தீபாவளி நாளில் குபேரனை வழிபடுங்க!

பதிவு செய்த நாள் : 30 அக்டோபர் 2018
செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி குபேரர் சென்னை வண்டலூர் ரத்தினமங்கலத்தில் வீற்றிருக்கிறார். தீபாவளி நாளில் இவரை வழிபட்டால், வளமான வாழ்வு அமையும்.

தல வரலாறு: பிரம்மாவின் புத்திரரான புலஸ்தியருக்கும், திருவண விந்துவின் புத்திரிக்கும் விஸ்வாரா என்பவர் பிறந்தார். இந்த விஸ்வாராவின் மகனே குபேரன். இவரது மாற்றாந்தாயின் பிள்ளையாக பிறந்தவன் ராவணன். முதலில் இலங்கையின் அதிபதியாக இருந்தவர் குபேரனே. அவரிடம் இருந்து ராவணன் ஆட்சியைக் கைப்பற்றினான்.

குபேரனின் விமானம் எங்கு சென்றாலும் தங்கம், நவரத்தினங்களை சிந்தியபடி செல்லும். குபேரன் இலங்கையை விட்டு வெளியேற்றப்பட்டதால், ராவணனும் வாழ்வில் சோதனைகளைச் சந்தித்தான். குபேரன் சிவபக்தனாக இருந்தான்.  கடுந்தவம் புரிந்து சிவனை வழிபட்டார்.

அவரது பக்திக்கு மெச்சிய சிவனும், பார்வதியுடன் காட்சி தந்தார். அழகே வடிவான பார்வதியைக் கண்ட குபேரன், 'ஆகா.... இப்படி ஒரு தேவியை இதுநாள் வரை பார்த்ததில்லையே' என்று எண்ணினான். இதையறிந்த பார்வதி கோபம் கொண்டாள்.

குபேரனின் பார்வையை மறையச் செய்தாள். குபேரன் மன்னிப்பு கேட்க, பார்வதியும் மன்னித்தாள். ஆனால், போன கண் போனதுதான் என்றாலும், அதற்குப் பதிலாக சிறிய கண் ஒன்றை தோன்றும்படி செய்தார் சிவன்.

அத்துடன் சிவன் குபேரனின் பக்தியை வியந்து எட்டு திசைக் காவலர்களில் ஒருவராக நியமித்தார். லட்சுமிதேவியும் குபேரனை தன தானியத்தின் அதிபதியாக்கினாள். பணம், தானியத்தைக் கண்காணிக்கும் பொறுப்பை வழங்கினாள்.

லட்சுமி குபேர பூஜை: சிரித்த முகம், இடது கையில் சங்க நிதி, வலது கையில் பதும நிதி அடங்கிய கலசத்தை அணைத்துக் கொண்டு அன்னை லட்சுமி, துணைவி சித்தரிணீயுடன் குபேரன் காட்சியளிக்கிறார். மகாலட்சுமி, குபேரரை ஒருசேர தரிசித்தால் செல்வ வளம் உண்டாகும். இழந்த பணம், சொத்து விரைவில் கிடைக்கும்.

திருப்பதி செல்லும் முன் இத்தலத்தில் தரிசிப்பது சிறப்பு. வளமான வாழ்வு பெற பவுர்ணமி, அமாவாசை நாட்களில் லட்சுமி குபேர பூஜை நடத்துகின்றனர்.

விருப்பம் நிறைவேற குபேரருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்துகின்றனர். பிராகாரத்தில் லட்சுமி கணபதி, குபேர லிங்கம், பைரவர், அரைக்காசு அம்மன், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. கோசாலையும் உள்ளது.

குபேர மந்திரம்

‘ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய

தனதாந்யாதி பதயே தன தான்ய

ஸம்ருத்திம்மே தேஹி தபாய ஸ்வாஹா!’

என்ற குபேர மந்திரத்தை தினமும் சொல்லி வழிபட்டால் செல்வ வளம் பெருகும். வியாழனும், பூச நட்சத்திரமும் சேர்ந்து வரும் நாளில் இதை ஜெபிப்பது நல்லது.

இருப்பிடம்: சென்னை வண்டலூரில் இருந்து கேளம்பாக்கம் சாலையில் 9 கி.மீ.,

விசேஷ நாட்கள்: தீபாவளி, அட்சய திரிதியை, வைகுண்ட ஏகாதசி.

நேரம்: அதிகாலை 5.30 -– மதியம் 12.00 மணி; மாலை 4.00 -– இரவு 8.00 மணி. 

அருகிலுள்ள தலம்: 34 கி.மீ.,ல் சதுரங்கப்பட்டினம் மலைமண்ட லப்பெருமாள் கோயில்.