திருச்செந்தூர் கடற்கரையில் சூரசம்ஹார விழா: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள் : 13 நவம்பர் 2018 16:10

தூத்துக்குடி:

ஆணவம் அழியும் தத்துவத்தை உலகிற்கு உணர்த்திய திருச்செந்துார் செந்திலாண்டவரின் சூரசம்ஹார விழா மக்கள் வெள்ளத்தில் நேற்று மாலை நடந்தது.

  அறுபடை வீடுகளில் அழகியதும், அலைவீசும் கடலருகே அமைந்தும் தனிசிறப்பு பெற்றது திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயில். இக்கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாவான கந்த சஷ்டி விழா கடந்த 8ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

 யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி தினமும் யாகவேள்வி நடத்தப்பட்டு பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. அங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் அலங்காரம் நடந்து வந்தது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை ஆனதும் யாகசாலையில் மகா தீபாராதனை நடந்தது.

 பின்னர் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். மாலையில் திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி, அம்மன் தங்கத் தேரில் எழுந்தருளி கிரி பிரகாரம் வலம் வந்து கோயிலை சேர்ந்தனர்.

 தினமும் காலை மற்றும் மாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன.

சஷ்டி திருவிழாவின் உச்சகட்ட நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று மாலை நடந்தது.

இதையொட்டி அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது. அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

 காலை 7 மணிக்கு யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்பாளுடன் எழுந்தருளியதும் யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை 9.30 மணிக்கு பூர்ணாஹுதி தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி, அம்மனுக்கு அபிஷேகமானது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், அதனை  தொடர்ந்து தீபாராதனை, பின்னர் மூலவருக்கு சஷ்டி தீபாராதனை நடந்தது.

சர்வ அலங்காரத்தில் சுவாமி ஜெயந்திநாதர்

 பின்னர் யாகசாலையில் மகா தீபாராதனையானது. யாகசாலையிலிருந்து சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாச மண்டபத்தில் காட்சியளித்தார். அங்கு சுவாமிக்கு மகாதீபாராதனை நடந்தது.

 மதியம் 2 மணிக்கு திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளியதும் அபிஷேகம் ஆராதனைகள் நடந்தன.  மாலை 4 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சிக்கு சுவாமி ஜெயந்திநாதர் சர்வ அலங்காரத்துடன் ஆயத்தமானார்.

கஜமுக சூரன்

முன்னதாக மதியம் 2.30 மணிக்கு சிவன் கோயிலிருந்து சூரபத்மன் தனது படை பரிவாரங்களோடு ரத வீதிகளை சுற்றி கோயில் கடற்கரைக்கு வந்து சேர்ந்தான். மாலை 4.40 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் பக்தர்கள் வெள்ளத்தில் கடந்து கோயில் கடற்கரைக்கு வந்தார். பின்னர் சூரசம்சம்ஹார நிகழ்ச்சி துவங்கியது. லட்சகணக்கான பக்தர்கள் வெள்ளத்தின் மத்தியில் முதலில் கஜமுக சூரன், சுவாமி ஜெயந்திநாதருடன் போர் புரிந்தான்.

மூன்று முறை சுவாமியை வலம் வந்த சூரன் பின்னர் எதிர்திசையில் நின்றான். சரியாக மாலை  5.12மணிக்கு கன்மையை அழித்து கஜமுக சூரனை முருகப்பெருமான் தனது வெற்றிவேலால் வீழத்தினார். அப்போது வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பக்தர்கள் எழுப்பிய கோஷத்தால் விண்ணே அதிர்ந்தது.

சிங்கமுகமாக மாறி சூரன்

 பின்னர் சிங்கமுகமாக மாறி சூரன் முருகபெருமானிடம் போர் புரிந்தான். மாயை அழித்து செந்திலாண்டவர் தனது வெற்றி வேலால் சிங்கமுக சூரனை 5.26 மணிக்கு வீழத்தினார்.

சூரபத்மன் அழிந்தான்

பின்னர் சூரன் தனது சுயரூபமாக மாறி சூரபத்மனாக முருகப்பெருமானிடம் போரிட்டார். ஆணவத்தை அழித்து அவதார மகிமைய உலகிற்கும் உணர்த்தும் வகையில் செந்திலாண்டவர் தனது வேலால் சூரபத்மனை 5.40 மணிக்கு வீழ்த்தினார். பின்னர் சேவலாகவும், மாமரமாகவும் மாறி சூரபத்மான் முருகப்பெருமானிடம் போரிட்டான். கருணை கடவுளான செந்திலாண்டவர் சூரனை சேவலாகவும், மாமரத்தையும் தனக்குள் ஆட்கொண்டார்.

விரதத்தை நிறைவு செய்த பக்தர்கள்

சூரனின் முதல் தலையை கொய்ததும் விரதமிருந்த லட்சக்கணக்கான முருகபக்தர்கள் கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி தங்கள் விரதத்தை நிறைவு செய்தனர்.

 சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சிளித்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் கோயில் உட்பிரகாரத்தில் உள்ள 108 மகாதேவர் சன்னதி முன்பு வந்தார். இரவு 7 மணிக்கு சுவாமிக்கு சாயாபிஷேகம் எனப்படும் கண்ணாடி முன்பு சுவாமி வைக்கப்பட்டு அவரது பிம்பத்திற்கு அபிஷேகம் நடந்தது.

சூரசம்ஹார விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று திருக்கல்யாணம்

சஷ்டி திருவிழாவின் 7ம் நாளான இன்று (நவ.15ம் தேதி) அதிகாலை 5.30 மணிக்கு தெய்வானை அம்மன் தபசு காட்சிக்கு புறப்பட்டு முருகா மடம் சென்று சேருகிறார். மாலை 6 மணிக்கு சுவாமி குமரவிடங்கபெருமான் முருகமடத்தில் உள்ள தெய்வானை அம்மனுக்கு காட்சி கொடுக்கிறார். பின்னர் மாலை 6.30 மணிக்கு தெப்பக்குளம் தெரு சந்திப்பில் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறத. நள்ளிரவு கோயில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் முருகன் – தெய்வானை திருக்கல்யாணம் ஐதீக முறைப்படி நடக்கிறது.

சூரசம்ஹார நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதனால் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி இந்நிகழ்ச்சி அமைதியாக நடந்து முடிந்தது. விழாவில் ஐகோர்ட் நீதிபதி சுந்தர், மத்தியஅமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன், தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், செய்திதுறை அமைச்சர் கடம்பூர்ராஜூ, பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சுற்றுலாத்துறை அமைச்சர்வௌ்ளமண்டி நடராஜன், அறநிலையத்துறை ஆணையர் ராமசந்திரன், கூடுதல் ஆணையர் திருமகள்,கலெக்டர் சந்தீப்நந்துாரி, திருச்செந்துார் கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி, , நெல்லை ஆவின் சேர்மன் சின்னத்துரை, திருச்செந்துார் ஆர்டிஓ கோவிந்தராசு,தாசில்தார் தில்லைப்பாண்டி, மண்டல துணைதாசில்தார் கோமதிசங்கர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். ,

பாதுகாப்பு ஏற்பாடுகளை தென்மண்டல ஐஜி சண்முகராஜேஸ்வரன் தலைமையில், நெல்லை சரக டிஐஜி,கபில்குமார் சரத்கர், துாத்துக்குடி மாவட்ட எஸ்பி. முரளி ரம்பா, திருச்செந்துார் டிஎஸ்பி திபு உட்பட 3 ஆயிரம் போலீசா்ர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி ஆகியோர் செய்திருந்தனர்.