கேள்வி – பதில்

பதிவு செய்த நாள் : 09 நவம்பர் 2018

* உறங்­கும்­போது மூக்கு வாச­னை­களை உண­ருமா? – ச.பரத், பூலு­வ­பட்டி.

இந்­தக் கேள்வி குறித்து இரண்டு ஆய்­வு­கள் நடந்­துள்­ளன. முதல் ஆய்வு 1997இல் நடத்­தப்­பட்­டது. நெருப்­புப் புகை­யின் நெடி, தூக்­கத்­தில் உள்­ள­வர்­களை விழிக்­கச் செய்­யுமா என, ஆய்­வா­ளர்­கள் ஆராய்ந்­த­னர். அதற்­கா­கப் பத்­துப் பேரை ஆய்­வுக்­கூ­டத்­தில் தூங்­கச் செய்து, அந்த அறை­யில் நெருப்­புப் புகையை ஏற்­ப­டுத்­தி­னர். பத்­தில் இரண்டு பேர் மட்­டுமே விழித்­துக் கொண்­ட­னர். அதா­வது, இர­வில் தூங்­கும்­போது தீ விபத்து ஏற்­பட்­டால், அதன் புகையை நுகர்ந்து மட்­டும் ஒரு­வ­ரால் விழிக்க முடி­யாது என்­பதை இந்த ஆய்வு நிறு­வி­யது.

இரண்­டா­வது ஆய்வு 2004இல் பிரௌன் பல்­க­லைக்­க­ழ­கத்­தைச் சார்ந்த ரேச்­சல் ஹெர்ஸ் (Rachel Herz) என்­ப­வ­ரால் நடத்­தப்­பட்­டது. சுமார் 20 வய­து­டைய ஆறு இளம் நபர்­க­ளைத் தேர்­வு­செய்து, அவர்­கள் தூங்­கும்­போது மூக்­கால் மட்­டும் சுவா­சம் செய்­யும் பயிற்­சி­யைத் தந்­த­னர். பின்­னர் நறு­ம­ணம் கொண்ட பெப்­பர்­மின்ட் (peppermint), துர்­நாற்­றம் கொண்ட பைரி­டீன் (pyridine) ஆகிய இரண்டு மணங்­க­ளைத் தூங்­கும் நபர்­க­ளின் மூக்­கில், குழாய் வழி­யா­கச் செலுத்தி ஆராய்ச்சி செய்­த­னர். தூக்­கத்­தின் நான்கு நிலை­க­ளி­லும் இந்த ஆய்­வைச் செய்து பார்த்­த­னர்.

முதற்­கட்ட தூக்க நிலை­யில் பெப்­பர்­மின்ட் நறு­ம­ணத்தை உணர்ந்து சிலர் விழித்­த­னர். அடுத்­த­டுத்த தூக்க நிலை­க­ளில் எவ­ரும் விழிக்­க­வில்லை. பைரி­டீன் மணம் சில சம­யம் விழிப்பை ஏற்­ப­டுத்­தி­னா­லும், ஆழ்ந்த தூக்க நிலை­யில் உள்­ள­வர்­களை விழிக்­கச் செய்­ய­வில்லை. எந்­தத் தூக்க நிலை­யாக இருந்­தா­லும், சத்­தம் அவர்­க­ளுக்கு விழிப்பை ஏற்­ப­டுத்­தி­யது.

* விமா­னத்­தில் பயன்­ப­டும் ரேடார் தொழில்­நுட்­பத்­தைப் பயன்­ப­டுத்தி, ர­யில்­க­ளில் விபத்­து­க­ளைத் தடுக்க வாய்ப்பு உண்டா? – வி. சந்­தா­ன­கோ­பா­லன், மதுரை.

வானத்­தில் விமா­னத்­தைத் தவிர உலோ­கப் பொருட்­கள் பெரும்­பா­லும் கிடை­யாது. எனவே, ஆகா­யத்­தில் ரேடார் கொண்டு உலோ­கப்­பொ­ருளை அறிந்­தால், அது ஏதா­வது விமா­னம் அல்­லது ஹெலி­காப்­டர் போன்ற வானூர்­தி­க­ளா­கவே இருக்­கும் என அறிந்­து­கொள்­ள­லாம்.

இதுவே, தரை­வ­ழிப் போக்­கு­வ­ரத்­தான இர­யில் பாதை­யில் தந்­திக் கம்­பம் உட்­பட பல்­வேறு பொருட்­கள் உலோ­க­மாக இருப்­ப­தால், ரேடாரை தரை­யில் பயன்­ப­டுத்­து­வது எளி­தல்ல. ஆயி­னும் தற்­கா­லத்­தில் இர­யில்­க­ளில் ரேடார் போன்ற கரு­வி­க­ளைப் பொருத்தி, விபத்­தைத் தடுப்­ப­தற்­கான முயற்­சி­கள் நடை­பெ­று­கின்­றன. சில இர­யில்­க­ளில் பொருத்­த­வும் செய்­துள்­ள­னர். மூன்­றா­வது கண் எனப் பொருள்­ப­டும் 'ட்ரை நேத்ரா' (Tri-Netra) அகச்­சி­வப்­புக் கதிர் உணர்வி கருவி, இர­யில் பாதை­யில் மூன்று கிலோ மீட்­டர் தொலை­வில் உள்ள தடை­கள் குறித்து தக­வல் தரும். பல டன் எடை­யு­டன் வேக­மாக ஓடும் இர­யிலை சட்­டென நிறுத்­து­வது எளி­தல்ல. அப்­ப­டியே நிறுத்­தி­னா­லும், உடனே நிற்­கா­மல் சற்று தொலைவு சென்றே நிற்­கும். எனவே, தொலை­வில் உள்­ள­போதே பாதை­யில் உள்ள தடை­கள் குறித்து அறிந்­தால் மட்­டுமே, முன்­ன­தாக ப்ரேக் பிடித்து இர­யிலை நிறுத்­த­மு­டி­யும்.

* பெட்­ரோல் வாக­னங்­க­ளில் டீசல் ஊற்­றி­னால் என்ன ஆகும்? – ஆர்.வி. சுதன், திருப்­பூர்.

டீசல் எரி­வ­தற்­குத் தேவை­யான வெப்­ப­நி­லை­யை­விட கூடு­தல் வெப்­ப­நிலை பெட்­ரோ­லுக்­குத் தேவை. எனவே, டீசல் இன்­ஜின் வடி­வ­மைப்­பும் பெட்­ரோல் இன்­ஜின் வடி­வ­மைப்­பும் வெவ்­வே­றாக இருக்­கும். தேவைக்­குக் குறை­வான வெப்ப அழுத்­த­நிலை மட்­டுமே டீசல் இன்­ஜி­னில் இருக்­கும் என்­ப­தால், அதில் பெட்­ரோல் ஊற்றி இயக்­கி­னால் இயங்­காது.

ஆனால், டீசல் எரி­வ­தற்­குத் தேவை­யான வெப்ப அழுத்­த­நி­லை­யை­விட கூடு­தல் வெப்ப அழுத்­த­நிலை பெட்­ரோல் இன்­ஜி­னில் இருக்­கும். அத­னால் அதில் டீசலை ஊற்றி இயக்­கி­னால் பெரும் ஆபத்து ஏற்­ப­ட­லாம்.

இது­போன்று மாற்றி நிரப்­பி­னால், அந்த எரி­பொ­ருளை முழு­வ­து­மாக வெளி­யில் எடுத்­து­விட வேண்­டும். அது­வரை இன்­ஜினை ஸ்டார்ட் செய்­யா­மல் இருப்­பது வாக­னத்­துக்கு நல்­லது.

* வானத்­தில் நட்­சத்­தி­ரங்­கள் இருந்­தால் மழை பொழி­யுமா, பொழி­யாதா? – மு. வினோத்­கு­மார், திருவனந்தபுரம்.

இரவு வானத்­தில் மேகம் இருந்­தா­லும் இருட்­டில் தெரி­யாது. அப்­ப­டி­யி­ருக்க அடர்ந்த மேகம் பர­வி­யி­ருந்­தால் வானில் இருக்­கும் விண்­மீன்­கள் நமக்­குத் தெரி­யாது அல்­லவா?

அதா­வது, வானில் விண்­மீன்­கள் தென்­ப­ட­வில்லை என்­றால், அடர்ந்த மேக­மூட்­டம் அவற்றை மறைத்­துள்­ளது எனப் புரிந்­து­கொள்­ள­லாம். அடர்ந்த மேக­மூட்­டம் மழைக்கு அறி­குறி. எல்லா விண்­மீன்­க­ளும் நன்­றா­கத் தெரிந்­தால் மேகம் இல்லை என அறி­ய­லாம். மேகம் இல்­லை­யென்­றால் மழை­யும் பொழி­யாது. இதை வைத்தே இர­வில் விண்­மீன்­கள் தெரிந்­தால் மழை பொழி­யாது என்­றும், விண்­மீன்­கள் தெரி­ய­வில்லை என்­றால் மழை பொழி­வ­தற்­கான வாய்ப்பு உள்­ளது என்­றும் கூறு­கி­றார்­கள்.