அமெரிக்கா-வடகொரியா இடையிலான அணு ஆயுத ஒழிப்பு பேச்சுவார்த்தை ரத்து

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 20:38

வாஷிங்டன்/சியோல்

   அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ, வடகொரிய அதிபரின் வலது கையாக கருதப்படும் கிம் யோங் சோல் இடையில் இன்று நடைபெறவிருந்த அணு ஆயுத ஒழிப்பு குறித்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஹீதர் நுவெர்ட் கூறுகையில், “இந்த சந்திப்பு பின்னொரு நாளில் நடத்தப்படும். எங்களது வருங்கால நிகழ்ச்சிகளை பொறுத்து, பின்னர் ஒரு தேதியில் சந்திக்க ஏற்பாடு செய்வோம்” என்று கூறினார்.

வடகொரியா மீதான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ள அந்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், பேச்சுவார்த்தை ரத்தானது குறித்து அமெரிக்க வெளியுறவு அதிகாரிகள் கருத்து எதுவும் கூற மறுத்துவிட்டனர். 

கடந்த ஜூன் 12 ஆம் தேதி சிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க டிரம்ப்-கிம் சந்திப்பின் போது, அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் இருநாடுகளும் கையெழுத்திட்டன.

அதன் பின்னர், வடகொரியா அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஆனால் வடகொரியா தகுந்த நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வந்தது.

இந்நிலையில், இருநாடுகளுக்கு இடையேயான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதும் தடைகள் விதிக்கப்பட்டிருப்பதும் எதிர்மறையானது. அமெரிக்காவின் பதில் நடவடிக்கையைப் பொறுத்தே எதையும் தீர்மானிக்க முடியும் என்று கொரிய அரசின் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதையடுத்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த மைக் பாம்பியோ, வடகொரியா அணு ஆயுத ஒழிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற எங்களின் இலக்கை அடையாமல், தடைகளை விலக்க முடியாது” என்று கூறினார்.

முன்னெப்போதும் இல்லாதபடி, பல ஆண்டுகளாக அமெரிக்காவினால் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த வடகொரியாவுக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சர் இந்த ஆண்டு இதுவரை 4 முறை சென்றுள்ளார்.

வடகொரியா தொடர்ந்து அணு ஆயுதம், ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருவதைக் கண்ட அதிபர் டிரம்ப் வடகொரியாவை எச்சரித்தார். இதையடுத்து, இருநாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாய கட்டம் நெருங்கியதை அடுத்து, இதனை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கிம் யோங் சோல் வடகொரிய ஜெனரலாகவும் உளவுப்பிரிவு முன்னாள் தலைவராகவும் பணியாற்றியவர். 20 ஆண்டுகளுக்கு பின்னர், கடந்த மே மாதம் வடகொரியாவில் இருந்து நியூயார்க் வந்த வடகொரிய தூதரான அவர் பாம்பியோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பாம்பியோ வடகொரியா வரும்படி அழைப்பு விடுத்தார்.

அவசரம் இல்லை

இதனிடையே வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், “வடகொரியா மற்றும் அதன் மீதான தடைகள் பற்றி இறுதி முடிவு எடுப்பதில் அவசரம் இல்லை. வடகொரியா தகுந்த முறையில் பதில் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதன் மீதான தடையை நீக்குவதில் எனக்கும் மகிழ்ச்சியே. இது இரு வழிப்பாதை. அவர்களும் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்”.

“எனது தலைமையிலான அரசு, வேறு எந்த நிர்வாகமும் செயல்படாத வகையில், வடகொரியாவுடனான உறவில் சிறந்ததொரு வளர்ச்சி கண்டுள்ளது. அடுத்த ஆண்டு வடகொரியா அதிபர் கிம்மை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பாம்பியோ, வடகொரிய ஆலோசகர் கிம் யோங் சோல் உடனான இன்றைய பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பபடுவதாக அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்தில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடகொரியாவே ரத்து செய்தது

இதற்கிடையே இன்று நடைபெறவிருந்த மைக் பாம்பியோ-கிம் யோங் சோல் சந்திப்பை ரத்து செய்ய வடகொரியாவே அமெரிக்காவிடம் கேட்டுக்கொண்டது என்று தென்கொரிய வெளியுறவு அமைச்சர் கான்ங் யூங்-வா தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையே இரண்டாவது சந்திப்பு நிகழ்ந்த பின்னர் அணு ஆயுத ஒழிப்பு பற்றி பேச்சுவார்த்தை நடத்த வடகொரியா திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் கடைசி நிமிடத்தில் இந்த சந்திப்பு ரத்தானது குறித்து கருத்து தெரிவித்த அரசியல் ஆய்வாளர்கள், ”டிரம்ப்-கிம் இடையேயான இரண்டாவது உச்சிமாநாடுக்கு விரைவில் ஒப்புக் கொள்ள அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்டு இந்த சந்திப்பை வடகொரியா ரத்து செய்திருக்கலாம்”.

”இந்த சந்திப்பின் மூலம், அமெரிக்க அதிகாரிகள் தடுக்க முயற்சிக்கும் தடைகளை தகர்க்கவும் டிரம்ப்பிடம் இருந்து பெரியளவு சலுகைகளை பெற முடியும் என்றும் வடகொரியா நம்புகிறது” எனத் தெரிவித்தனர்.