அறுவை சிகிச்சை குழந்தைக்கு ஜாதகம் மாறுமா? -– ஜோதிடர் டாக்டர் என்.ஞானரதம்

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2018

ஆயிரம் செல்வங்கள் இருப்பினும், அவையெல்லாம் குழந்தைச் செல்வத்துக்கு ஈடாகாது. குழந்தை இல்லாதவர்கள் பிறவிப் பேற்றையே இழந்தவர்களாகிறார்கள். இப்படிப்பட்ட அரிய செல்வமான குழந்தைச் செல்வத்தின் அருமையை உணர்ந்தவர்களுக்கு குழந்தைப் பிறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உருவாகின்றன. அதில் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கு ஜாதகம் மாறுமோ என்ற சந்தேகம் பலருக்கு இருக்கும். அறுவை சிகிச்சை செய்வது ஆபத்தா எனவும், மற்றும் இதற்கும் ஜோதிடத்திற்கும் என்ன தொடர்பு இருக்கும் என்ற சந்தேகமும் மக்களுக்கு தோன்றுகின்றன. மேலும், கால தேச வர்த்தமான ஜாதி மத நிற பேத  யுக்தி ஸ்ருதி அனுபவம்தான் ஜோதிடம் என்ற உண்மையை மறுக்க முடியாது. அக்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து குழந்தைகள் முதல் பத்து மற்றும் பன்னிரென்டு குழந்தைகள் பிறக்கிறார்கள். ஆனால், தற்காலத்தில் ஒவ்வொரு வீட்டிலும் மூன்று குழந்தைகளுக்கு மிகாமல் பெற்றுக் கொள்கின்றனர். அக்குழந்தையும் நன்கு சீரும் சிறப்புமாக வாழ வேண்டி நல்ல ஜாதகம் அமையப் பெற ஜோதிடர்களை அணுகுகிறார்கள்.

குழந்தைப்பேறு வகைகள்!

தற்காலத்தில் குழந்தைப் பிறப்பை சுகப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தை, அறுவை சிகிச்சை மூலம் (சிசெரியன்) பிறக்கும், சோதனைக் குழாய் மூலம் பிறக்கும் குழந்தை என மூன்று வகையாக பிரிக்கலாம். பொதுவாக, மக்கள் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தைக்கும் சோதனைக் குழாய் மூலம் பிறக்கும் குழந்தைக்கும் ஜாதகப் பலன் மாறுமா, அல்லது ஜாதகமே மாறுமா எனப் பலர் ஐயம் கொண்டுள்ளனர். ஆனால், இது உண்மை இல்லை என்றே ஆணித்தரமாக சொல்லலாம்,  குழந்தை பிறந்த இடம், பிறந்த தேதி, பிறந்த நேரத்தைக் கொண்டே ஜாதகம் கணிக்கப்படுகிறது. அவர்கள் எப்படி பிறந்தார்கள் என்பது தேவையில்லை. அவரவரது ஜாதக யோகப் பலன்களையும் மற்றும் திசா புத்திப் பலன்களையும் வைத்தே ஜாதகப் பலன்கள் நிர்ணயிக்கப்படுகின்றன.

பிறந்த நேரத்தை எப்படி கண்டுபிடிப்பது?

ஜாதகம் கணிக்க, பிறந்த நேரத்தைத்தான் கணக்கில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறந்த நேரத்தை குறிக்கவும் பலர் குழம்பி கொண்டு வருகிறார்கள். பிறக்கும் குழந்தை முழுவதுமாக வெளிவந்த நேரத்தைக் கணக்கில் கொள்ள வேண்டுமா அல்லது தலை வெளியில் வந்த நேரமா அல்லது தொப்புள்கொடியை அறுக்கும் நேரமா எனப் பலர் குழம்புகிறார்கள். இதில் எந்த நேரத்தைக் கொண்டு ஜாதகம் கணிக்க வேண்டும் என்றால் குழந்தை முதலில் உள்ளிழுக்கும் சுவாச நேரத்தை வைத்துத்தான் ஜாதகம் கணிக்க வேண்டும். காரணம் என்னவென்றால், ஒரு மனிதனின் தீர்க்காயுள் என்பது 120 ஆண்டுகளைக் குறிக்கும். 120 ஆண்டுகளுக்கும் 9 கிரகங்களை வைத்து 9 தசைகளாக பிரிக்கின்றனர். ஒவ்வொரு திசையிலும் ஒன்பது புத்திகள் இருக்கின்றன. ஒவ்வொரு புத்தியிலும் ஒன்பது அந்தரம் இருக்கிறது. ஒவ்வொரு அந்தரத்திலும் ஒன்பது அந்தாரந்தரம் உள்ளன. பின்பு சூட்சுமம் பிராணம் என முடிகிறது. இந்த பிராணத்தைச் சார்ந்துதான் பிறந்த தசை இருப்பு கண்டுபிடிக்கப்படுகிறது.

அறுவை சிகிச்சை எதனால்?

ஜாதகத்தில் உள்ள கிரகங்களைச் சார்ந்தே அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்படுகிறது. இதில் 5ம் இடத்தில் உள்ள கிரகமும், அதன் அதிபதியும், புத்திகாரகனான  சனியும், அவரது பார்வையும், உடல்காரகனான சந்திரனும் இதில் முக்கிய இடம் பெறுகின்றன, மேலும், 5ம் இடமும் படுக்கை ஸ்தானமான 12ம் இடமும் 10ம் இடமான கர்ம ஸ்தானமானமும் கூட அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற சம்பந்தப்படுகின்றன. இந்த ஸ்தானங்களையும் ஸ்தானாதிபதிகளையும் நன்கு ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

குழந்தை பிறப்பில் அறுவை சிகிச்சையால்

எற்படும் பயன்கள்!

பிறந்த பிறகு குழந்தைகளுக்கு இந்த ஜாதகம் போட்டு பலன் சொல்லும் போது பல குழந்தைளுக்கு பாலாரிஷ்டம், செவ்வாய் தோஷம் என ஜாதகத்தில் ஏற்படுகிறது. இதனைத் தடுக்க, நாம் நிர்ணயிக்கும் நேரத்தில் குழந்தை பெறுவதற்கு இந்த அறுவை சிகிச்சை உதவுகிறது. ஆதலால், முன்னெச்சரிக்கையாக பிறக்கும் முன்பே போய் ஜாதக அமைப்பைப் பெற நல்ல நேரம் தேவையாகிறது. அப்பெண் கருவுற்றிருக்கும்போது அவரின் ஜாதகத்தில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறக்க கிரக நிலைகள் நன்கு அமைந்துள்ளதா என முதலில் பார்க்க வேண்டும். பின்பு தாய்க்கும் குழந்தைக்கும் பிரச்னை ஏற்படாமல் இருக்க அப்பெண்ணின் ஜாதகப்படி நல்ல நட்சத்திரத்தையும் நல்ல நாள், நல்ல நேரம் போன்றவற்றையும்  நன்கு ஆராய்ந்து அறுவை சிகிச்சை வெற்றி பெறுமா என்பதையும் அந்த நேரப்படி ஜாதகம் யோகமாக இருக்குமா எனவும் பார்த்து அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

வாசகர்களின் கவனத்திற்கு...

நேரம் பார்த்து பிள்ளைகளை பெற்றெடுப்பதால் செவ்வாய் தோஷம், பாலாரிஷ்டம், ராகு, கேது தோஷம் போன்றவற்றை தடுக்க இயலும். இதற்கும் அவர்களின் ஜாதக அமைப்பு இருந்தால் தான் இவ்வாறு செய்ய இயலும். பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக அமைய இது பயன்படுகிறது. அறுவை சிகிச்சை செய்யலாமா, வேண்டாமா என்ற அமைப்பு உள்ளதா என்பதையும் அந்த ஜாதகத்தை பார்த்து முடிவெடுத்துக் கொள்ளலாம். இதனால் காலவிரயத்தையும் பணவிரயத்தையும் தவிர்க்கலாம்.

* * *