என்னோட மைனஸ் பிளஸ் ஆயிடுச்சு! – காயத்ரி

பதிவு செய்த நாள் : 02 டிசம்பர் 2018

* ‘போதும் பொண்ணு’வாகவும், கயலாகவும் ‘‘பேரழகி’’யில் (கலர்ஸ் தமிழ்) பார்வையாளர்களின் இதயத்தில் இடம்பிடித்திருக்கிறார் காயத்ரி.

* ஸ்ரீ காயத்ரி ராஜா என்பது அவருடைய முழு பெயர்.

* சென்னை அவருக்கு பூர்வீகம்.

* அப்பா ஆட்டோ ஓட்டுகிறார். அம்மா இறந்து விட்டார்.

* டாக்டர். எம்.ஜி.ஆர். ஜானகி கலை – அறிவியல் மகளிர் கல்லூரியில் பேச்சலர் ஆப் மேத்தமெட்டிக்ஸ் படித்து முடித்திருக்கிறார்.

* கறுப்பு நிறம் கொண்டவர். நிற வேற்றுமை காரணத்தாலேயே அவர் சினிமாவில் பலமுறை நிராகரிக்கப்பட்டிருக்கிறார். அப்படி நான்கு ஆண்டுகளாக போராடியிருக்கிறார்.

* கடுமையான போராட்டத்துக்கிடையே ‘‘இனிமே இப்படித்தான்’’  (அஷ்னாவின் தோழி), ‘‘மருது’’ (சூரி ஜோடி),  ‘‘மகளிர் மட்டும்’’, ‘‘மெட்ராஸ்’’ (‘எங்க ஊரு மெட்ராஸ்’ பாடல் காட்சியில் மட்டும் தோன்றுவார்) ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

* ‘‘வாணி ராணி’’யில் ஒரு சின்ன கேரக்டரில் அறிமுகமானார்.

* பெற்றோர் அவருடைய முயற்சிக்கும் ஆர்வத்துக்கும் மிகவும் உறுதுணையாக இருந்திருக்கிறார்கள். ஆனால், அவரிடமிருந்து எதையும் அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

* கல்லூரி நாடகங்களில் நடித்திருக்கிறது இந்த கறுப்பு நிலா.

* சினிமா வாய்ப்பு சரியாக கிடைக்காமல், சி.ஏ. படிக்கலாம் என்று அவர் தயாராகிக் கொண்டிருக்கும் போது வந்ததுதான் ‘‘பேரழகி’’ வாய்ப்பு.

* ‘‘நான் எதை மைனஸ்ஸா நினைச்சேனோ, அதுவே எனக்கு பிளஸ்ஸா ஆயிடுச்சு!’’ என்கிறார் உணர்ச்சிப்பெருக்குடன்.

* ‘‘பேரழகி’’ கதையும் தனது நிஜவாழ்க்கையும் ஓரளவுக்கு ஒத்துப் போகிறதாம்!

* சினிமாவில் நடித்து யாராலும் அடையாளம் காணப்படாமல் இருந்த காயத்ரி, சீரியலில் நடிக்க ஆரம்பித்ததிலிருந்து எல்லோராலும் வெகு எளிதாக அடையாளம் காணப்படுகிறார். அவரை அனைவரும் ஆங்கிலத்தில் ‘பி.பி.’ (போதும் பெண்ணே) என்றே பாசத்தோடு கூப்பிடுகிறார்கள்.

* ‘‘சினிமாவில் என் நிறத்தை வைத்து நிறைய பேர் என்னை நிராகரித்திருந்தாலும் சில பேர் என் திறமையை பாராட்டவும் செய்திருக்கிறார்கள். இப்போது அந்த டிரண்ட் மாறுவது போல உணர்கிறேன். இன்றைய டைரக்டர்கள் திறமையைத்தான் பார்க்கிறார்கள். அழகுக்கு அவ்வளவாக அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை.’’

  – வா. முனீஸ்­வரி