இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க திட்டம் : இலங்கை அரசு மறுப்பு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 18:38

கொழும்பு,

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் மைத்திரிபால சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அந்த தகவல்கள் உண்மையல்ல என்று இலங்கை அரசு மறுத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் 26ம் தேதி இலங்கை பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்கே திடீரென்று நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் மகேந்திர ராஜபக்‌ஷேவை புதிய பிரதமராக அதிபர் மைத்திரிபால சிறிசேனாவால் நியமித்தார்.

இதற்கு ரணில் விக்கிரமசிங்கே மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க அவையை உடனடியாக கூட்டும்படி வலியுறுத்தி வந்தனர்.

அதை தொடர்ந்து நாடாளுமன்றம் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கப்பட்டது. அதற்கு சபாநாயகர் கரு ஜெயசூர்யா உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். சர்வதேச அளவிலும் அழுத்தம் அதிகரித்தது.

அதை தொடர்ந்து நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்றம் கூடும் என அறிவிக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க மகேந்திர ராஜபக்‌ஷே - சிறிசேனா கூட்டணி தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இருப்பினும் அவர்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. அதன் காரணமாக நாடாளுமன்றத்தை கலைத்து மீண்டும் தேர்தல் நடத்த அதிபர் சிறிசேனா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இலங்கையின் ராணுவ அதிகாரியான சரத் ஃபோன்சேகா நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் சிறிசேனா திட்டமிடுவதாக குற்றம்சாட்டினார். இது இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. மத்திய அரசின் ஆட்சிக்காலம் முடியும் போது தான் நாடாளுமன்றத்தை அதிபர் கலைக்க முடியும் என்று சரத் ஃபோன்சேகா தெரிவித்தார்.

மேலும் அதிபர் சிறிசேனாவை கொல்ல சதிதிட்டம் தீட்டப்பட்டதாக போலி தகவலை பரப்பவும் திட்டமிடப்படுவதாக சரத் ஃபோன்சேகா குற்றம்சாட்டினார். கிரிமினல் குற்றவாளியான ஒருவருக்கு லஞ்சம் கொடுத்து அவரிடம் அதிபர் சிறிசேனாவை கொல்ல பணம் கொடுக்கப்பட்டதாக அவரை கூற வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக சரத் ஃபோன்சேகா கூறினார்.

சட்டப்படி நடவடிக்கை 

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.

புதன்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய தேசிய கட்சி தலைவர் கபிர் ஹாசிம் கூறுகையில்  ‘‘இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்’’

‘‘அரசாட்சி முடியும் முன் நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை. இரு தரப்பினருக்கும் நாடாளுமன்றத்தில் தங்கள் பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பளிப்பதே பிரச்சனையை தீர்க்க ஒரே வழி’’ என்று கபிர் ஹாசிம் தெரிவித்தார்.

மேலும் இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பத்தால் முதலீட்டாளர்கள் பங்கு சந்தையில் இருந்து சுமார் 700 கோடி டாலரை திரும்ப பெற்றுள்ளனர். சில எம்.பிக்கள் தங்கள் பாதுகாப்புக்காக நாட்டை விட்டு வெளியேறி வருகிறார்கள் என்று கபிர் ஹாசிம் கூறினார்.

அரசு மறுப்பு

இலங்கை நாடாளுமன்றத்தை கலைக்க அதிபர் சிறிசேனா திட்டமிடுவதாக வெளியாகும் தகவல்களை இலங்கை அரசு மறுத்துள்ளது. இந்த செய்திகள் அடிப்படையில் ஆதாரமற்றவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.