27 நவம்பர் 2018, 04:10 PM
தமிழில் 'மனதில் உறுதி வேண்டும்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ரமேஷ் அரவிந்த். தொடர்ந்து 'உன்னால் முடியும் தம்பி,' 'கேளடி கண்மணி,' 'வசந்தகால பறவைகள்,' 'டூயட்,' 'சதிலீலாவதி,' 'பஞ்சதந்திரம்' உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் 'பாரீஸ் பாரீஸ்' என்ற படத்தை இயக்கி வருகிறார். காஜல் அகர்வால் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் பின்னணி வேலைகளில் இருந்த இயக்குனர் ரமேஷ் அரவிந்தை சந்தித்த போது...
* 'பாரீஸ் பாரீஸ்' படத்தை பற்றி சொல்லுங்கள்?
இன்றைய நடப்பை முன்னிறுத்துகிற படம்தான் ‘பாரீஸ் பாரீஸ்’. இந்தியில் கங்கனா ரணாவத்துக்கு தேசிய விருது வாங்கிக்கொடுத்த ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக்தான் இது. எதிர்பார்த்ததுக்கு மேலான படமாக வந்திருக்கு. இங்கே ஆண், பெண் இருபாலரா இருக்கோம். ஆனால், அவ்வளவு வேறுபாடுகள். உடம்பிலிருந்து மனசு வரைக்கும் ஆயிரத்தெட்டு வித்தியாசம். பெண் மனசோட ஆழம் எவருக்கும் புரிஞ்சதில்லை. ஆண், பெண் இரண்டு தரப்பு பிரச்னைகளும் அவ்வளவு இருக்கு. ஒரு ஆண் அருமையான நண்பராகி பெண்ணுக்கு உதவ முடியும்னு சொல்ற படம் இது.
* படம் எப்படி வந்திருக்கு..?
‘குயின்’ படத்தை ஒரு ஆடியன்ஸா பார்த்தபோது ரொம்பவே ரசித்தேன். நானே ‘கேளடி கண்மணி’, ‘வசந்தகாலப் பறவை’ன்னு ரொமாண்டிக் படமெல்லாம் செய்திருக்கேன். அது ஒரு யுகம். காதலுக்காகவே காத்திருந்த காலம்.
அன்பு, காதல் எல்லாத்தையும் செஸ் விளையாட்டு மாதிரி ஆக்கிட்டா, காய் நகர்த்தல்லயே நம்ம காலம் முடிஞ்சிடும். உறவுகளை உணர்வோம். அது எப்படின்னு சொல்கிற படமாகவும் ‘பாரீஸ் பாரீஸ்’ இருக்கும். இப்பெல்லாம் ‘உனக்கும், எனக்கும் சரியா வரலை...’ன்னு கை குலுக்கிட்டு ஈஸியாக போயிடுறாங்க. இதுதான் படத்தின் அடித்தளம்.
நாளைக்கு திருமணம். இன்னிக்கு அந்த பையன், சரியில்லை, விலகிடலாமேன்னு சொல்றான். அந்த இடத்தில் ஆரம்பித்து அந்தப் பொண்ணு என்ன பண்ணும் என்பதுதான் படம். இப்படி ஒருத்தன் சொல்லிட்டா ஒண்ணு, அந்த பொண்ணு மூலையில் உட்கார்ந்திட்டு அழுதுக்கிட்டே இருக்கலாம் அல்லது தைரியமாக அடுத்த வேலையை பார்க்கலாம்ன்னு கிளம்புற பொண்ணா இருக்கலாம்.
பரமேஸ்வரி என்கிற மதுரைப்பொண்ணு விருதுநகரிலிருந்து கிளம்புகிறாள். பாரீஸ், ஏதென்ஸ்ன்னு ஆரம்பிச்சு உலகத்தையே சுத்திப்பார்க்க போகிறாள். அவள் இதுக்கு முன்னாடி விருதுநகரை விட்டுக்கூட தாண்டினதில்லை. அப்படியொரு பெரிய பயணமும் இதில் கலந்திருக்கு.
* காஜல் அகர்வாலின் கேரியரில் முக்கியமான படம்ன்னு சொல்லுங்க?
அவங்களுக்கு இந்தப் படம் பெரிய வளர்ச்சி. பாரதிராஜா, பாலசந்தர் படத்தில் ஒரு பொண்ணுக்கு நல்ல ரோல் இருக்குமில்லையா, அப்படியிருக்கும். ‘அவள் ஒரு தொடர்கதை’ சுஜாதா மாதிரி, ‘சந்திரமுகி’ ஜோதிகா மாதிரி நிலைச்சு நிற்கிற ரோல். இயக்குனரா என்ன எதிர்பார்த்தேனோ அதைக் கொடுத்தாங்க. 150 படங்களுக்கு மேல் ஹீரோவாக நடிச்சிட்டேன். படங்கள் டைரக்ட் பண்ணியிருக்கேன். ஆனால், பாலுமகேந்திரா, பாலசந்தர் சார் படங்களில் நடிச்சதெல்லாம் அனுபவம். அது மாதிரி காஜலும் என்கிட்ட ஒரு ஸ்டூடண்ட் மாதிரி இருந்தாங்க.
தமிழச்சி தங்க பாண்டியன்தான் ஸ்கிரிப்ட் ரைட்டர். பாடல்களை பார்வதியும், விவேகாவும், மோகன்ராஜனும் எழுதியிருக்காங்க. அமித் திரிவேதி மியூசிக். இந்த படத்தின் நாலு வெர்ஷனுக்கும் அமித் திரிவேதிதான் மியூசிக். இந்திய அளவில் வேண்டப்படுகிற மியூசிக் டைரக்டர்.
கன்னடம், தமிழ் என இரண்டுக்கும் தனித்தனி ஹீரோயின்கள். இருவரும் அற்புதமாக உணர்வுகளை படத்தில் கொண்டு வருவதற்கு வழிவிட்டேன். ஒருத்தர் மாதிரி இன்னொருத்தரை செய்ய வைக்காமல், அவர்களின் சுயத்திற்கு அனுமதித்தேன். பிரான்ஸ், கிரீஸ், இத்தாலி, ரஷ்யன்... நடிகர்களையும் கையாண்ட அனுபவம் சந்தோஷமாக இருந்தது.