20 தொகுதி இடைத்தேர்தல் : கலக்கத்தில் அரசியல் கட்சிகள்

பதிவு செய்த நாள் : 03 நவம்பர் 2018

கட்சி மாறல் தடைச்சட்டத்தின் அடிப்படையில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை, சபாநாயகர் தனபால், தகுதி நீக்கம் செய்தது சரிதான் என மூன்றாவது நீதிபதியும் தீர்ப்பளித்து விட்டதால், இந்த 18 தொகுதிகள், ஏற்கனவே காலியாகவுள்ள திருவாரூர், திருப்பரங்குன்றம் ஆகிய 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தொகுதி காலியான தகவல் வெளியான தினத்திலிருந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

வருகிற 2019 மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நாடாளுமன்றத் தேர்தலுடன், 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலையும் சேர்ந்தே நடத்துவார்களா? அல்லது முன்னதாகவே, ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படுமா? என்பதுதான் இப்போதைக்கு தமிழ்நாட்டு அரசியலின் ‘ஹாட்’ டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

தேர்தல் என்றாலே எப்போதும் முன்னணியில் உள்ள அதிமுக, இப்போதும் 20 தொகுதிகளுக்கான தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களை நியமித்து களம் இறங்கி விட்டது. சிறிய தொகுதிகளுக்கு 4,5 பேர், பெரிய கொஞ்சம் சிக்கலான தொகுதிகளுக்கு 9, 10 பேர் என துணை முதலமைச்சர் தொடங்கி, அமைச்சர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை பொறுப்பாளர்களாக நியமித்து அவர்களுக்கு தக்க ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே, நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்த திமுக, அவர்களுக்கு கீழ் பணியாற்றும் வகையில் 20 தொகுதி பொறுப்பாளர்களையும் விரைவில் நியமிக்க திட்டமிட்டுள்ளது. விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் எப்போது தேர்தல் வந்தாலும் தேர்தலை சந்திக்க திமுக தயார் நிலையில் இருப்பதாகவும் திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

18 எம்.எல்.ஏக்கள் தொடர்பான வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் மாறுபட்ட தீர்ப்பு வந்த நிலையில், மூன்றாவது நீதிபதியின் தீர்ப்பு, தங்களுக்கு சாதகமாக வரும் என தினகரனும், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களும் பெரிதும் நம்பியிருந்தனர். ஆனால், அந்த தீர்ப்பு, தங்களுக்கு எதிராக வந்ததும், பதவி இழந்த 18 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று விரும்பினர். அவர்களின் முடிவு எதுவோ அதன்படிதான் செயல்படுவோம் என்று தினகரனும் தெரிவித்திருந்தார். ஆனால், இரண்டொரு நாட்களிலேயே அந்த முடிவு மாற்றப்பட்டது. சட்ட ஆலோசனை, எம்.எல்.ஏக்கள், தொகுதி மக்களின் கருத்து கேட்பு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி மேல் முறையீடு முடிவை கை விட்டு தேர்தலை சந்திப்பது என தினகரன் முடிவெடுத்து விட்டார்.

ஏற்கனவே, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அளித்த தீர்ப்பு, 3வது நீதிபதி அளித்த தீர்ப்பு ஆகிய இரண்டும் தங்களுக்கு எதிராக வந்த நிலையில், மேல்முறையீடு செய்து மேலும் கால தாமதத்தை உருவாக்காமல், இடைத் தேர்தலை சந்திப்பது என்ற முடிவுக்கு தினகரன் தரப்பினர் வந்து, அதற்கான பணிகளை தொடங்கிவிட்டனர்.

பதவி இழந்த 18 எம்.எல்.ஏக்களும் தகுதி இழப்புக்கு ஆளாகி இருப்பதால், இவர்கள் மீண்டும் இப்போது தேர்தலில் போட்டியிட முடியுமா? என்பதிலும் இருவேறு கருத்துக்கள் உள்ளன.

இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் கட்சி மாறல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டிருப்பதால், தற்போது ‘அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்’ என்ற தனி அமைப்பில் நிர்வாகிகளாக உள்ள நிலையில் இக்கட்சியின் சார்பாக போட்டியிடலாம் என்று ஒரு தரப்பும் ‘தகுதி இழப்பு’க்கு ஆளான இவர்கள் மீதமுள்ள மூன்றாண்டுகள் (2021) வரை தேர்தலில் நிற்க முடியாது என்று மற்றொரு தரப்பும் கூறுகின்றனர். ஆனாலும், எப்போது தேர்தல் வந்தாலும் 20 தொகுதிகளிலும் நாங்களே வெற்றி பெறுவோம் என்று தினகரனும் அவரது எம்.எல்.ஏக்களும் உறுதிபடக் கூறுகின்றனர். அரசியலில் தாங்கள் தவிர்க்க முடியாத சக்தி என்பதை நிரூபிக்கும் வகையில் அதிக தொகுதிகளில் அமமுக வெற்றிபெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

சட்டமன்றம், நீதிமன்றத்தைவிட மக்கள் மன்றம் பெரியது, இதில் மக்களின் முழு நம்பிக்கையை பெற்று நாங்கள் வெற்றி பெறுவோம் என அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஆளும் கட்சியான அண்ணா திமுகவுக்கும் இது கடுமையான சோதனைக் களம்தான். மொத்த மெஜாரிட்டியில் ஒன்றிரண்டு எம்.எல்.ஏக்கள் மட்டுமே கூடுதலாக இருப்பதால், சுமார் 10க்கும் மேற்பட்ட தொகுதிகளிலாவது வெற்றி பெற வேண்டிய கட்டாயம். ஆட்சி 2021வரை நீட்டிருப்பதற்கு வலுவான  எண்ணிக்கையை அதிகரிக்கும் தீவிரத்தோடு இவர்கள் தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டும்.

தி.மு.க.வின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள நிலையில் ஸ்டாலின் சந்திக்கும் முதல் மினி பொதுத்தேர்தல்தான் இந்த இடைத்தேர்தல், இதில் அதிமுக, அமமுகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்றே தீர வேண்டிய  கட்டாயம் உள்ளது.

அப்போதுதான் கட்சியினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் ஸ்டாலின் மீது நம்பிக்கை பிறக்கும். ஒருவேளை 20 தொகுதிகளிலும் திமுகவுக்கு வெற்றி கிடைத்துவிட்டால், ஸ்டாலின் கைக்கு ஆட்சி அதிகாரம் வரவும் வாய்ப்பு உண்டு. அதனால், 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் என்பது அதிமுக, திமுக, அமமுக ஆகிய மூன்று கட்சிகளுக்குமே மிகப்பெரிய பலப்பரீட்டைதான். அதனால்தான் இந்த கட்சிகள் எல்லாமே கலக்கத்தில் உள்ளன.

***