கார் சீட் பெல்ட் போல ரிசர்வ் வங்கி: ரகுராம் ராஜன் வர்ணனை

பதிவு செய்த நாள் : 07 நவம்பர் 2018 12:21

புதுடில்லி,

எதிர்பாராத நிலையில் வந்து சேரும் அதிரடி தாக்குதல்கள் மாற்றங்களில் இருந்து நாட்டின் பொருளாதாரத்தை காக்க வேண்டியது அவசியம். இதற்கு ரிசரவ வங்கியின் நிதானமான அணுகுமுறை உதவும். காருக்கு சீட் பெல்ட் போல ரிசர்வ் வங்கியின் நடைமுறை விபத்துகளின் விளைவுகளில் இருந்து பொருளதாரத்தைக் காக்கும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.

ராகுல் டிராவிட் போல ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும், சித்து போல் இருக்க கூடாது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட், பொறுமையாக விளையாடி, தன் அணிக்கு வலுவான தளம் அமைத்துக் கொடுப்பது போல, ரிசர்வ் வங்கி செயல்பட வேண்டும்'' என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர், ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே சமீப காலமாக கருத்து மோதல் அதிகரித்து வரும் நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியிருப்பதாவது:

“இரு தரப்பினரும் அவரவர் கருத்துக்களை கேட்க வேண்டும். மத்திய அரசு, கார் ஓட்டுனர் என்றால், ரிசர்வ் வங்கி, ஓட்டுனரை பாதுகாக்கும் 'பெல்ட்' எனலாம். அந்த பெல்ட் வேண்டுமா, வேண்டாமா என்பது, மத்திய அரசின் முடிவை பொறுத்து உள்ளது. பெல்ட் அணிந்து கார் ஓட்டினால், எதிர்பாராத விபத்துகளில் இருந்து தப்பிக்கலாம்.

மத்திய அரசுக்கு, இயல்பாகவே, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் சிந்தனை இருக்கும். அதேசமயம், நிதிச் சந்தையை வலுவாக வைக்கும் பொறுப்பு ரிசர்வ் வங்கிக்கு உள்ளதால், மத்திய அரசின் கருத்தை ஏற்காமல் மறுக்க முடியும்.

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட், நின்று விளையாடி, தன் அணியின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்துக் கொடுப்பார். அதுபோல, ரிசர்வ் வங்கி,அவ்வப்போதைய நிகழ்வுகளுக்காக தடாலடியாக கொள்கைகளையும் ந்டைமுறைகளையும் மாற்றாமல், அறிவார்ந்த சிந்தையுடன் செயல்படவேண்டும்.சித்துவைப்போல அதிரடியாக செயல்பட கூடாது” என்றார்.