கலைமாமணி வாமனன் எழுதும் ‘திரை இசைத்திலகம் கே.வி.மகாதேவன் 1918–2018’ – 36

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2018பரதனுக்கு தோதான பாடல் வரிசை!

‘சம்பூர்ண ராமாயணம்’ (1958) சுமார் மூன்றரை மணி நேரம் ஓடிய திரைப்படம். அன்றைய பிரபல நட்சத்திரங்கள், என்.டி. ராமராவ் (ராமர்), பத்மினி (சீதை), சிவாஜி (பரதன்) முதலியோருடன் நாகையா (தசரதன்), புஷ்பவல்லி (கவுசல்யா), ஜி. வரலட்சுமி (கைகேயி), நரசிம்ம பாரதி (லட்சுமணன்), டி.கே. பகவதி (ராவணன்), சந்தியா (மண்டோதரி), எம். என். ராஜம் (சூர்ப்பனகை), வி.கே. ராமசாமி (குகன்) முதலிய முன்னணிக் கலைஞர்கள் நடித்த படம்.

கவிச்சக்ரவர்த்தி கம்பர் படத்தில் குறிக்கப்படவில்லை என்றாலும், திரைக்கதாசிரியர் ஏ.பி.நாகராஜனுக்குத் துணையாக இருந்தவர் அவர்தான்! கம்ப நாடகம் என்று சொல்வார்கள். கம்பனின் எழுத்தில் ‘குளோஸ் அப்’ போன்ற சினிமா உத்திகள் எல்லாம் உண்டு என்றுகூடக் கூறுவார்கள். கதையை சுவைபட நடத்திச் செல்ல கம்பனின் காவியம் ஏ.பி.என்னுக்கு கைகொடுத்தது. ஆனால் அதையும் மிக ஜாக்கிரதையாகப் பயன்படுத்தினார்.

ராமன் மிதிலைக்கு வரும் போது நிகழும் கன்னிமாடக் காட்சியும், ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ சம்பவமும் கம்ப நாடகத்தில் மிக ரசமாக திகழும் சம்பவங்கள். ஆனால், அந்தக் காட்சியில் தோய்ந்துபோக ஏ.பி.என். விரும்பவில்லை.  சம்பவக்கோர்வையில் அதை வேகமாக, ‘லாங் ஷாட்’டில் நகர்த்திவிடுகிறார்! தமிழ்நாட்டில் பிரசாரம் செய்யப்பட்ட ராமாயண வெறுப்பின் காரணமாக, வழிபடும் தெய்வமான ராமனை முன்வைத்துக் காதலை வெளிப்படுத்த ஏ.பி. நாகராஜன் விரும்பவில்லை.

ராமாயணத்தைத் தமிழர்களுக்குச் சொல்லும் போது, முற்காலத் தமிழர்களின் மரபிற்கு ஏற்ப, மூலநூலில் இல்லாத காதலைச் சேர்த்துச் சொன்னார் கம்பர். ஆனால், தற்கால தமிழர்களின் நிலையைப் பார்த்து, அதன் மீது அழுத்தம் கொடுக்காமல் நகர்த்தினார் ஏ.பி.என்.! இந்த வேலைக்கு, பின்னணிப் பாடல் வாயிலாக உதவினார் கே.வி. மகாதேவன். படத்தில் பதினாறு பாடல்கள், பதினேழு பின்னணிப் பாடகர்கள். இசைப்பாடல்களின் வாயிலாகக் காட்சிகளை ஏ.பி.என்.  நகர்த்திச் சென்றார்.  

ராமாவதாரம் என்றாலும், ராம, லட்சுமணர் விஸ்வாமித்திரருடன் சென்றபின் நிகழும் சீதா கல்யாணம் மற்றும் பரசுராம கர்வ பங்கம் வரையிலான சம்பவங்கள் என்றாலும்,   அவற்றை நிகழ்ச்சிகளாகக் காட்டினால் நேரம் பிடிக்கும் என்று கருதி, பாடல்களால் வடிவமைத்தார் கதாசிரியர். வேறு சில சம்பவத்தொடர்களும் இப்படித்தான் காட்டப்படுகின்றன. பாடல்களின் வரிகளுக்கு ஏற்பவும், அவை சித்தரிக்கும் உணர்ச்சிகளுக்கு ஏற்பவும் மெட்டுக்களையும் ராகங்களையும் தொடுக்கும் மகாதேவனின் மகா ஆற்றல், இந்த விஷயத்தில் ஏ.பி.என்னுக்கு அபாரமாக கைகொடுத்தது. சீதை, ராமர் தொடர்புள்ள சம்பவங்களை, ராமரின் தன்மைக்கு ஏற்ப சாந்தமாகவும், இனிமையாகவும் ‘சம்பூர்ண ராமாயணம்’ வழங்கிச் செல்கிறது. ராமரோ, சீதையோ ஒரு பாடல் இசைப்பதாகக்கூட காட்சி இல்லை!

இந்த நிலையில், பரதனாக நடிக்கும் சிவாஜி, தம்பியுடன் தேரில் அயோத்திக்குள் நுழையும் முதல் காட்சியிலேயே, நிர்மலமான வானத்தில் மகோன்னதமான மேகங்கள் நுழைவதுபோன்ற உணர்வு ஏற்படுகிறது.

பிறகு, காட்டிற்கு அண்ணனைத் தொடர்ந்து சென்ற பின், அவனைத் தவக்கோலத்தில் கண்டதால் பீறிட்டு வரும் சோகத்தோடும், இதற்கு நாம் காரணமாகிவிட்டோமே என்ற  குற்ற உணர்ச்சியோடும், பரதன் காணப்படுகிறான். அந்த நிலையை,  ‘அன்னையும் பிதாவுமாகி’ என்று தொடங்கும் வரிகளும்,  ‘ஏன் பிரிந்தீர், என்னை ஏன் பிரிந்தீர்’ என்ற பாடலும் பிரதிபலிக்கின்றன.

டி.எம். சவுந்தரராஜனின் தெளிவான உச்சரிப்பும் உணர்ச்சி ததும்பும்

பாணியும் சிவாஜியின் நடிப்பிற்கு மிகப் பொருத்தமாக அமைகின்றன.

எதுகுல காம்போதி மற்றும் அடாணா ராகங்களில் அமைந்த, தாளத்தில் அமையாத வரிகள், மனதைக் கவரும் வகையில் உள்ளன.

‘ஏன் பிரிந்தீர்’ பாடலும் உணர்ச்சிமயமான கட்டத்திற்கு மிகப் பொருத்தமாக அமைகிறது. அது, ‘ஹரிதாஸ்’ திரைப்படத்தில், ‘என்னுடல் தனில் ஈமொய்த்த போது’  என்ற வரிகளின் கடைசியில் வரும், ‘அம்மையப்பா உங்கள் அன்பை மறந்தேன்’ பாடலின் மெட்டைத் தழுவி வருகிறது. அதன் முடிவில் உள்ள, ‘தாயே தந்தையே’ என்பது, ‘ராமா ராகவா’ ஆகிறது. சவுந்தரராஜன், தியாகராஜ பாகவதரை அடியொற்றி வந்தவர் ;  பாபநாசம் சிவனும், ‘ஹரிதாஸ்’ இசையமைப்பாளர் ஜி. ராமநாதனும் மகாதேவனுக்கு முன்னோடிகள். இசை முன்னோடிகளுக்கு, மகாதேவன் செலுத்திய மரியாதையாகப் பாடலை கொள்ளலாம்.

‘பாதுகா பட்டாபிஷேகம்’ என்பது ராமாயணத்திலே உணர்வுபூர்வமான ஒரு மகோன்னத கட்டம். ஒரு உயர்ந்த கொள்கையை தியாக உணர்வுடன் அரியணையில் ஏற்றி, அதன் பிரதிநிதியாக கடமையை நிறைவேற்றுதல் என்னும் மிக உயர்ந்த தத்துவத்தை மிக எளிமையான குறியீட்டால் அது விளக்குகிறது.   இந்தச் சந்தர்ப்பத்தை, பரதன் பாடுவதாக அமைந்த ‘பாதுகையே துணையாகும்’ என்ற பாடல் விளக்குகிறது (பாடியவர், டி.எம்.எஸ்.).

கருணை ரசம் ததும்பும் சாமா ராகத்திலே, ‘பாதுகையே’ பாடலை அமைத்தார் மகாதேவன். அதைத் தொடர்ந்து பஜன் பாடல் முறையிலே, இந்துஸ்தானி அமைப்பிலே முடிக்கச்செய்தார் (‘தயாளனே சீதாராமா’). பரதாழ்வார் என்று வைணவர்கள் மரியாதையோடு குறிப்பிடும் பரதனுக்கு மிகப் பொருத்தமாக அமைந்தது பாடல். (பாடியவர்கள் டி. எம். எஸ்., சீர்காழி கோவிந்தராஜன்).

ராமர், பரதன் தொடர்பாக இப்படியெல்லாம் சிறந்த உணர்ச்சிகள் வெளிப்பட்டதால், ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தைப் பார்த்துவிட்டு, ‘பரதனைக் கண்டேன்’ என்றார்  ராஜாஜி. ‘இதைவிட ஒரு நடிகனுக்கு வேறென்ன பெருமை

வேண்டும்?’ என்று மெய்சிலிர்த்தார் சிவாஜி!  

இப்படியெல்லாம் பரதனுக்குப் புகழ் கிட்டினாலும், இலங்கை அரண்மனையில் தொடங்கும் சங்கீத ரீங்காரம், ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் மிகச் சிறப்பாக அமைந்தது. தமிழ்நாட்டில் படம் வந்த போது நிலவிய சூழ்நிலைக்கு அது ஒரு வகையில் பொருத்தம்தான் போலும்! ராமசாமிகளும் ராமநாதன்களும் லட்சுமணன்களும் நிறைந்த தமிழ்நாட்டில், ராவணன்கள் தலையெடுத்த காலம் அது! நடிகர் மனோகர்கூட, ‘இலங்கேஸ்வரன்’ நாடகத்தை மேடையேற்றியிருந்த காலம்.

அப்படியும், வால்மீகி என்றாலும் சரி, கம்பர் என்றாலும் சரி, ராவணனை ஏதோ முற்றிலும் கொடியவனாக  ஒன்றும் காட்டிவிடவில்லை. இலங்கை செல்லும் அனுமன், ராவணனின் வடிவத்தையும் வல்லமையையும் கண்டு வியக்கிறார் என்றுதான் வால்மீகி கூறுகிறார். தர்மத்தின் நாயகனுக்கும், பிறன்மனை நோக்கியதால் பேராண்மையை இழந்த ராவணனுக்கும் நடைபெறும் யுத்தத்தை, இரு மகாவீரர்களின் மகோன்னத மோதலாகத்தான் வால்மீகி கண்டார்.    

தமிழ் பக்தி இலக்கியத்தின் முடிமணியாக உள்ள தேவாரமும் ராவணனைக் குறிப்பிடுகின்றது. திருப்புள்ளிருக்கு வேளூரில் பதிகம் பாடிய திருஞானசம்பந்தர், ராவணனின் ஆணவத்தையும், அவனுடைய அறத்திற்குப் புறம்பான நடவடிக்கையை எதிர்த்துப் போரிட்ட ஜடாயுவின் வீரத்தையும் பாடுகிறார்.  

இப்படியெல்லாம் இருந்தாலும், ராவணன் வீரன், வீணைக்கொடியுடையவன் என்று அவனுக்குரிய மரியாதை, ‘சம்பூர்ண ராமாயணம்’ திரைப்படத்தின்  பிற்பகுதியில் சம்பூர்ணமாக இருந்தது! சொல்லப்போனால், ராவணேஸ்வரனுக்கான அறிமுகமே கணீரென்ற பாடலோடு நடக்கிறது. அதைத் தொடர்ந்து வந்தது, தமிழ் திரை இசையில் மறக்க முடியாத ஒரு ராக ஊர்வலம்.

(தொடரும்)