சர்கார் படத்திற்கு எதிராக அதிமுக போராட்டம்: ஆட்சேபக் காட்சிகளை நீக்க படத் தயாரிப்புக்குழு ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 15:01

மதுரை: 

 விஜய் நடித்த சர்கார் திரைப்படத்திற்கு எதிராக மதுரையில் அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மதுரை அண்ணா நகரில் உள்ள 3 திரையரங்குகளில் 2:30 காட்சிகள் ரத்துசெய்யப்பட்டன.

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க அதிமுகவினர் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் சில காட்சிகளை நீக்குவதற்கு, படத் தயாரிப்புகுழு ஒப்புதல் அளித்துள்ளதாக  கோவை மேற்கு மண்டல திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சர்கார் மறு தணிக்கை

திரைப்படத்தின் சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்கியபின், மீண்டும் மறு தணிக்கை கோரி, இன்று இரவே இணைய தளம் மூலமாக சர்கார் தயாரிப்பு குழுவினர் தணிக்கை குழுவிற்கு அனுப்ப உள்ளனர். இன்று இரவே தணிக்கை குழு கையில் படத்தின் பிரதி கிடைத்து விட்டால், நாளை படத்தை பார்த்து சான்றிதழ் வழங்க தயார் என தணிக்கை உறுதியளித்திருப்பதாக கூறப்படுகிறது. எனவே,  மறு தணிக்கை சான்றிதழுடன் சர்கார் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளை வந்தடையும் என தயாரிப்பு குழுவினர் கூறுவதாக தெரிகிறது.

பின்னர் சென்சார் குழுவினரின் ஒப்புதலோடுஆட்சேபத்திற்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு பின்னர் சர்கார் படம் திரையிடப்படும் என சுப்பிரமணியம் தகவல்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் சர்கார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து உள்ளார். கீர்த்தி சுரேஷ், ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் தீபாவளி அன்று வெளியாகியுள்ளது.

விஜய் அரசியல் பிரவேசத்திற்கு கட்டியம் கூறும் வகையில் படத்தில் சமகால அரசியலை விமர்சிக்கும் வகையில் அரசியல் கருத்துக்கள் சற்று தூக்கலாக இடம்பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள, அரசை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்; இலவசங்கள் வேண்டாம் என்பதை மக்களே ஏற்க மாட்டார்கள்; திரைப்படம் எடுக்கிறோம் என்ற பெயரில் சர்கார் படக்குழுவினர் வன்முறையைத் தூண்டும் வகையில் தீவிரவாதிகள் போன்று செயல்படுகின்றனர். அத்தகைய காட்சிகளுக்காக நடிகர் விஜய், படத் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் மற்றும் படத்தினை திரையிட்ட திரையரங்கங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றெல்லாம் தொடர்ச்சியாக தமிழக அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, கே.பி. அன்பழகன் மற்றும் சி.வி.சண்முகம் ஆகியோர் புதனன்று கருத்து தெரிவித்திருந்தனர்.

சர்கார் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என - அதிமுக எம்.பி. விஜயகுமார், அமைச்சர்கள் ஜெயக்குமார், காமராஜ், ஆகியோர் இன்றும் கருத்து தெரிவித்தனர்.

அதிமுவினர் ஆர்ப்பாட்டம்

சர்கார் திரைப்படத்திற்கு எதிராக இன்று மதுரையில் எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த படம் திரையிடப்பட்டுள்ள சினிப்ரியா திரையரங்கத்தின் வெளியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சர்கார் படத்தில் இடம்பெற்றுள்ள தமிழக அரசின் இலவசத் திட்டங்களை விமர்சிக்கும் வகையிலான சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும். திரைப்படத்தில் வன்முறை காட்சிகளை நீக்க வேண்டும். இதற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

படக் காட்சிகள் ரத்து

மதுரையில் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா தலைமையில் அதிமுகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் எதிரொலியாக – சர்கார் திரைப்படத்தின் பிற்பகல் 2:30 மணி காட்சி மதுரை அண்ணாநகரில் உள்ள  மினிப்ரியா, சுகப்ரியா, சினிப்ரியா ஆகிய 3 திரையரங்குகளில் ரத்து செய்யப்பட்டது.

ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, பின்னர் 4:30 மணிக்கு மீண்டும் திரைப்படம் திரையிடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் பேனர் கிழிப்பு

கோவை - சாந்தி திரையரங்கில் ஒட்டப்பட்டிருந்த சர்கார் படத்தின் போஸ்டர்களை அதிமுகவினர் கிழித்து, இயக்குநர் முருகதாஸை எதிர்த்தும், படத்தின் சில காட்சிகளை நீக்கக்கோரியும் கோஷமிட்டனர்.

சென்னை - காசி, மவுண்ட் ரோடு, தேவி, தாம்பரம் நேஷனல் திரையரங்கில் அதிமுகவினர் சர்கார் திரைப்படத்தின் போஸ்டர், பேனர்களை கிழித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சென்னை - எக்மோர் ஆல்பர்ட் திரையரங்கில் போலீஸார் அறிவுறுத்தலின் பேரில் ரசிகர்கள் சர்கார் திரைப்பட பேனர்களை அகற்றினர்.

சென்னை - வடபழனி கமலா திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த சர்கார் திரைப்பட பேனர்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில், திருச்சி, ஜெயங்கொண்டம், மணப்பாறை, ராஜபாளையம், கோத்தகிரி, காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் சர்கார் திரைப்படத்தின் பேனர்கள் அகற்றப்பட்டன.

திருவாரூர் - மன்னார்குடியில் சர்கார் திரைப்படக் காட்சிகள் 2 திரையரங்குகளில் நிறுத்தப்பட்டன.

அனைத்து திரையரங்குகளிலும் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டனர்.

நடிகர் கமல்ஹாசன் ஆதரவு

சர்கார் திரைப்படத்திற்கு  கமல்ஹாசன் டுவிட்டர் பதிவில் ஆதரவு தெரிவித்துள்ளார்.

முறையாகச் சான்றிதழ் பெற்று வெளியாகியிருக்கும் சர்கார் படத்துக்கு,சட்டவிரோதமான அரசியல் சூழ்ச்சிகள் மூலம் அழுத்தம் கொடுப்பது இவ்வரசுக்கு புதிதல்ல.விமர்சனங்களை ஏற்கத்துணிவில்லாத அரசு தடம் புரளும்.அரசியல் வியாபாரிகள் கூட்டம் விரைவில் ஒழியும். நாடாளப்போகும் நல்லவர் கூட்டமே வெல்லும்.

இவ்வாறு, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.