இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 7ம் தேதி கூடுகிறது : சபாநாயகர் கரு. ஜெயசூர்யா அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 02 நவம்பர் 2018 16:15

கொழும்பு,

இலங்கை நாடாளுமன்றத்தை நவம்பர் 7ம் தேதி (புதன்கிழமை) கூட்ட  அதிபர் மைத்திரிபால் சிறிசேனா முடிவு செய்துள்ளதாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா இன்று அறிவித்தார்.


நவம்பர் 5ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இலங்கையில் கடந்த அக்டோபர் 26ம் தேதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பதவி நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக முன்னாள் அதிபர் ராஜபக்‌ஷே பிரதமராக பதவி ஏற்றார்.

இதை ஏற்காத ரணில் விக்கிரமசிங்கே நாடாளுமன்றத்தில் தன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டி நாடாளுமன்றத்தை கூட்டும் படி அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை வலியுறுத்தினார்.

அதை ஏற்க மறுத்த சிறிசேனா நவம்பர் 16ம் தேதி வரை நாடாளுமன்றத்தையும் முடக்கினார்.

சிறிசேனாவின் இந்த நடவடிக்கைக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. நாடாளுமன்றத்தை கூட்டும்படி கோரி ரணில் விக்கிரமசிங்கே உட்பட பல எம்.பிக்கள் சபாநாயகர் கரு ஜெயசூர்யாவுக்கு கடிதம் அனுப்பினர்.

அதை தொடர்ந்து கரு ஜெயசூர்யா நாடாளுமன்றத்தை கூட்டும்படி அதிபர் சிறிசேனாவை வலியுறுத்தினார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் கரு ஜெயசூர்யா நவம்பர் 7ம் தேதி இலங்கை நாடாளுமன்றம் கூடும் என அறிவித்தார்.

அதிபர் சிறிசேனா நேற்று இரவு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த தகவலை தன்னிடம் தெரிவித்ததாக கூறினார்.

இலங்கை நாடாளுமன்றம் நவம்பர் 5ம் தேதி கூடும் என அதிபர் சிறிசேனா அறிவித்ததாக நேற்று தகவல்கள் வெளியானது. ஆனால் மகேந்திர   ராஜபக்‌ஷே ஆதரவாளர்கள் இதை மறுத்தனர். இந்த சூழ்நிலையில் கரு ஜெயசூர்யா இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கை நாடாளுமன்றம் 7ம் தேதி கூடும் என்று சபாநாயகர் அறிவித்தாலும் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ராஜபக்‌ஷேவுக்கு எதிராக தீர்மானம்

இலங்கையின் பிரதமராக மகேந்திர ராஜபக்‌ஷே நியமனத்திற்கு எதிராக 118 எம்.பிக்கள் தீர்மானம் நிறைவேற்றி அதற்கான ஆவணத்தை சபாநாயகர் கரு ஜெயசூர்யாவிடம் இன்று ஒப்படைத்தனர்.

மகேந்திர ராஜபக்‌ஷே பிரதமராக பொறுப்பேற்றது இலங்கை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. அதனால் அவரது நியமனத்தையும் பிரதமராக அவர் எடுக்கும் முடிவுகளையும் ஏற்க முடியாது என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.