திருவண்ணாமலையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது

பதிவு செய்த நாள் : 23 நவம்பர் 2018 17:54

திருவண்ணாமலை,

2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை மலை மீது இன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. லட்சக் கணக்கான மக்கள் மகா தீபத்தை கண்டு தரிசித்தார்கள்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தீபத் திருவிழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து 10ம் நாளான இன்று அதிகாலை பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று (23-11-2018) நடந்தது. இதில், சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் முழுங்க பரணி தீபம் அதிகாலை ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு அருணாசலேசுவரர் தரிசனம் பெற்றனர்.

மகா தீபம்

தீபத் திருவிழாவின் மகா தீபம் இன்று மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள திருவண்ணாமலை உச்சியில், மகா தீபம் ஏற்றப்பட்டது.  தீபம் ஏற்றும்போது அண்ணாமலையார்க்கு அரோகரா என்றும், தென்னாடுடைய சிவனே போற்றி என்றும், சிவ சிவ என்றும் பக்தர்கள் கோஷமிட்டனர்.

மலையின் உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் பிரமுகர்கள், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று மகா தீபத்தை தரிசனம் செய்தனர்.

இன்று திருவண்ணாமலையில் 4 மணி நேரம் கனமழை பெய்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மகாதீப காட்சியை தரிசிக்க பக்தர்கள் குவிந்து இருந்தனர்.

தீபத் திருநாளை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று திருவண்ணாமலையில் குவிந்தனர். இன்று மலைமீது ஏற்றப்படும் மகா தீபம் 11 நாட்கள் வரை எரியும்.

3000 கிலோ நெய்யும், 1000 மீட்டர் காடா துணியும் மகா தீபத்திற்காக பயன்படுத்தப்பட்டது.

முருகன் கோவிலில் கார்த்திகை தீபம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ள முருகன் கோவிலிலும் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.