான காருக்குறிச்சி அருணாசலம், மங்கல இசை வழங்கினார்.  நாயன  இசையின் ஜாலங்களைப் புரிந்துகொண்டு வாயார வாழ்த்தி ரசிக்கும் இசைக்கலைஞர்கள் மத்தியில் தன்னுடைய கலையின் நேர்த்தியைக் காட்டாமல் விடுவாரா?

மகாதேவனின் பொற்கால வாழ்க்கையின் முப்பது வருடங்களைக் கண்ட வீடு அது. இரண்டு மனைவிகளுடன் அவருடைய ஐந்து குழந்தைகள் வளர்ந்த வீடு அது. அனைத்து உறவினர்களும் கூடி குதூகலித்த வீடு அது. எத்தனைத் தயாரிப்பாளர்கள் தேடி வந்த விலாசம்! எத்தனை இசைக் கலைஞர்கள் சங்கமித்த இடம்!  

‘மாமா’ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட மகாதேவனின் விசாலமான வீடு நகரத்தின் மையப்பகுதியில் இருந்ததைக் கருதி, இசைக் கலைஞர்கள் சங்கம் (சினி மியூசிஷியன்ஸ் யூனியன்), விடுமுறை நாட்களில் அங்கே கூடும்.  இன்னொரு பக்கமாக பையன்கள் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருப்பார்கள்! மகாதேவன் உயிரோடிருந்தபோதே, இந்த வீட்டிலிலிருந்து விலக வேண்டிய  சூழ்நிலை வந்துவிட்டது. துண்டை உதறிவிட்டுத் திரும்பிப்பார்க்காமல் அவர் விலகிய வீடு அது. இந்த 2018ல், இவையெல்லாம் காலவெள்ளத்தில் கரைந்துபோன காட்சிகள்!

புதுவீட்டிற்கான ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்த நிலையில், மகாதேவன் சந்தோஷமாக இசையமைத்த படங்களில் ஒன்று, ‘பொம்மை கல்யாணம்’(1958). தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாரான இந்தப் படத்திற்கு இன்னொரு முக்கியமான சிறப்பு உண்டு. ‘பொம்மல பெள்ளி’ என்ற அதன் தெலுங்குப்பிரதியிலும் சிவாஜி கணேசன்தான் கதாநாயகனாக நடித்தார்! அவர் தெலுங்கில் வசனம் பேசி நடித்தார். மண்வாசனையைக் கருதி, தெலுங்கு நடிகர் ஜக்கையா அவருக்குக் குரல் கொடுத்தார்.  

‘பொம்மை கல்யாணம்’, பழம்பெரும் இயக்குநரான சாந்தாராமின் ‘தஹேஜ்’ (1950 - ‘வரதட்சிணை’)  படத்தைத் தழுவி எடுக்கப்பட்டது. சில காட்சிகளில் ஈயடிச்சான் காப்பி என்றுகூடச் சொல்லலாம். ஆனால் உச்சக்கட்ட காட்சியைத் தலைகீழாக மாற்றிவிட்டார்கள். அரக்கி போன்ற மாமியாரால் கொடுமைப்படுத்தப்பட்ட மருமகளும், அவளுடன் மகனும் இந்தி மூலத்தில் இறந்துபோகிறார்கள். தமிழிலும் தெலுங்கிலும், மாமியார் மரிக்கிறாள். ‘இன்பமே பொங்குமே’ என்ற வெற்றிப் பாடலை நாயகனும் நாயகியும் மீண்டும் பாடுகிறார்கள்!

 படத்தைத் தயாரித்து இயக்கிய அருணா பிலிம்ஸ் உரிமையாளர் திரு. ஆர். எம். கிருஷ்ணசாமி, மகாதேவனைவிட நான்கு வயது மூத்தவர். ஒளிப்பதிவாளர். மகாதேவனைப் போல் பழம்பெரும் இயக்குநர் பிரகாஷிடமும் மாடர்ன் தியேட்டர்ஸிலும் பணியாற்றியவர். கிருஷ்ணசாமியின் பாகஸ்தரான ஒலிப்பதிவாளர் ராதாகிருஷ்ணன், 1936லேயே திரை உலகில் பிரவேசித்து 1942ல் சவுண்டு இன்ஜினியர் ஆனவர். ஒளியும்- ஒலியும் சேர்ந்து தொடங்கிய அருணா பிலிம்ஸின் படவரிசையில் முதன்முறையாக மகாதேவன் இணைந்திருந்தார்.

‘பொம்மை கல்யாணம்’ படத்தில், கதாநாயகி ஜமுனாவைத் தவிர, நாகையா, எஸ்.வி. ரங்காராவ், சாந்தகுமாரி, ருஷ்யேந்திரமணி போன்ற முக்கிய நடிகர்கள் தெலுங்கு சினிமாவிலும் பிரபலமானவர்கள்தான். ‘பொம்மை கல்யாணம்’, தோல்வி அடைந்தாலும், ‘பொம்மல பெள்ளி’ ஓரளவுக்கு வெற்றி அடைந்தது. இது மகாதேவனுக்கு இன்னொரு முறையில் உதவிற்று. ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்ற படத்தின் தெலுங்குப் பிரதியான ‘தொங்கல் உன்னாரு ஜாக்கிரதா’ அவர் இசையமைத்த முதல் தெலுங்குப் படம் என்றாலும், ஏதோ காரணத்தால் அவரது பெயர் தெலுங்குப் பட டைட்டிலில் இடம்பெறவில்லை! ‘பொம்மல பெள்ளி’யில் கே.வி.மகாதேவனின் பெயர் நன்றாக இடம்பெற்றது. மகாதேவனின்  பெயரைத் தாங்கிவந்த முதல் தெலுங்கு படம் என்ற முறையில்,  அவருடைய மிக நீண்ட தெலுங்கு திரைப்பட அத்தியாயத்தில், இந்தப் படம் ஒரு சிறப்பான இடம் பெறுகிறது.

‘பொம்மை கல்யாண’த்தில் சில மறக்க முடியாத பாடல்கள் அமைந்தன. அவற்றில் முக்கியமானது, ‘அன்பே !  நீ அங்கே, நான் இங்கே வாழ்ந்தால், இன்பம் காண்பதும் எங்கே, அன்பே’. மருதகாசியின் வரிகளை ஏ.எம்.ராஜாவும் ஜிக்கியும் சிறப்பாகப் பாடினார்கள். ‘அன்பே என்ற சொல்லுக்குப் பல்லவியின் தொடக்கத்திலும் இறுதியிலும் அமைந்த வேறுபட்ட அழுத்தங்களும் உணர்வின் உருக்கங்களும் அற்புதம். ஓசைச் சுவைக்காக எங்கெங்கு வரிகளைப் பிரித்துக்கொள்ள வேண்டும், அடுத்து வரும் சொல்லை எங்கே உணர்வுபூர்வமாகக் கொண்டு கூட்ட வேண்டும் என்பதெல்லாம் மகாதேவனுடைய பழுத்த இசை அறிவுக்குப் பக்குவமாய் வந்த பண்புகள்.

தன்னுடைய மணவாழ்வை நினைத்து, ‘வசந்த காலம் இத்தனைதானா?’ என்று கதாநாயகி கண்ணீர் வடிக்கிறாள். சோகத்தை நேரடியாக சொல்லாமல்,  இலக்கிய வரிகளில் பன்னீராய் தெளிக்கிறார் உடுமலை நாராயண கவி. ஜிக்கியின் குளிர்ச்சியான குரலில் ஒரு பிரமிக்கவைக்கும் நாதப்படமாகப் பாடலை நமக்கு அளிக்கிறார் மகாதேவன். பாகேஸ்ரி ராகம் தொடங்கி பற்பல பாகான இனிமைகள் வாகாகவும் உணர்ச்சி வெளிப்பாட்டிற்குத் தோதாகவும் அமைகின்றன. வாத்திய இசையின் பக்கமேளம், இறகைத் தாங்குவதுபோல் மென்மையாகப் பாடலை  ஏந்துகிறது. ஆனால்,  ‘பண்பாடும் குயிலின் மிடறு மூடிப்போனதே, பசுமை தரும் தளிர்கள் வாடி வதங்கலானதே’  என்ற வரிகள், ஜிக்கிக்கு அறச்சொல்லாக அமைந்துவிட்டதோ என்று கருத இடம் உள்ளது. ‘பொம்மை கல்யாண’த்தில் ஐந்து பாடல்களை ஜிக்கி பாடினார். பி. சுசீலா ஒரே ஒரு பாடல்தான் பாடினார். அடுத்த திருப்பத்தில், ஜிக்கியின் வீழ்ச்சியும் சுசீலாவின் எழுச்சியும் தொடங்கிவிட்டன. ஆனால், மகாதேவனைப்பொறுத்தவரை அவர் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் முன்னேற்ற கதியிலேயே அமைந்தன.

(தொடரும்)