ஜாதகப்படி யாருக்கு ரொமான்ஸ் அதிகம்? – ஜோதிடர் என் ஞானரதம்

பதிவு செய்த நாள் : 04 நவம்பர் 2018

மல்லிகை என் மன்னன் மயங்கும் பொன்னான மலர் அல்லவா என்ற பாடலை கேட்டிருப்பீர்கள். அதாவது பொதுவாக மனதை ஈர்க்கக் கூடியது என்னவென்றால் மல்லிகை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கணவன் தன் மனைவியை பார்க்க வீட்டுக்கு வரும் போது மல்லிகை மலரை தங்களின் காதலின் அடையாளமாக கொடுத்து மனைவி அதனை அணிந்து கொள்வதால் இருவருக்கும் மலரின் மனத்தால் இருவரின் மனமும்  மகிழும் வண்ணம் அமையும். மல்லிகைக்கும் ஜாதகத்திற்கும் என்ன தொடர்பு நீங்கள் கேட்பது கேட்கிறது. கணவன் தன் மனைவியை சமாதானம் செய்வதற்கு பெரிதும் பயன்படுவது அதிக விலையில்லா இந்த மல்லிகைதான். இதற்கும் சோதிடத்திற்கும என்னத் தொடர்பு என்றால் சோதிட ரீதியாக சுக்கிரன் தான் காதலுக்கு உண்டான கிரகம் ஆகும். இந்த சுக்கிரனுக்கு உகந்த மலர் என்றால் அது மல்லிகையைத்தான் குறிக்கும். அந்த அளவிற்கு மல்லிகை இருக்கும் இடத்தில் மனம் இருப்பதோடு நல்ல சூழலும் அமையும் என்பதுதான் இதற்கு காரணம். ஆண்கள் பெண்களை கவர இந்த மல்லிகையை உடல் நறுமணம் பெறுவதற்காக மல்லிகை மனம் கொண்ட சென்ட் உபயோகப்படுத்தும் ஆண்களை நாம் காணலாம்.  எதற்கு இவ்வாரெல்லாம் சொல்கிறேன் என்றால் மல்லிகை எப்படி ரொமான்சிற்கு பயன் படுகிறதோ அதே போன்று ஜாதகத்தில் சுக்கிரனுக்கே இந்த ரொமான்ஸிற்கு சொந்தக்காரன் என்பதை புரிய வைக்கத்தான்.  ஒரு சில ஜோடிகளை நாம் பார்க்கும் போது பகலில் எலியும் பூனையுமாக சண்டைப் போட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால், இருவரும் இரவில் ஒன்று சேர்ந்து விடுவர். இதற்கு காரணம் அவர்களின் படுக்கைஸ்தானம் நன்கு அமைந்து இருப்பதே காரணமாகும். அதே போன்று இருவரது ராசியும் நட்பு ராசியாக இருப்பதும் மற்றும் வசிகரிக்கக் கூடிய கிரகங்கள் நன்கு அமைந்து இருப்பதும் அதிகமாக புரிந்து கொள்ளல் மற்றும் அன்பு அதிகரிக்க உதவுகிறது.

அதிக ரொமான்ஸ் மிக்க ராசிக்காரர்கள்

ஜாதகரீதியில் ரொமான்ஸ் உணர்வுகளை தூண்டும் கோள் எது எனில் காதல் நாயகனான சுக்கிரனே இதற்கு மிக முக்கியமான காரணமாகும். மேலும்,  இவர் அனைவரையும் வசியம் செய்யும் கிரகம் என்று கூட சொல்லலாம். அந்த அளவுக்கு காதல் உணர்வுகளை தூண்டுபவர் சுக்கிரனே ஆவார். மேலும்,  இந்த காதல் உணர்வு கொண்ட பொதுவான ராசிகள் என்று கூறும் போது, சுக்கிரனின் ஆதிக்கம் கொண்ட அதாவது சுக்கிரனின் வீடான ரிசபம்,துலாம் போன்ற ராசிகாரர்கள் என்பது ஜோதிட பொதுவிதி. ஆனால் இந்த ராசிக்காரர்களுக்கு  மட்டும் தான் காதல் உணர்வுகள் இருக்குமா என்று கேட்டால் நிச்சயம் இல்லை என்றே கூறலாம். பன்னிரெண்டு ராசிக்காரர்களுக்கும் ரொமான்ஸ் இருப்பதை நாம் அனுபவத்தில் காணலாம். இதற்கு காரணம் அவரவர்களின் ஜாதக கிரக அமைப்பே காரணமாகும். முன்பு சொன்னது போல் சுக்கிரனின் வீடான ரிசபம், துலாம் போன்ற ராசிகளில் பிறந்தவர்களில் ஒரு சிலருக்கு காதல் உணர்வுகள் அதிகம் இருக்கிறது. இதற்கு காரணம் சுக்கிரன் வீடு மட்டும் அல்லாது அவரவர்களின் ஜாதகத்தில் படுக்கைஸ்தானம் ஐந்தாம் இடம் மனோகாரகனான சந்திரன் நிலை மற்றும் சுக்கிரனும் நல்ல நிலையில் இருப்பதே காரணமாகும். பொதுவாக, நல்ல புரிதல் என்பது மணவாழ்விற்கு மிக மிக இன்றியமையாத ஒன்று. இந்த ராசி மற்றும் நல்ல கிரக அமைப்பு இருப்பதினால் அவர்களிடம் ஒருவரை ஒருவர் அதிகம் விரும்புவதற்கும் விட்டுக் கொடுப்பதற்கும் இந்த ரொமான்ஸ் உணர்வு உதவுகிறது. இருவரிடமும் அதிக நெருக்கம் இருக்கும் போதுதான் அவர்களிடம் புரிந்து கொள்ளுதல் என்பது அதிகரிப்பதற்கும் சந்திரன் மற்றும் சுக்கிரன் முக்கியப்பங்கு வகிக்கின்றது.

நட்பு ராசிகள்

நட்பு ராசிகளை இருபிரிவாக பிரிக்கலாம். இந்த  கீழே கொடுக்கப்பட்டுள்ள ராசிகளில் பிரிவு 1 ல் உள்ள ராசிகள் அனைத்தும் ஒன்றுக் கொன்று நட்பு ராசிகள். பிரிவு 2 உள்ள ராசிகள் அனைத்தும் ஒன்றுக் கொன்று நட்பு ராசிகள் ஆகும்.  பிரிவு 1: மேஷம், கடகம், சிம்மம், விருச்சிகம், தனுசு, மீனம். பிரிவு 2:  ரிசபம், மிதுனம், கன்னி, துலாம், மகரம், கும்பம். குறிப்பு:  மேலே கொடுக்கப்பட்டுள்ள ராசிகளை மட்டும் கருத்தில் கொள்ளாமல் அவர் அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக அமைப்பையும் கொண்டுதான் தீர்மானிக்க வேண்டும். அவை நன்கு அறிந்த ஜோதிடருக்குத்தான் தெரியும் என்பதால் நீங்களே நட்பு ராசிதானே என்று தேர்ந்தெடுத்து பின்பு வருந்த வேண்டாம். காரணம் இருவரின் ஜாதகத்தில் லக்னம்,  ஆயுள் ஸ்தானம் மற்றும் அனைத்து வகையான ஸ்தானங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, ஒரு தம்பதியரில் இருவரில் ஒருவர் ரிசப ராசியாகவும் மற்றொருவர் கும்ப ராசியாகவும் இருப்பதும் மற்றும் களத்திரகாரகன் சுக்கிரன் நல்ல இடத்தில் அமைந்து இருப்பதும் மற்றும் இருவரின் ஜாதகத்தில் கிரகங்கள் நல்ல நிலையில் இருப்பதும் மேலும், சுக்கிரன் இருவரது ஜாதகத்தில் நல்ல நிலையில் இருப்பதும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள ஏதுவாகிறது. மேலும், ஒருவர் ஜாதகத்தில் களத்திரகாரகனான சுக்கிரனும், ராசியும் மட்டும் தீர்மானிக்கவில்லை. கணவன் அல்லது மனைவி ஸ்தானமான 7 ம் இல்லம், நட்சத்திரங்கள், குடும்ப ஸ்தானமான 2 ம் இல்லம், 5 ம் இடமான புத்தி ஸ்தானம் அவற்றில் அமையக் கூடிய கிரகங்களின் தன்மை, கிரகங்கள் வாங்கிய நட்சத்திரச் சாரங்கள் மற்றும் மேற்கூறிய இடங்களில் மறற கிரகங்களின் பார்வை ஆகியவையும் காரணமாகும். மேலும் சுக்கிரன் வலுபெற்று (ஆட்சி, உச்சம், நட்பு, திரிகோணம், கேந்திரம்) இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். வெறும் ரொமான்ஸ் உணர்வுகள் மட்டும் இருந்தால் போதுமா? அதில் உறுதியுடன் இருக்க மனோகாரகனான சந்திரனும், 5 ம் இடமான புத்திஸ்தானமும் இருவருக்கும் சிறப்பாக இருந்தால்தான் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியாமல் இருப்பதற்கு வழிவகுக்கின்றது.

* * *