சிறுகதை : கண்முன் கண்ட காட்சிகள்...! – விஜயா கிருஷ்ணன்

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2018

சங்கர் தன் பாட்டி அருகில் வந்து உட்கார்ந்தான். காமாட்சி டி.வி. சீரியலில் மூழ்கியிருந்தவள் அவனிடம் எதுவுமே பேசவில்லை. சீரியலில் நல்ல காட்சி விட்டுப் போகுமே. விளம்பரம் போட்டதும் பேச ஆரம்பித்தாள்.

‘’சங்கர்..... காலையிலேயே உன்கிட்ட கேட்கணும்னு நினைச்சேன். நீ ஏம்ப்பா அந்த பெண்ணை வேண்டாம்ங்கிறே? அவங்க எத்தனையோ முறை சொல்லி அனுப்பிட்டாங்க. உனக்கு பெண் தர ரொம்ப விருப்பப்படறாங்க. நம்ம வீட்லயும் எல்லோருக்கும் விருப்பம்தான். ஆனால் நீதான் எந்தவிதமான பதிலையும் சொல்ல மாட்டேன்ங்கிறே. அதுக்கு காரணம் என்னன்னும் தெரியமாட்டேன்ங்குது இந்த பெண்ணை பிடிக்கலேன்னா, நீ வேற ஏதாவது பெண்ணை மனசுக்குள்ளே நினைச்சுக்கிட்டு இருக்கியா?’’

‘’அப்படி எதுவும் இல்லே பாட்டி?’’

‘’அப்புறம் ஏன் இவள வேண்டாம்ங்கிறே? படிப்பு, அழகு, வசதி, அந்தஸ்துன்னு எதிலேயும் குறை சொல்ல முடியாது. உத்தியோகமும் பார்க்கிறா. நாம வேலைக்கு போகவேண்டாம்னு சொன்னால் விட்டுடுறதா கூட சொல்றாங்க. அந்த பொண்ணோட தாய்மாமன் நேத்திக்கு வந்து கேட்டார். உங்க அப்பாவாலே எந்த பதிலும் சொல்ல முடியலே. நீ என்னடான்னா மவுனமாவே இருக்கே. அவளை பிடிக்கலேன்னா அதற்கான காரணத்தை மத்தவங்களிடம் சொல்ல வேண்டாம், என்னிடமாவது சொல்லலாமில்லே. அவங்க வசதியானவங்க, அவங்களை விட நாம வசதியிலே குறைஞ்சவங்கன்னு நினைக்கிறியா?’’

‘’ஊஹும்.....’’ தலையை இடவலமாக ஆட்டினான்.

‘’அப்புறம் எதுக்காக வேண்டாம்ங்கிறே?’’

‘’பாட்டி..... அவ எங்கே வேலை பார்க்கிறா?’’

‘’சென்னையிலேன்னு சொன்னாங்க.’’

‘’நானும் சென்னையிலே மூணு வருஷமா வேலை பார்த்த பிறகுதானே இங்கே வேலை மாற்றலாகி வந்திருக்கேன்.’’

‘’ஆமா..... இப்போ மூணு மாசமா இங்கேதான் வேலை பார்க்கிறே.’’

‘’பாட்டி..... நான் சொல்றத நீங்க யாரிடமும் சொல்லமாட்டீங்கன்னா ஒரு விஷயத்தை சொல்றேன்.’’

‘’நான் யாரிடம் போய் சொல்ல போறேன்.... எனக்கு தெரிஞ்ச விஷயங்களை உன் தாத்தாவிடம் சொல்லாமல் இருந்தது இல்லை. இப்போ அந்த மகராசனும் என்னை விட்டுட்டு மேலே போய் வருஷம் ஒண்ணாச்சு. நீ சொல்லு, நான் யாரிடமும் சொல்லமாட்டேன்.’’

‘’பாட்டி..... நான் சென்னையிலே வேலை பார்த்தபோது, வேலை முடிஞ்சதும் சில நாள் என் நண்பர்களோட மெரீனா பீச்சுக்கு போவேன். அவங்களோடு ஜாலியா பேசிட்டு நேரம் போவதே தெரியாமல் இருப்பேன். இருட்டின பிறகுதான் எல்லோரும் ரூமுக்கு போவோம். ஞாயிற்றுக்கிழமையானால் நாங்க எங்கேயாவது போய் வருவோம். அப்படி ஒரு ஞாயிற்றுக்கிழமை விஜிபி கோல்டன் பீச்சுக்கு போயிருந்தோம். அங்கே இப்போ எனக்காக நீங்க பார்க்கிறதா சொன்ன பெண் கவிதாவை பார்த்தேன். ஏற்கனவே எனக்கு தெரிந்த பெண்தானே. இல்லேன்னா யாரோ, எவரோன்னு நினைச்சிருப்பேன்.’’

‘’ஞாயிற்றுக்கிழமை இல்லையா.... அவளும் அவ பிரண்ட்ஸோட வந்திருப்பா.’’

‘’அதுதான் இல்லே. அவ ஒரு வாலிபனோட கை கோர்த்துக் கொண்டு ஜாலியா சிரித்தபடி மெதுவா நடந்துக்கிட்டு இருந்தா.’’

‘ஆ....’ வென வாயை திறந்தாள் காமாட்சி.

‘’பாட்டி..... வாயை மூடுங்க. அதன் பிறகும் ஒருநாள் மெரீனா பீச்சிலே பேசிக்கிட்டு நெருக்கமா உட்கார்ந்திருந்தா.... என்னை அவ கவனிக்கலே.’’

‘’அட அப்படியா சங்கதி.... நம்மளிடம் ரொம்ப நல்ல பொண்ணுன்னு சொன்னாங்களே. சரி அவன் யாரு என்னன்னு கேட்டு அவனுக்கே கட்டிவைக்கிறதுதானே?’’

‘’பாட்டி.... இனிமேதானே முக்கியமான பாயிண்ட்டுக்கே வரப் போறேன், அதுக்கு முன்னாலே அவசரப்படுறீங்களே.’’

‘’அவசரப்படலே..... கேக்கவே திக்கு திக்குங்குது... சொல்லுப்பா.... கேக்கிறேன்.’’

‘’என் பிரண்ட் சந்துருவ உங்களுக்கு தெரியுமில்லையா..... இங்கே திருவிழா பார்க்கக்கூட அழைச்சிட்டு வந்தேனே....’’

‘’ஆமாமா தெரியும்.... கோயம்புத்துார் பையன்தானே.’’

‘’அவனேதான். ஒரு நாள் பைக்கிலே போன போது மழையிலே பைக் வழுக்கி விழ, அவன் காலிலே கொஞ்சம் அடி. ஆஸ்பத்திரியிலே அட்மிட் பண்ணியிருந்தாங்க. நானும் செய்தியறிந்து பார்க்கப் போனேன். அங்கே இந்த பெண் கவிதாவை பார்த்தேன்.’’

‘’அங்கேயா.... இவ எதுக்கு அங்கே வந்தா?’’

‘’என் மனசிலேயும் இதே கேள்விதான். அவளை ஒரு நர்ஸ் அழைச்சிட்டு போக, அவள் பிரண்ட் ஒருத்தியும் கூடவே போனவள் வெளியிலேயே நிற்க, கவிதா மட்டும் உள்ளே போனாள். அந்த நர்ஸ் கொஞ்ச நேரம் கழிச்சு வெளியே வந்த போது நான் அவளிடம், கவிதா எப்படி இருக்கான்னு கேட்டேன். அபார்ஷன் நடந்துக்கிட்டு இருக்குது, இன்னும் கொஞ்ச நேரத்திலே முடிஞ்சிடும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்த பிறகு அழைச்சிட்டு போங்கன்னு சொன்னா. நான் அவ கூட போனவன்னு நினைச்சுதான் இப்படி சொன்னா. எனக்கு தலையே சுற்றி விட்டது. திருமணம் ஆகாத பெண்ணுக்கு அபார்ஷனா? கொஞ்ச நேரம் என் நண்பனை பார்க்கிற மாதிரி அங்கேயே இருந்து வாட்ச் பண்ணினேன். அரை மணி நேரத்துக்கு பிறகு கவிதாவை அவள் கூட வந்த பிரண்ட் கைத்தாங்கலா அழைச்சு வந்தவ ஒரு டாக்ஸியை ஏற்பாடு பண்ணி அழைச்சிட்டு போனா. இப்போ சொல்லுங்க பாட்டி நம்ம வீட்டுக்கு, அதிலும் உங்க பேரனான எனக்கு மனைவியாக வர அவ தகுதியானவதானா? அவளை பற்றி எல்லோரும் படிப்பு, அழகு, அந்தஸ்து, நல்ல வேலைன்னு எல்லாம் சொன்னீங்களே.... ஒழுக்கமானவதான்னு உங்களாலே சொல்ல முடியுமா இப்போ? இத்தனையும் வேறு யாராவது சொன்னால் கூட நான் நம்பியிருக்க மாட்டேன். என் கண் முன்னே பார்த்த நான் அவளை எப்படி கட்டிக்குவேன்?’’

‘’வேண்டாம்ப்பா.... அப்படி ஒரு பெண் நம்ம குடும்பத்துக்கு வர வேண்டாம். ஐயையோ..... காலம் எப்படி கெட்டுப்போச்சு. எங்க காலத்திலே அடுப்படியை விட்டு வெளியே வரமாட்டோம். அப்பா.... அண்ணன்.... தம்பி இவங்களிடம் கூட நாலடி தள்ளி நின்னுதான் பேசுவோம். அந்நிய ஆம்பளைங்க கண் முன்னே நடமாட மாட்டோம். இப்போ பாரு எப்படி திரியுதுங்க. இந்த பெண்ணுக்கு நடந்ததை மூடி மறைச்சு அவளை பெத்தவங்க நம்ம வீட்ல கட்டி தர பார்க்கிறாங்களா... இல்லே அவளே பெத்தவங்ககிட்டே இதை மறைச்சிட்டாளா... கலிகாலம்டா சாமி..... எது எப்படியோ, நமக்கு இந்த இடம் வேண்டாம்ப்பா...’’

‘’இதை அப்பா, அம்மாவிடம் நான் எப்படி சொல்லுவேன்? அதனாலேதான் பிடிக்கலேன்னு உங்ககிட்டே சொல்றேன். பாட்டி... கவிதாவை பற்றி நீங்க யாரிடமும் சொல்லிடாதீங்க. பாவம் அந்த பெண் யாரையோ நம்பி ஏமாந்துட்டா. வெளியே தெரிஞ்சா அவள் வாழ்க்கையே பாழாகிவிடும்.’’

‘’ம்ஹும்..... நான் யாரிடமும் சொல்லமாட்டேன். ஏம்ப்பா உன் மனசுக்கு பிடிச்ச மாதிரி வேறு ஏதாவது பெண் இருக்குதா.... இருக்குதுன்னா சொல்லு. அதை பார்த்துடலாம்.’’

‘’ம்.... இருக்குது பாட்டி. ஆனா அப்பா, அம்மா சம்மதிக்கமாட்டாங்களே?’’

‘’யார் அது சொல்லு....? நான் பேசி சம்மதிக்க வைக்கிறேன்.’’

‘’நம்ம வீட்ல முன்னாலே கணக்கு பிள்ளையா வேலை பார்த்தாரே சோமசுந்தரம், அவரோட பெண்ணை நேத்திக்கு நான் பார்த்தேன். என்னை பார்த்ததும் அவளாகவே வந்து பேசினா. அப்பா, அம்மா, பாட்டி எல்லோரும் நல்லா இருக்காங்களான்னு கேட்டா. அவ அப்பா இறந்ததுக்கு அப்புறம் ஒரு கம்பெனியிலே வேலைக்கு போகிறாளாம்.’’

‘’நீ யாரை சொல்றே..... நந்தினியையா?’’

‘’ஆமா பாட்டி.... அவ மேலே விருப்பம்னு சொல்லல. அந்த மாதிரி ஒரு ஏழை பெண்ணை கட்டிக்கிட்டா, நம்ம குடும்பமும் நல்லா இருக்குமேன்னுதான் சொல்ல வர்றேன்.’’

‘’நந்தினி அடிக்கடி என்னையும் உங்க அப்பா, அம்மாவையும் பார்க்க வருவா. சின்ன வயசிலேயே நம்ம வீட்ல விளையாடினவ இல்லையா.... உங்களையெல்லாம் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்னு சொல்லுவா. உனக்கு அவளை பிடிச்சிருக்குது. அவ்வளவுதானே.... மேட்டரை என்கிட்ட சொல்லிட்டே இல்லே. நான் எப்படி இதை சக்சஸ் ஆக்குறேன் பாரு.’’

‘’பாட்டி.... உங்களுக்கு இங்கிலீஷும் தெரியுமா?’’

‘’நீ பேசுறதை கேட்டு கேட்டு பழகினதுதான். இந்த மேட்டரை என்கிட்ட விட்டுட்டே இல்லே..... யூ டோன்ட் ஒர்ரி. நானே உன் பாதர், மதர்கிட்டே பேசி உனக்கு கிரீன் சிக்னல் காட்ட சொல்றேன். ரைட்டா.... நான் பேசின இங்கிலீஷும் ரைட்டா...’’

‘’எல்லாமே ரைட்டுதான் பாட்டி. என்னமோ பண்ணுங்க.’’ பாட்டி பேசின இங்கிலீஷை கேட்டு சிரித்தபடியே சொன்னான்.

பாட்டி யோசிக்க ஆரம்பித்தாள். எதுவும் சரிவரவில்லை. மறுநாள் நந்தினி வந்திருந்தாள்.

‘’வாம்மா....’’ சங்கரின் தாய்லட்சுமி வரவேற்றாள்.

‘’ஆன்ட்டி.... குழுவிலே கொடுக்கிறதுக்காக அம்மா உங்களிடம் இருந்து 5000 ரூபாய் வாங்கினாங்களாமே. அத தந்து அனுப்பினாங்க.’’ ரூபாயை கொடுத்தாள்.

‘’இரும்மா. காபி குடிச்சிட்டு போகலாம்.’’

‘’வேண்டாம் ஆன்டி. நேரமாச்சு அம்மா தேடுவாங்க.’’

‘’அட... நான் இருக்கிறேனில்லே. பாட்டி உன்னை பார்க்கணும்னு சொன்னாங்க, போய் பாரு.’’

இதைக் கேட்டு கொண்டிருந்த காமாட்சி கட்டிலில் போய் படுத்தாள். உள்ளே நந்தினி வருவது தெரிந்தது.

‘’ஐயோ.... அம்மா... அப்பா..... நெஞ்சு வலிக்குதே...’’ என்று உருண்டு புரண்டாள். பக்கத்தில் ஓடியே வந்த நந்தினி பரபரப்போடு...

‘’என்ன பாட்டி.... என்ன செய்யுது?’’ என்றாள்.

‘’நெஞ்சு வலிக்குதும்மா. அதோ அதிலே..... மாத்திரை இருக்குது. எடுத்து தாம்மா....’’ நெஞ்சை பிடித்தவாறே சொல்ல, நந்தினியும் மாத்திரையை எடுத்துக் கொடுத்தவள், அவசர அவசரமாக அடுப்படிக்கு ஓடிப்போய் ஒரு கப்பில் தண்ணீர் எடுக்க....

‘’என்னம்மா நந்தினி...?’’ என்றாள் காபி போட்டு கொண்டிருந்த லட்சுமி.

‘’பாட்டி நெஞ்சுவலியாலே துடிக்கிறாங்க.’’

‘’ஐயோ அத்தே.... உங்களுக்கு என்ன பண்ணுது?’’ என்றபடியே லட்சுமி ஓடிவர, நந்தினி தண்ணீர் கொடுத்ததும் மாத்திரையை விழுங்கினாள். லட்சுமியை பார்த்ததும் கொஞ்சம் அமைதியானவள்,

‘’என்னமோம்மா... திடீர்னு நெஞ்சுவலி வந்துட்டுது. ஏதோ அந்த நேரத்திலே நந்தினி வந்து மாத்திரை தந்ததனால கொஞ்சம் பரவாயில்லே.’’

‘’இப்போ எப்படி இருக்குது அத்தே?’’ நெஞ்சை தடவிவிட்டாள்.

‘’பரவாயில்லேம்மா.... நந்தினி என்கிட்டே வந்து உட்காரும்மா.’’

‘’நந்தினி பாட்டியை பார்த்துக்க, அடுப்பிலே பால் வச்சிருக்கேன்’’ என்றவள் பரபரப்போடு அடுப்படிக்கு சென்றாள்.

சங்கரின் தந்தை சுந்தரம் வந்ததும் லட்சுமி, பாட்டிக்கு நெஞ்சுவலி வந்ததை சொன்னாள். காமாட்சியின் அறைக்கு வந்தார்.

‘’அம்மா! மறுபடியும் நெஞ்சுவலி வந்ததா லட்சுமி சொன்னா... மருந்து மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிடுறீங்க இல்லையா... இப்போ வலி எப்படி இருக்குது?’’

‘’விட்டுடுச்சுப்பா.... நல்ல நேரத்திலே நந்தினி வந்து மாத்திரை எடுத்து தந்தாள்.’’

லட்சுமி காபி கொடுக்க குடித்துவிட்டு நந்தினி கிளம்பினாள்.

‘’பாட்டி.... நான் நாளைக்கு வர்றேன்.’’

‘’கொஞ்ச நேரம் என்கிட்ட இப்படி இரேன்ம்மா.’’

‘’நேரமாகுது இல்லே, அவ போகட்டும்மா.’’ நந்தினியும் சென்றாள்.

‘’ம்.... நந்தினி வந்ததாலேதான் நான் உயிர் பொழைச்சேன். அவ அப்பாவும் நம்ம குடும்பத்தோடு எத்தனை காலம் அன்பா பழகினவர். திடீர்னு நெஞ்சு வலி வந்ததாலே போய் சேர்ந்துட்டார். பாவம்..... இந்த பெண். நல்ல பெண். படிச்ச பெண். எந்த வீட்டுக்கு மருமகளா போய் சேரப் போறாளோ.... எங்கே போனாலும் அந்த வீட்டுக்கு மகாலட்சுமியே குடியேறினது போலத்தான் இருக்கும். நல்ல ஐஸ்வர்யமான பெண். இவளை மருமகளா அடைய எந்த குடும்பத்துக்கு கொடுத்து வச்சிருக்கோ. ஏழை பெண்ணுன்னாலும் அடக்கமும், மரியாதையும், ஒழுக்கமும் உள்ள பெண். மாமனார், மாமியார், புருஷனை அனுசரிச்சு நடப்பா.’’

‘’ஏம்மா.... நந்தினியை பற்றி இவ்வளவு சொல்றீங்களே.... அவளை உங்களுக்கு அவ்வளவு பிடிக்குமா?’’

‘’ஆமா.... ரொம்பவே பிடிக்கும். என் கூடவே வச்சுக்கத்தான் ஆசை. சின்ன பிள்ளையா இருந்தப்போ என் பக்கத்திலேதானே வந்து விளையாடிக்கிட்டு இருப்பா. இப்போ யார் வீட்டுக்கு மருமகளா போகப்போறாளோ?’’

‘’லட்சுமி..... இப்படி வா’’ ரூமை விட்டு வெளியே வந்தார்.

‘’என்னங்க..... எதுக்கு கூப்பிடுறீங்க?’’

‘’நம்ம சங்கருக்கு நாம கவிதாவை பேசி முடிக்கலாம்னு நினைச்சோம். அவன் பதிலே சொல்லலே. நேத்து அம்மாவிடம் பிடிக்கலேன்னு மட்டும் சொன்னானாம். நாம இந்த நந்தினியை பார்த்தால் என்ன?’’

‘’பார்க்கலாம்ங்க..... நல்ல பொண்ணுதான்.’’

‘’காசு, பணம், சீர், நகைன்னு எதுவும் கிடைக்காது.’’

‘’அட..... நீ ஏன்ப்பா அதையெல்லாம் நினைக்கிறே? அவ இந்த வீட்டுக்கு மருமகளா வந்தால் மகாலட்சுமியே வந்தது போலத்தான்.’’ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தனர். காமாட்சிதான்.

‘’அம்மா... நெஞ்சுவலிக்குதுன்னு படுத்திருந்தீங்க....’’

‘’அதெல்லாம் நந்தினி எடுத்து தந்த மாத்திரையிலே சரியா ஆயிடுச்சு.’’ உற்சாகமாக சொன்னாள்.

‘’அம்மா..... நந்தினியை இந்த வீட்டுக்கு மருமகளா ஆக்கிடலாமான்னு யோசிக்கிறோம். சங்கர் என்ன சொல்வானோ....?’’

‘’அதை பத்தி கவலைபடாதே. நான் பார்த்துக்கிறேன். நீயும் லட்சுமியும் நந்தினி வீட்டுக்கு போய் பேசுங்க.’’

‘’அம்மா மணி ஆறு. இப்போ போய் பேசவா?’’

‘’நல்லதை பேச காலம், நேரம் எதுக்கு பார்க்கிறே?’’

‘’அதுவும் சரிதான். லட்சுமி! நீ கிளம்பு போகலாம்.’’

சங்கர் வந்ததும், ‘’பாட்டி, இன்னைக்கு உங்களுக்கு நெஞ்சுவலியா இருந்ததாமே....?’’

‘’அட போடா.... நந்தினியை இந்த வீட்டுக்கு மருமகளா கொண்டு வர வந்த நெஞ்சுவலிதான் அது. எப்படி உன் மேட்டரை சக்சஸ் ஆக்கிட்டேன் பார்த்தியா. உன்னோட அப்பாவும், அம்மாவும் நந்தினி வீட்டுக்குத்தான் கிளம்புறாங்க.’’ சொன்னபடியே சிரிக்க....

‘’அப்படியா சங்கதி’’ என்று சொன்னபடி அவனும் சேர்ந்து சிரிக்க,

‘’அட பாட்டிக்கும், பேரனுக்கும் என்னவாயிற்று? ஏன் இப்படி சிரிக்கிறாங்க?’’ என்று சொன்னபடியே நந்தினிia பெண் கேட்க புறப்பட்டு சென்றனர் லட்சுமியும், சுந்தரமும்.

* * *