ரூ. 20 கோடி நிதி மோசடி: தேடப்படும் கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவு

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 18:05

பெங்களூரு

ரூ.20 கோடி நிதி மோசடி வழக்கில் தேடப்படும் கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தலைமறைவாகி உள்ளார். அவரை பிடிப்பதற்கு 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பெங்களூருவில் அம்பிடன்ட் மார்கெட்டிங் நிறுவனம் நடத்தி வரும் சையத் அகமது பரீத், தனது நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிகவட்டி தருவதாக கூறி இருந்தார். இதனை நம்பி முதலீடு செய்த ஆயிரக்கணக்கானவர்களுக்கு பல கோடி ரூபாயை திரும்ப கொடுக்காமல் பரீத் மோசடி செய்தார்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பரீத்திற்கு சொந்தமான நிறுவனங்கள், வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

அப்பொழுது கைப்பற்றிய ஆவணங்களின்படி ஜனாரத்தன ரெட்டியின் கணக்கில் வராத பணத்தை வெளுப்பாக்கி ”ரூ.2 கோடி பணமாகவும் ரூ. 18 கோடிக்கு,  57 கிலோ தங்க கட்டிகளாகவும் கொடுத்த்து தெரிய வந்தது.” என பெங்களூரு ஆணையர் டி. சுனில் குமார் உறுதிபடுத்தினார்.

இதையடுத்து ஜனார்த்தன ரெட்டியின் பல்லாரி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால் அவர்  தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

ஜனார்த்தன ரெட்டியின் கூட்டாளியும், இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாகவும் கருதப்படும் மெஃபுஸ் அலி கானையும் போலீசார் தேடி வருகின்றனர். ஆனால் அவன் கைது செய்யப்படாமல் இருக்க புதன்கிழமையே நகர நீதிமன்றம் ஜாமின் அளித்து உத்தரவிட்டுள்ளது.

ஜனார்த்தன ரெட்டி மற்றும் கூட்டாளி அலிகானுக்கு சொந்தமான பல்லாரி, சித்ரதுர்கா, ஐதராபாத், கடப்பா வீடுகளில் அமலாக்கத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் பெங்களூரு வீட்டில் இருந்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாரி இடைத்தேர்தலில் போட்டியிட்ட, ஜனார்த்தன ரெட்டியின் நண்பர் பி.ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தா தோல்வியடைந்துள்ள நிலையில், இந்த சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.