திண்ணை 4–11–18

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2018

மாமனாரை திருத்திய மருமகள்!

‘செய்வனத்திருந்தச்செய்’ என்று சொல்வார்கள். நாம செய்யக்கூடிய காரியம் சிறப்பாக இருக்க வேண்டும். இல்லையென்றால், மற்றொருவர் வந்து நம்மை திருத்துவார், அல்லது நாமே திருந்த வேண்டிய சூழ்நிலை வரும். செய்யும் காரியத்தில் முழு ஈடுபாடோடு இருந்தால், வெற்றி நிச்சயம். இதற்கு உதாரணமாக ஒரு கதை உண்டு. ஒரு ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார். அந்த காலத்தில் வசதி படைத்தவர்கள் எல்லாருமே தானம், தர்மம் செய்து தங்கள் பெருமையை நிலை நாட்டிக்கொள்வார்கள்.

அந்த வகையில் இந்தப் பணக்காரரும் மக்களுக்கு அவ்வபோது, தான தருமம் செய்து வந்தார். ஒரு சமயம் அவரது வியாபாரத்தில் எதிர்பாராத நல்ல முன்னேற்றம் ஏற்பட, சந்தோஷமாக நிறைய தானம், தருமம் செய்ய முன் வந்தார். அப்போது ஒரு மகான் அவரிடம் ஒரு அன்னச்சத்திரம் கட்டி, நிரந்திரமான ஒரு புண்ணிய காரியம் செய்யும் படி யோசனை சொன்னார். பணக்காரர் அந்த யோசனையை ஏற்றுக்கொண்டு அன்னச்சத்திரம் கட்டினார். ஆனால், தினம் சத்திரத்திற்கு விலைமலிவான அரிசியையே அனுப்பி வைத்தார். இதனால் சத்திரத்திற்கு சாப்பிட வந்த மக்கள் மனம் வருத்தப்பட்டார்கள். இந்த விஷயம் மெல்ல, மெல்ல பணக்காரரின் வீட்டு வரைக்கும் தெரிந்துவிட்டது. பணக்காரரின் மகனுக்கு திருமணம் நடந்தது. வீட்டிற்கு வந்த மருமகள், தெய்வ பக்தி மிகுந்தவள். ஏழை, எளியவர்கள் மீது அன்பும், கருணையும் கொண்டவள். தன் மாமனார், தான் கட்டிய அன்னச்சத்திரத்தில் குறைந்தவிலையில் மக்கிப்போன அரிசி கொடுத்து அன்னதானம் செய்வதை கேள்விப்பட்டு மனம் வருத்தப்பட்டாள். மாமனாரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று யோசித்தாள்.

ஒரு நாள் அன்னச்சித்திரத்திரத்திலிருந்து அந்த மக்கிப்போன அரிசியை வரவழைத்தாள். அதில் சமையல் செய்து மாமனாருக்கு சாப்பாடு பரிமாறினாள். மாமனார் ஒரு வாய் சோறு வாயில் வைத்து விட்டு நாத்தம் பொறுக்காமல் ‘துா துா’ என்று துப்பினார். “வீடு நிறை நல்ல அரிசி இருக்கும் போது இந்த நாற்றம் பிடித்த அரிசி உனக்கு எங்கிருந்து கிடைத்தது...” என்று கோபமாக கேட்டார்.

மருமகள், மாமனார் மனம் நோகாமல் பாந்தமாக பதில் சொன்னார். “நாம் இங்கு ஏழைகளுக்கு என்ன தருமம் பண்ணுகிறோமோ அது தான் மேலோகத்தில் நமக்கு கிடைக்கும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். நீங்க அன்னச்சத்திரம் கட்டி புண்ணியம் தேடிக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்க, ஏழைகளுக்கு மக்கிப்போன இந்த நாற்றம் பிடித்த அரிசியை அன்னதானமாக போட்டால், மேலோகத்தில் இந்த அன்னம் தான் உங்களுக்கு கிடைக்கும். அதனால், அங்கே சாப்பிடுவதற்கு சிரமப்படாமல் இருக்க... இங்கே இப்போதே இதை சாப்பிட்டு பழகினால் தானே நல்லது. அதனால் தான் இன்றிலிருந்து இந்த அரிசிச் சமையலை துவங்கி இருக்கிறேன் என்று சொல்ல, மாமனாரால் ஒன்றும் பேச முடியவில்லை. மவுனமாக இருந்தார்.

“நீங்கள் சொன்னமாதிரி வீடு நிறைய நல்ல அரிசி இருக்கும் போது இந்த நாற்றம் பிடித்த அரிசியை எதற்கு சத்திரத்திற்கு அனுப்ப வேண்டும். அப்படி மிச்சம் பிடிக்கிற பணத்தை என்ன செய்ய போறீங்க... ‘செய்வன திருந்தச்செய்’ என்று சொல்வார்கள். அதனால் உங்களோட எண்ணம் உயர்ந்தது. அதற்கேற்றப்படி செயல்பாடும் சிறப்பாக இருக்க வேண்டும். அது தான் என்னுடைய வேண்டுகோள் என்று சொல்ல, அவ்வளவுதான். அன்னச்சத்திரத்தில் இருந்த மக்கிப்போன மட்ட அரிசி எல்லாவற்றையும் எடுத்துவிட்டு நல்ல அரிசி வழங்கப்பட்டது. மக்கள் சத்திரத்திற்கு ஆர்வமாக போனார்கள். பணக்காரரோட செயல் ஊர் முழுக்க பாராட்டிப் பேசப்பட்டது. மன்னர் வரைக்கும விஷயம் தெரிந்து, மன்னரே அவரை கவுரவப்படுத்தும் வகையில் அவரது செயல்பாடு இருந்தது. இது தாங்க நாம் ஈடுபடும் காரியத்தில் முழு ஈடுபாடு காட்ட வேண்டும். செய்வனத் திருந்தச் செய்ய வேண்டும். அது வெற்றிக்கு வழிவகுக்கும்.  இதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.

குழாயில் தண்ணீர் குடித்த காக்கை!

விடாமுயற்சி இருந்தால் முடியாத காரியத்தையும் முடித்துவிடலாம். அதே போல் நெருக்கடி என்று வந்துவிட்டால் நம் மூளை பிரகாசமாக வேலை செய்யும். பதட்டப்பட்டு காரியத்தில் இறங்கி விடாமல் சூழ்நிலையை அனுசரித்து புத்திசாலித்தனமாக செயல்பட்டால் வெற்றி கிட்டும்.

இதற்கு உதாரணமாக ஒரு கதை உண்டு. கோடை காலம் என்றாலே அனைத்து ஜீவராசிகளும் தேடுவது தண்ணீர் தான். நம்ம பூமியில் இருக்கிற ஒட்டுமொத்த தண்ணீரோட அளவில் 97.5 சதவீதம் கடல் நீர். உப்பு கலந்த கடல் நீர் தான். மீதமுள்ள 2.5 சதவீத தண்ணீர் தான் குடிநீராக உள்ளது. அதிலும் பெரும்பகுதி துருவப்பகுதிகளில் பனிக்கட்டியாக இருக்கிறது. மலைப்பகுதிகளில் இருக்கும் பணிச்சிகரங்கள் தான் உருகி ஆறாக ஓடி மனித, சமுதாயத்திற்கு குளிக்க, குடிக்க நீர்பாசன வசதிகளுக்கு பயன்படுவது. இப்படி குறைந்த அளவு நீரைத்தான் பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் பயன்படுத்துவதும் சூழ்நிலை. அதனால் தான் தண்ணீருக்கு நெருக்கடி. சரி கதைக்கு வர்றேன். உங்களுக்கெல்லாம் தெரிந்த விஷயம் தான். அதாவது, கடுமையான வெயில் காலம் காக்கை ஒன்று காடுமேடெல்லாம் அலைந்துவிட்டு ஒரு வனாந்திரப்பகுதிக்கு வருகிறது. அதற்கு நாவறட்சியாக இருந்தது. தண்ணீரை தேடி அலைந்து, அப்பொழுது ஒரு இடத்தில் ஒரு ஜாடியிருந்தது. காகம் ஜாடிக்குள் எட்டிப்பார்த்தது. கீழே கொஞ்சம் போல தண்ணீர் இருந்தது. காகம் உள்ளே தலையை நீட்டி தண்ணீர் குடிக்க முயற்சி பண்ணியது, முடியவில்லை. தண்ணீர் எட்டவில்லை. உடனே, பக்கத்தில் இருந்த சின்னச்சின்ன கல்லை வாயில் கவ்வி ஜாடிக்குள் போட்டது. அப்போதும் தண்ணீர் எட்டவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக கல்லைப் வாயில் கவ்வி, உள்ளே போட்டுக்கொண்டே இருந்தது. இது தான் அதோட விடா முயற்சி, ஒரு கட்டத்தில் ஜாடியோட முக்கால் பகுதிக்கு கல் உயர்ந்து வந்தது. கல்லுக்கு மேலே தண்ணீர் இருந்தது. இப்போது காகம் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடித்து தாகத்தை தீர்த்துக்கொண்டது.

இது தாங்க விடாமுயற்சியினால் கிடைக்கக்கூடிய வெற்றி. கதைப்படி காகம் தண்ணீர் குடிக்க இவ்வளவு முயற்சி செய்தது. ஆனால், இப்போ உள்ள காகங்கள் புத்திசாலிகள். ரொம்ப சிரமப்படுவதில்லை. நான் நேரில் பார்த்த ஒரு காட்சி. கோடை வெயில் நேரம் தான். ஒரு தெருவோரம் நல்ல தண்ணீர் வரும் கார்ப்பரேஷன் குழாய் மேலே இருக்கும் கைபிடியை நேராக திருப்பினால் தண்ணீர் வரும். மறுபக்கம் திருப்பினால் மூடிக்கொள்ளும். தண்ணீர் வராது. ஒரு காகம், மக்கள் குழாயைத்திருகி தண்ணீர் பிடித்துவிட்டு, மூடிவிட்டு போவதைப் பார்த்தது. ஆளில்லாத நேரம், நேராக குழாய் மேலே போய் உட்கார்ந்து தன்னோட அலகால் அந்த குழாய் மூடியை தட்டி நகர்த்தியது. முதலில் சிரமமாக இருந்தாலும் இரண்டு, மூன்று முறை முயற்சிக்க குழாய் திறந்து தண்ணீர் விழுந்தது. காகம் சிரமமே இல்லாமல் தண்ணீரை திருப்தியாக குடித்துவிட்டு பறந்து போய்விட்டது. அதற்கு திரும்ப குழாயை மூட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஒருத்தர் இதைப் பார்த்து காகத்தின் புத்திசாலித்தனத்தில் பிரம்மித்துவிட்டு வந்தார். அது குழாயை மூடாமல் பறந்து போவதைப் பார்த்துவிட்டு “என்ன இருந்தாலும் மனிதனுக்கு இருக்கும் அளவுக்கு இந்த அல்ப ஜீவராசிகளுக்கு அறிவு கிடையாது! தண்ணீர் வீணாகப் போகுது பாரு...” என்று வந்து குழாயை மூடிவிட்டு போனார். இது எப்படி இருக்கு பாருங்கள். காகம் கல்லு போட்டு தண்ணீர் குடிக்கிறது, அந்த காலம். குழாயை தன் அலகால திருப்பி விட்டு தண்ணீர் குடிக்கிறது இந்தக்காலம்.

எது எப்படி இருந்தாலும் அதோட முயற்சியைப் பாராட்டித்தானே ஆக வேண்டும். அதனால், காகம் அதோட தேவைக்கு அதோட முயற்சியை எந்த அளவுக்கு பயன்படுத்தியதோ, அது போல் மனிதர்களாகிய நாமும் எந்த ஒரு விஷயத்திலும் நமது விடாமுயற்சியை கைக்கொள்ள வேண்டியது அவசியம். ‘முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’. இதை மனதில் வைத்து செயல்படுங்கள் வெற்றி நிச்சயம்.

– ஹெச். வசந்தகுமார்