மோடியின் பணக்கார நண்பர்களுக்காகவே பணமதிப்பிழப்பு திட்டம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 20:44

புதுடில்லி,

பிரதமர் நரேந்திர மோடியின் பணக்கார நண்பர்களின் கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றவே உயர்மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மோடியின் அரசியல் சதி என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

மத்திய அரசின் 500, 1000 ரூபாய் நோட்டுகளின் மதிப்பிழப்பு திட்டத்தின் இரண்டாம் ஆண்டு நிறைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த திட்டத்தை பாஜகவினர் புகழ்ந்து வரும் நிலையில் எதிர்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றன.

இந்த சூழ்நிலையில் மத்திய அரசின் இந்த திட்டத்தை விமர்சித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டரில் செய்தி வெளியிட்டுள்ளார்.  ‘‘உயர்மதிப்பு ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்தது மிகவும் கொடூரமான சதிதிட்டம். மோடியின் பணக்கார நண்பர்களின் கருப்பு பணத்தை வெள்ளையாக்க கொண்டு வரப்பட்ட மோசடி திட்டம் இது’’

‘‘இந்த திட்டத்தில் எந்த நியாயமும் இல்லை. இந்த திட்டத்திற்கு வேறு காரணங்களை கூறுவது நாட்டு மக்களின் அறிவை கேலி செய்வதற்கு சமம்’’ என ராகுல் காந்தி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியை கைப்பற்றத் திட்டம்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை ஈடுசெய்ய ரிசர்வ் வங்கியின் அதிகாரத்தை கைப்பற்ற மோடி அரசு திட்டமிடுவதாக முன்னாள் நிதி அமைச்சர் ப. சிதம்பரம் இன்று குற்றம்சாட்டினார்.

இது குறித்து ப.சிதம்பரம் கூறியதன் விவரம் :

மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி இடையே கடந்த பல மாதங்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் வரும் 2019ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சீர் செய்ய ரிசர்வ் வங்கியிடம் 1 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு கேட்டுள்ளது.

இதற்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் மறுப்பு தெரிவித்து அதில் உறுதியாக நிற்கும் பட்சத்தில், 1934 ரிசர்வ் வங்கி சட்டப்பிரிவு 7ன் கீழ் 1 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசின் வங்கி கணக்கிற்கு மாற்றும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

நவம்பர் 19ம் தேதி நடைபெறும் ரிசர்வ் வங்கி நிர்வாக கூட்டத்தில் அரசுக்கு ஆதரவாக ரிசர்வ் வங்கிக்கு அழுத்தம் கொடுக்க, வங்கி நிர்வாகத்தில் மத்திய அரசு தனது ஆட்களை நியமித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது அரசின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இந்த இரண்டில் எது நடந்தாலும் நாட்டுக்கு சீர்கேடு தான் என ப. சிதம்பரம் தெரிவித்தார்.