பாலங்­க­ளால் இணை­யும் உள்­ளங்­கள்!

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2018

போக்­கு­வ­ரத்­தால் கடக்க முடி­யாத மலைப்­பாங்­கான இடங்­க­ளைத் தேடி, அங்கு பாலங்­கள் எழுப்­பு­வ­தையே தொழி­லா­கக் கொண்­டுள்­ளார் கர்­நா­ட­கத்­தைச் சேர்ந்த கிரிஷ் பரத்­வாஜ். சமீ­பத்­தில் 'பத்­மஸ்ரீ' விருது பெற்ற இவர், இது­வரை இந்­தியா முழு­வ­தும் 127 தொங்கு பாலங்­க­ளைக் கட்டி முடித்­துள்­ளார்.

'பால மனி­தன்' (Bridge Man) என்று என்னை மக்­கள் அழைப்­பது மகிழ்ச்சி அளிக்­கி­றது. இந்த ஆர்­வத்­துக்கு ஒரு சம்­ப­வத்தை முக்­கி­யக் கார­ண­மா­கச் சொல்­வேன். அது, 2007இல் நடந்­தது. தெலங்­கா­னா­வில், வாரங்­கல் மாவட்­டத்­தின் லக்­னா­வ­ரத்­தில் உள்ள நதி­யின் குறுக்கே பாலம் கட்­டு­மாறு அரசு கேட்­டுக்­கொண்­டது. அது, நக்­சல் தீவி­ர­வா­தத்­தின் ஆதிக்­கம் நிறைந்த பகுதி.

எனி­னும், துணிந்து ஒப்­புக்­கொண்டு, 4 மாதங்­க­ளில் பாலத்­தைக் கட்டி முடித்­தோம். அது மக்­க­ளுக்கு எவ்­வ­ளவு உத­வி­யாக இருந்­தது என்­பதை, ஊர்­மக்­க­ளின் கண்­க­ளில் வழிந்த கண்­ணீ­ரில் இருந்து புரிந்­து­கொண்­டேன். நக்­சல்­கள் உள்­ளிட்ட பலர் என் காலில் விழுந்து நன்றி சொன்­னார்­கள். ஒரு பாலத்­தால் அவர்­கள் வாழும் சூழலே மாறி­யது. ஆயு­தத்­தால் சாதிக்க முடி­யா­ததை, ஒரு பாலத்­தால் சாதிக்க முடிந்­ததை எண்ணி மகிழ்ச்­சி­யாக இருந்­தது.” என்­கி­றார் கிரிஷ் பரத்­வாஜ்.

கிரிஷ் பரத்­வா­ஜின் சொந்த ஊர், மங்­க­ளூ­ரு­வின் சுல்­லியா பகு­தி­யில் உள்ள அலெட்டி கிரா­மம். மெக்­கா­னிக்­கல் இன்­ஜி­னி­ய­ரிங் முடித்­துள்­ளார். கடந்த 20 ஆண்­டு­க­ளில், கர்­நா­ட­கத்­தில் 91 பாலங்­கள், கேர­ளத்­தில் 30, ஆந்­தி­ரம், ஒடிசா உள்­ளிட்ட மாநி­லங்­க­ளில் ஏழு என்று மொத்­தம் 127 பாலங்­க­ளைக் கட்டி, பல்­லா­யி­ரக்­க­ணக்­கான மக்­க­ளின் வாழ்க்­கைச் சூழலை மாற்­றி­யுள்­ளார்.

பரத்­வா­ஜின் குழு­வில், 30 நிபு­ணர்­கள் உள்­ள­னர். அவர்­கள், மலை­ய­கத்­தின் தொலை­தூ­ரப் பகு­தி­க­ளைக் கண்­ட­றி­வ­தி­லும், அவற்றை அரு­கி­லுள்ள முக்­கி­யப் பகு­தி­க­ளு­டன் இணைக்­கும் திட்­டத்தை உரு­வாக்­கு­வ­தி­லும் முனைப்­பா­கச் செயல்­ப­டு­கின்­ற­னர். அரசு ஒரு பாலத்தை அமைத்­தால் எவ்­வ­ளவு செலவு ஆகுமோ, அதில் 10ல் 1 பங்கு செல­வி­லேயே பாலத்­தைக் கட்டி முடிப்­பது பரத்­வா­ஜின் சிறப்பு. மேலும், அர­சுத் திட்­டங்­க­ளைப் போல் இவை இழுத்­த­டிக்­கப் படு­வ­தில்லை. அதி­க­பட்­சம் 3லிருந்து 4 மாதங்­க­ளுக்கு உள்­ளா­கவே, பாலங்­கள் கட்டி முடிக்­கப்­ப­டு­கின்­றன.

“இது முழுக்க சமூக உழைப்­பு­தான். அந்த ஊர்­மக்­க­ளையே பாலம் கட்­டும் பணி­யில் ஈடு­ப­டுத்­து­கி­றோம். இதன்­மூ­லம், தாங்­களே அந்­தப் பாலத்­துக்கு உரி­மை­யா­ளர்­கள் என்ற பொது­சொத்­தின் மீதான பொறுப்­பு­ணர்­வும், பிணைப்­பும் அவர்­க­ளி­டையே ஏற்­ப­டு­கி­றது.

அர­சின் உத­வி­யு­டன் பாலங்­கள் அமைக்­கும் திட்­டங்­கள் தொடங்­கப்­ப­டு­கின்­றன. பல சம­யங்­க­ளில் நிதிப் பற்­றாக்­குறை ஏற்­ப­டும். அப்­போது, மக்­களை அணு­கு­வோம். அவர்­கள் உடனே உத­வி­செய்ய முன்­வ­ரு­கி­றார்­கள். சில இடங்­க­ளில் மட்­டுமே, பாலங்­கள் கட்­டு­வ­தன் அவ­சி­யத்தை மக்­க­ளுக்­குப் புரி­ய­வைப்­ப­தில் சிக்­கல் ஏற்­ப­டும். அப்­போது, நில­வ­ரத்தை எடுத்­துச் சொல்லி, செயற்­ப­டுத்­திக் காட்­டு­வ­தன் மூலம் மக்­க­ளி­டையே மன­மாற்­றத்­தைக் கொண்டு வரு­கி­றோம்.” என்­கி­றார் கிரிஷ் பரத்­வாஜ்.

இதே­போன்ற சமூக நோக்­கி­லான கட்­டு­மா­னத் திட்­டங்­களை, தங்­கள் நாட்­டி­லும் செயல்­ப­டுத்­தித் தரக் கோரி, சுவிட்­சர்­லாந்து மற்­றும் இலங்­கை­யி­லி­ருந்து, பரத்­வா­ஜூக்கு அழைப்­பு­கள் வந்­துள்­ளன. நீச்­சல் சாம்­பி­ய­னான கிரிஷ் பரத்­வாஜ், கடந்த 1984 தொடங்கி 2008 வரை 24 ஆண்­டு­கள் காவ­லர் உத­விக்­கு­ழுத் துறை­யில் பயிற்­சி­யா­ள­ரா­க­வும் பணி­யாற்­றி­யுள்­ளார். தற்­போது, சமூக சேவையை முக்­கிய நோக்­காக கொண்டு செயற்­பட்டு வரும் பரத்­வா­ஜின் கட்­டு­மான நிறு­வ­னத்­துக்கு, விரை­வி­லேயே அவ­ரது மகன் தலை­மை­யேற்க உள்­ளார்.