பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி: மன்மோகன் சிங்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 15:29

புதுடில்லி

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், இந்த நடவடிக்கையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி  500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தும், ஆர்ப்பாட்டங்களும் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் பணமதிப்பிழப்பு குறித்து இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.”பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 2016ஆம் ஆண்டு சிறிதுகூட சிந்திக்காமல், விளைவுகளை ஆய்வு செய்யாமல் கொண்டுவந்த மோசமான பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் 2ஆம் ஆண்டு இன்று அனுசரிக்கப்படுகிறது” என்று குறிப்பிட்டார்

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட தழும்புகள்

மேலும்,”இந்த நடவடிக்கை ஏற்பட்ட வடுக்கள் ஒவ்வொருவர் மீதும் கண்கூடாகத் தெரிகிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒவ்வொரு தனிமனிதரையும் வயது, பாலினம், மதம், தொழில் எனப் பாகுபாடு பார்க்காமல் பாதித்துள்ளது. 2 ஆண்டுகள் ஆகியும்கூட, அந்த அதிர்ச்சியில் இருந்து நாட்டின் பொருளாதாரம் இன்னும் மீளவில்லை” என்று தெரிவித்தார்.

”பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கம் பொருளாரத்தில் கடுமையாகப் பாதித்து, வேலைவாய்ப்பிலும், நிதிச்சந்தையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காலம் சிறந்த வலி நிவாரணி எனக் கூறுவதுண்டு. ஆனால் துரதிருஷ்டவசமாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தழும்புகள், காயங்கள், இன்னும் தெளிவாக தெரிகின்றன” என்று கூறினார்.

பொருளாதார வீழ்ச்சி

”பணமதிப்பிழப்புக்கு பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கொடுமையான தாக்கங்கள் இன்னும் கண்டுபிடிக்கமுடியாமல் இருக்கிறது. நாட்டின் தூண்களாக இருந்துவந்த சிறு, குறு தொழில்கள், பணமதிப்பிழப்பு அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

வேலைவாய்ப்பில் நேரடியாகத் தாக்கத்தை பணமதிப்பிழப்பு ஏற்படுத்திய காரணத்தால் இன்னும் புதிய வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்க முடியாமல் உள்ளது என்று தெரிவித்தார்

உரிய நடவடிக்கை தேவை

மரபுவழியில்லாத குறுகியகால பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பொருளாதாரத்திலும், நிதிச்சந்தையிலும் மேலும் நிலையில்லாத் தன்மையை ஏற்படுத்தும். பொருளாதாரக் கொள்கையில் வெளிப்படைத்தன்மையும், நிலைத்தன்மையையும் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்மோகன் சிங் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.

கெஜ்ரிவால் விமர்சனம்

இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து டில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து வெளியிட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில்,

”மோடி அரசாங்கத்தின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, இந்தியப் பொருளாதாரத்தின் மீது ஏற்பட்டுள்ள ஆழமான காயம். இரண்டு வருடங்கள் ஆன பிறகும் நாடு ஏன் இத்தகைய அழிவுக்குத் தள்ளப்பட்டது என்னும் கேள்விக்கான பதில் இன்னும் மர்மமாகவே இருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.

மம்தா சாடல்

இதேபோல், மேற்கு வங்காள முதல்வரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். இதில் பேசிய அவர்,”இன்று மிக மோசமான கருப்பு தினம். பணமதிப்பு நீக்கம் என்பது மிகப்பெரிய மோசடி, ஊழல், நமது பொருளாதாரத்தை, பல கோடி மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழித்த நடவடிக்கை. இதை செய்தவர்களை மக்கள் உரியமுறையில் தண்டிப்பார்கள்” என்று சாடினார்.

”பணமதிப்பு நீக்கத்தின் 2ஆம் ஆண்டு நிறைவு தினம் என்பது கருப்பு நாள். இதை நான் மட்டும் கூறவில்லை. நாட்டின் மிகச்சிறந்த பொருளாதார மேதைகள் கூட இதை ஒப்புக் கொண்டுள்ளார்கள்” என மம்தா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.

சந்திரபாபு நாயுடு தாக்கு

ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

”பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகிறது. ஆனால், இந்த நடவடிக்கையால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவில் இருந்து நம் நாட்டினால் இன்னும் மீள இயலவில்லை. கருப்புப் பணத்தை ஒழிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாஜக அரசு தெரிவித்தது. ஆனால், இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால், வேலைவாய்ப்பு, சந்தைகள், வணிகம், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை அழித்துள்ளது” என்று சாடியுள்ளார்.