பணப் புழக்கத்தை முடக்குவது பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் நோக்கமல்ல: அருண் ஜேட்லி

பதிவு செய்த நாள் : 08 நவம்பர் 2018 14:12

புதுடில்லி

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவுபெறும் நிலையில், இதுபற்றி எதிர்க்கட்சிகள் எழுப்பி வரும் புகாருக்கு நிதியமைச்சர் அருண் ஜேட்லி இன்று விளக்கமளித்துள்ளார். பணப் புழக்கத்தை முடக்குவது பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பழைய 500ரூ மற்றும் 1,000ரூ நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இது, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதிப்பு நீக்கம் செய்ய ரூபாயை வங்கிகளில் மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. அப்போது வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் கண்காணிக்கப்பட்டு, சந்தேகத்துக்கு இடமானவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

வருமான வரி சோதனைகள், போலி நிறுவனங்கள் மீது நடவடிக்கை என அடுத்தடுத்த அதிரடிகள் தொடர்ந்தன. இந்நிலையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கமளித்து இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

பொருளாதாரத்தை முறையாக்கவே இந்த நடவடிக்கை

அவர் வெளியிட்ட அறிகையில்,”பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. நமது பொருளாதாரத்தை முறையாக்குவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டமே பணமதிப்பு நீக்கம். வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வரவும், அதற்கு வரி விதிக்கப்பட்டு முறைப்படுத்தவும் முதல்கட்ட நடவடிக்கை அமைந்தது. இதன்படி, வெளிநாடுகளில் இந்தியர்கள் வைத்துள்ள சொத்துக்கள், பணத்தை கணக்கிட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன” என்று கூறினார்.

மேலும்,”நேரடி வரி மற்றும் மறைமுக வரியை வசூலிக்க கணக்கு தாக்கல் செய்வதை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுமட்டுமின்றி ஏழை, எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் முறையாக சென்றடைவது உறுதி செய்யப்பட்டது. ஏழை, எளிய மக்களுக்காக ஜன்தன் கணக்குகள் தொடங்கப்பட்டு அவர்களுக்கு மானியத்தொகை, உதவிகள் நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது”

”பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டன. அதன்படி 17.42 லட்சம் வங்கி கணக்குகள் சந்தேகத்துக்குரியவகையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

வருமான வரி வசூல் உயர்வு

”பணமதிப்பு நீக்கத்தால் வருமான வரி வசூல் கணிசமாக உயர்ந்துளு்ளது. 2018- 19ஆம் நிதியாண்டில் (31/10/2018 வரை) வருமான வரி வசூல் 22.2 சதவீதம் உயர்ந்துள்ளது. கம்பெனிகள் செலுத்தும் வருமான வரி அளவு 19.5 சதவீதம் அதிகரித்துள்ளது. பணமதிப்பு நீக்கம் அறிவிக்கப்பட்ட அடுத்த 2 ஆண்டுகளில் வருமான வரி வசூல் முறையே 6.6 சதவீதம், 9 சதவீதம் என்ற அளவில் உயர்ந்துள்ளது” என்று கூறினார்.

வருவாய் உயர்வு

”பணமதிப்பு நீக்கமும் அதைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பும், வரி வருவாயை கணிசமாக உயர்த்தியுள்ளது. 64 லட்சமாக இருந்த வரி செலுத்துவோர் எண்ணிக்கை ஜிஎஸ்டி அமல் செய்யப்பட்ட பின்பு ஒரு கோடியே 20 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேசமயம் சிறு வர்த்தகர்கள், குறு வியாபாரிகள் ஆகியோருக்கு சுமார் 97 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் வரி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.

பணப்புழக்கத்தை முடக்குவது நோக்கமல்ல

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது செல்லாது என அறிவிக்கபப்ட்ட தொகை முழுவதும் ஏறக்குறைய வங்கிக்கு திரும்பி வந்துவிட்டதால் இந்த திட்டம் தோற்றுவிட்டதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், அது தவறான கணிப்பு. பணப் புழக்கத்தை முடக்குவது பணமதிப்பு நீக்கத்தின் நோக்கமல்ல

பொருளாதாரம் முழுவதையும் கண்காணிப்பு மற்றும் கணக்குக்குள் கொண்டுவரவேண்டும் என அரசு திட்டமிட்டது. அது நடந்தேறியுள்ளது. பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு அதிக அளவு டிஜிட்டல் முறையிலான பணபரிவர்த்தனை அதிகரித்துள்ளது என்று மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.