உடல்பருமன் தவிர்ப்போம்

பதிவு செய்த நாள் : 23 அக்டோபர் 2018

 உலகளவில் மக்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் இன்று மக்கள் மத்தியில் உடல் பருமன் பூதாகரமான பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

உடல் பருமன் என்பது இன்று உடல்நல பிரச்சனையாக மட்டுமன்றி சமூக அளவிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

சமூக மாற்றத்தால் ஏற்பட்டுள்ள உடல் பருமன் பிரச்சனை இன்று அந்த சமுதாயத்தின் மனநிலை மற்றும் கண்ணோட்டத்தையே மாற்றி அமைத்து வருகிறது என்பது தான் நிதர்சனம்.

சராசரி உடல் எடை 

ஒருவர் குண்டு என்று கண்டுபிடிப்பது எப்படி?

ஒரு மனிதனின் சராசரி உடல் எடையை கணக்கிடுவது மிகவும் சுலபம். உங்கள் உயரத்தை சென்டி மீட்டரில் அளவு எடுத்து அதில் நூறை (100) கழித்தால் கிடைப்பதே உங்கள் சராசரி எடை.

உதாரணமாக 160 சென்டி மீட்டர் உயரம் கொண்ட ஒருவரின் சராசரி எடை 60 கிலோ ஆகும்.

இந்த சராசரி எடையில் இருந்து 10 கிலோவுக்கு அதிகமாக உடல் எடை இருந்தால் அவர் குண்டு என்று அர்த்தம். சராசரி எடையை விட 20 கிலோ அல்லது அதற்கும் அதிகமாக இருந்தால் அவர் உடல் பருமன் உடையவராக கருதப்படுவார்.

அதேப்போல் ஒருவரின் உயரத்தை மீட்டர் சதுரத்தில் பெருக்கி அதை உடல் எடையுடன் வகுக்க வேண்டும் (Weight / Height in m2). அப்படி செய்யும் போது உங்களின் பி.எம்.ஐ (Body Mass Index) கிடைக்கும். உங்களின் பி.எம்.ஐ 24 அல்லது அதற்கு மேல் இருந்தால் நீங்கள் உடல் பருமன் வகையில் சேருவீர்கள்.

உடல் பருமன் பிரச்சனைக்கான காரணங்கள்

ஒருவருக்கு உடல் எடை அதிகரிக்க பல வகை காரணங்கள் உள்ளன.

சிலருக்கு மரபணு ரீதியாக உடல்பருமன் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுக்கு உடல் பருமன் பிரச்சனை இருந்தால் அடுத்த தலைமுறையினருக்கும் உடல் பருமன் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

சில உடல்நல கோளாறுகளால் உடல் எடை அதிகரிக்கும். ரத்தசோகை, தைராய்டு போன்ற ஹார்மோன் பிரச்சனைகள் உள்ளவர்கள், கர்ப்ப பையில் நீர்கட்டிகள் உள்ளவர்களுக்கு உடல் எடை கூடும்.

சில உடல் நல பிரச்சனைகளுக்கு மருத்துவர்கள் அளிக்கும் மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவாக சிலருக்கு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மாறிவரும் சமூக வாழ்க்கை முறை

மேற்கூறிய காரணங்களால் உடல் எடை அதிகரிக்கும் என்றாலும் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பலருக்கும் இன்று உடல்பருமன் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாறுதலே ஆகும்.

நம் முன்னோர்கள் உணவே மருந்து என்று வாழ்ந்து காட்டினர். ஆரோக்கியத்துக்காக மட்டுமே உணவை உண்டு அதற்கேற்ற உடல் உழைப்பில் ஈடுபட்டதால் அன்று உடல் பருமன் போன்ற எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இன்றோ ஆரோக்கியமில்லாத உணவை வெறும் ருசிக்காக மட்டுமே சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருகிறது. சத்தான காய்கறி, பழங்கள் சாப்பிடும் பழக்கம் குறைந்து வருகிறது. 

டீவியில் வரும் விளம்பரங்களை பார்த்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கொழுப்பு, சர்க்கரை மற்றும் உடல்நலனை கெடுக்கும் ரசாயனங்கள் அதிகம் உள்ள உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். இந்த பழக்கம் கிராமப்புறங்களிலும் அதிகரித்து வருவது வேதனை தரும் செய்தி.

குடும்பத்தில் அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து தட்டில் உள்ள உணவை ரசித்து சாப்பிடும் காலம் இன்று மாறிவிட்டது. வீடுகளில் அனைவரும் இன்று டீவி மற்றும் மொபைல் போனை பார்த்தப்படி சாப்பிடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.

அதனால் நாம் உணவில் கவனம் இல்லாமல் அதை ருசித்து நன்றாக மென்று சாப்பிடாமல் அப்படியே விழுங்குகிறோம். அதனால் நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துகள் உடம்பில் அதிகம் சேராமல் போக வாய்ப்புண்டு.

குறையும் உடல் உழைப்பு

மக்கள் மத்தியில் இன்று உடல் உழைப்பு மிகவும் குறைந்துவிட்டது. அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து பார்க்கும் வேலை செய்வோருக்கு உடல் உழைப்பு குறைகிறது.

மேலும் ஐடி, கால்சென்டர்கள், காவல்துறை, மருத்துவம் போன்ற துறைகளில் பணியாற்றுபவர்களால் சரியான நேரத்துக்கு உணவு உண்ண முடிவதில்லை. குறைவான உடல் உழைப்பு, காலம் நேரம் தவறி உணவு உண்ணும் பழக்கம் ஆகியவற்றால் பலருக்கு உடல் எடை அதிகரிக்கிறது.

அதை தவிர இன்று மக்கள் மத்தியில் டீவி, மொபைல் போன்களில் நேரத்தை வீணடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதனால் வெளியே சென்று விளையாடுவது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகள் அனைத்து வயதினரிடையேயும் குறைந்துவிட்டது.

நகர்ப்புறங்களில் குழந்தைகள் விளையாட போதிய இடமில்லாத காரணத்தால் குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே முடங்கிவிடுகிறார்கள். அதனால் குழந்தைகள் ஆடி ஓடி விளையாடி களைத்த நாட்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறைந்து வருகின்றன.

இதுபோன்ற காரணங்களால் அதிக அளவு உணவு குறைவான உடல் உழைப்பு என்ற நிலை பரவலாக  வந்துவிட்டது. அதனால் இன்று உலகம் முழுவதும் உடல் பருமன் பிரச்சனை பூதாகரமாக உருவெடுத்துள்ளது.

மது பழக்கம்

உடல் எடை அதிகரிக்க மோசமான ஒரு காரணம் என்று கூறினால் அது மது பழக்கம்தான். இன்று பெரியவர்கள் மட்டுமல்ல 8 வயது முதல் 16 சிறுவர்களும் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உடல்பருமன் , ரத்த கொதிப்பு போன்ற உடல்நல பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள் என ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் பல நாடுகளில் இந்த பிரச்சனை உள்ளது. இந்தியாவிலும் இன்று குடிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

டில்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் பெற்றோர்களை பார்த்து பல குழந்தைகள் குடிப்பழக்கத்திற்கு ஆளாவதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் உடல் பருமன்

வறுமை நிறைந்த இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் போதிய உணவின்றி தவித்து வருகிறார்கள். அதேசமயம் நம் நாட்டில் உடல் பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவது ஆச்சரியம் கலந்த உண்மை.

சமீப கால ஆய்வுகளின் படி இந்தியாவில் குழந்தைகள் மற்றும் பதின் பருவத்தினரும் உடல்பருமன் பிரச்சனையால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலக அளவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

இந்தியாவில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளில் சுமார் 5.74 முதல் 8.82 சதவீதம் பேருக்கு உடல் பருமனாக உள்ளது. அதே போல் தெற்கிந்தியாவின்  நகரப்பகுதிகளில் 13 முதல் 18 வயது வரையிலான பதின் பருவத்தினரில் ஆண்கள் 21.4 பேர் மற்றும் பெண்கள் 18.5 சதவீதம் பேருக்கு அதிக உடல் எடை அல்லது உடல் பருமன் உள்ளது.



இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் 14 கோடியாகும்.

மத்திய அரசு  வெளியிட்ட தேசிய குடும்ப நல கணக்கெடுப்பின் படி தமிழ்நாட்டில் 15 முதல் 49 வயது ஆண்களில் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள் 28.2 சதவீதமாக உள்ளனர். பத்தாண்டுகளுக்கு முன் இது 14.5 சதவீதமாக இருந்தது.

அதேப்போல் தமிழகத்தில் உடல்பருமனால் பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 30.9 சதவீதமாக உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன் உடல் பருமன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை 20.9 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கணக்கெடுப்பில் நகர்ப்புறத்திலும் கிராமப்புறத்திலும் உடல் எடை அதிகரிப்பால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட ஒரே அளவில் தான் உள்ளது என தெரியவந்ததுள்ளது.

உடல்நல பாதிப்புகள் 

உடல்பருமன் பலவகை நோய்களுக்கு ஆரம்பக்கட்டமாக அமைந்துவிடுகிறது. உடல் பருமன் உள்ளவர்களுக்கு சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, புற்றுநோய், மாரடைப்பு, ஹார்மோன் பாதிப்புகள் போன்ற பலவகையான உடல்நல பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

உடல் பருமன் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க மேற்கூறிய நோய்களின் தாக்கமும் இந்தியாவில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. இந்த நோய்கள் வயது வரம்பு இன்றி குழந்தைகளையும் அதிகம் பாதிக்கிறது.

வரலாற்று ஏடுகளில் உள்ள விவரங்கள் படி ஒருகாலத்தில் இந்தியாவில் நீரிழிவு நோய், ரத்த கொதிப்பு போன்ற பல உடல்நல பிரச்சனைகள் மிகவும் அரிதாகவே காணப்பட்டன ஆனால் இன்று அத்தகைய உடல்நல பாதிப்புகளில் இந்தியா உலகளவில் முதல் இடத்தில் இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

உடல் எடை குறைக்க

நம் உடல் எடையை குறைத்து ஆரோக்கியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமை மற்றும் விடா முயற்சி.

சரியான உணவுமுறை மற்றும் உடற்பயிற்சிகளை பொறுமையாக தொடர்ந்து மேற்கொண்டால் சில மாதங்களிலேயே உடல் எடை குறையும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். உடல் எடை குறைப்பதை விட அதை தொடர்ந்து பராமரிப்பது அதை விட முக்கியம்.

உணவுமுறை 

குண்டாக உள்ளவர்கள் தங்கள் உடல் எடையை சராசரி எடைக்கு கொண்டு வர சீரான உணவுமுறையை மேற்கொள்ள வேண்டும். சாப்பிடும் உணவை சரியான காலநேரத்துக்குள் சாப்பிடுவது மிக அவசியம்.

குறைந்த அளவு உணவை சாப்பிடுவதால் உடல் எடை குறையாது. நம் உடல் செயல்பட தேவையான ஊட்டச்சத்துகளை தினமும் நாம் சாப்பிட வேண்டும்.  இந்த விஷயத்தை எந்த காரணத்துக்காகவும் புறக்கணிக்க கூடாது.

நார்ச்சத்து கொண்ட உணவுகள்

உடல் எடையை குறைக்கும் போது ஏற்பட கூடிய பிரச்சனைகளில் முக்கியமான ஒன்று அதீத பசியை கட்டுப்படுத்துவது. நார்ச்சத்து கொண்ட உணவுகளை அதிகம் சாப்பிடும் போது இந்த பிரச்சனை தீரும். நார்சத்து நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்படும். அதனால் தேவைக்கு அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.

சிறுதானியங்கள், கொண்டை கடலை, காராமணி போன்ற பயிறுவகைகளை தினமும் அல்லது வாரத்துக்கு 4 முறையாவது சாப்பிட வேண்டும். இவற்றில் வகைவகையான ருசியான சிற்றுண்டிகளை செய்து சாப்பிட முடியும். அதனால் பத்திய உணவு உண்கிறோம் என்ற எண்ணம் வர வாய்ப்பில்லை. உடம்பைக் குறைக்கிறேன் என்று பட்டினி கிடப்பதால் பலனில்லை. உடல் ஆரோக்கியம் கெட்டுவிடும்.

இந்த உணவுகளில் உடலுக்கு தேவையான மாவு மற்றும் புரத சத்து உள்ளன. எனவே இவற்றை சாப்பிடும் போது நம் பசி அடங்குவதோடு உடலுக்கு தேவையான சக்தியும் கிடைக்கும்.

அதை தவிர நார்சத்துகள் அதிகம் கொண்ட கீரை, காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை அதிகம் சாப்பிட வேண்டும். அந்தந்த பருவநிலைக்கு கிடைக்கும் காய்கறி பழங்களை உணவில் தவறாமல் சேர்த்து கொள்வது நலம். இதன் மூலம் உடலுக்கு தேவையான வைட்டமின் மற்றும் தாது உப்புகள் கிடைக்கும்.

கீரை, காய்கறிகளை எண்ணெய்யில் பொரிக்காமல் வேகவைத்து பருப்புடன் சேர்த்து கூட்டு, மசியல் என சாப்பிட வேண்டும். சாலட் ஆகவும் எடுத்துகொள்ளலாம்.

பாரம்பரியத்துக்கு திரும்புவோம்

நம்  தென்னிந்திய பாரம்பரியப்படி சாதத்துடன் நிறைய காய்கறி, கீரைகளை சாப்பிடுவது வழக்கம். ஆனால் இன்று அந்த வழக்கம் குறைந்து வருகிறது.

சில நேரங்களில் காய்கறிகளை சுத்தமாக தவிர்த்துவிட்டு உணவுடன் சிப்ஸ், ஊறுகாய், வடை, பஜ்ஜி, சமோசா போன்ற எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடுகிறார்கள். இதுவே உடல் எடை அதிகரிக்க காரணமாகிவிடுகிறது.

எனவே காய்கறி பழங்களை அதிகம் உணவில் சேர்த்து கொள்வதன் அவசியத்தை அனைவரும் உணர வேண்டும். உணர்வதோடு மற்றும் நின்றுவிடாமல் நம் பாரம்பரிய உணவுமுறையை பின்பற்ற வேண்டும்.

50 ஆண்டுகளுக்கு முன் வழக்கத்தில் இருந்த பல சத்தான உணவுகள் இன்று மறைந்து வருகின்றன. கேழ்வரகு கூழ், வரகு அரிசி சாதம், உளுந்து சாதம், கொள்ளு சுண்டல், கீரை அடை, சத்து உருண்டை போன்ற பலவகையான தமிழ் பாரம்பரிய உணவுகளை மீண்டும் வழக்கத்தில் கொண்டு வர வேண்டும்.

ரசாயனம் சேர்த்த வெள்ளைச் சர்க்கரையை தவிர்த்து இயற்கையான தேன், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்றவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

நேரம் தவறாத உணவு

உடல் பருமன் கொண்ட பலருக்கு கொழுப்பு மிக்க உணவை அதிகம் சாப்பிடுவதால் மட்டுமே உடல் எடை கூடுவதில்லை. வாழ்க்கை முறை காரணமாக கால நேரம் தவறி சாப்பிடுவதாலும் பலருக்கு உடல் எடை அதிகரித்துவிடுகிறது.

உணவை உரிய நேரத்தில் சாப்பிடும் போது அந்த உணவு நன்றாக ஜீரணமாகும். இல்லையென்றால் உடலில் சேராமல் வீணாக வெளியேறிவிடும்.

காலை உணவை 9 மணிக்குள் அல்லது குறைந்தபட்சம் 10 மணிக்குள் சாப்பிடவேண்டும். அதேபோல் மதிய உணவை 2 மணிக்கு முன்னதாகவும் இரவு உணவை ராத்திரி 9 மணிக்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டும்.

நேரம் தவறி உண்ணும் போது உடலின் ஜீரண சக்தி மந்தமாகிவிடும். அதனால் உடல் சோர்வடையும். உடம்பில் தேவையற்ற கொழுப்புகள் சேரும். முக்கியமாக இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடும் போது அஜீரண கோளாறுகள் ஏற்படும்.

மேலும் காலை மற்றும் மதியம் தேவையான அளவு நிறைவாக  சாப்பிடவேண்டும். இரவு சிறிது குறைவாக சாப்பிட வேண்டும். ஏனென்றால் இரவில் உடலின் இயக்கம் காலை பொழுதில் இருப்பது போல் வேகமாக இருக்காது, எனவே எளிதில் ஜீரணமாகக்கூடிய எளிமையான உணவுகளை இரவு நேரத்தில் சாப்பிடுவது நலம்.

அசைவ உணவுகளில் முட்டை, மீன், மற்றும் இறால், நண்டு போன்ற கடல் உணவுகளை நன்றாக சாப்பிடலாம். கோழி மற்றும் மட்டன் இறைச்சியை அளவாக சாப்பிட வேண்டும்.

எந்த உணவு வகைகளையும் முழுமையாக எண்ணெய்யில் பொரிக்காமல் வேகவைத்து லேசாக தாளித்து சாப்பிட வேண்டும். முக்கியமாக வேகவைத்து சாப்பிடும் போது அவற்றில் உள்ள புரத சத்து முழுமையாக உடலில் சென்று சேரும்.

தவிர்க்க வேண்டிய உணவுகள்

கரையாத கொழுப்புகள் நிறைந்த துரித உணவுகளை மக்கள் தவிர்க்க வேண்டும். ஆசைக்காக எப்போதோ ஒரு முறை சாப்பிடலாம். ஆனால் அவற்றை தினமும் சாப்பிடும் வழக்கத்தை விட்டொழிப்பது நல்லது.

பீட்சா, பர்க்கர், சமோசா போன்ற சாட் உணவுகள், குளிர்பானங்கள், மைதா போட்டு செய்யப்பட்ட பரோட்டா போன்ற சிற்றுண்டிகளை தவிர்க்க வேண்டும்.  



சாக்கெட், கேக், ஐஸ்கிரீம், போன்றவற்றை மிகவும் அளவாக சாப்பிட வேண்டும். சாக்லெட்டில் வகைகளில் மில்க் சாக்லெட் மற்றும் வைட் சாக்லெட்டை தவிர்த்துவிட்டு டார்க் சாக்லெட் (Dark Chocolate) சாப்பிடுவது நலம். ஏனென்றால் டார்க் சாக்லெட்டில் நம் செல்களை ஆரோக்கியமாக வைக்கும் ஆன்டி ஆக்சிடெண்ட்ஸ் மற்றும் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் டி (Vitamin D) உள்ளது.

மாலை நேரத்தில் பிஸ்கட், சிப்ஸ்களை தவிர்த்துவிட்டு அதற்கு பதிலாக பொரி உருண்டை, வேர்க்கடலை பர்பி, மசாலாப் பொரி, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, உப்புக் கடலை, பட்டாணி போன்ற எளிமையான சத்தான பதார்த்தங்களை சாப்பிடுவது நலம்.  

சர்க்கரையை குறைப்பதாக கூறி செயற்கை இனிப்பூட்டிகளை பயன்படுத்துவதை முழுமையாக நிறுத்த வேண்டும்.

ருசிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து ஆரோக்கியமற்ற உணவை உண்பது புத்திசாலித்தனமான செயல் அல்ல என்பதை உணர வேண்டும்.

உடற்பயிற்சி தேவை

உடல் எடை குறைய சிறந்த உணவு முறையுடன் உடற்பயிற்சி செய்வதும் அவசியம். காலை அல்லது மாலை வேளைகளில் நடைபயிற்சி, யோகா, ஏரோபிக்ஸ் போன்ற பலவகை உடற்பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

உடலில் அதிக கொழுப்பு சேர்ந்துள்ள இடங்களில் கொழுப்பை குறைக்க அதற்கான குறிப்பிட்ட உடல் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.



சூரிய நமஸ்காரம் போன்ற யோகா முறைகள் உடல் எடையை குறைப்பதோடு உடலில் சேர்ந்துள்ள ஊளை சதைகளையும் நன்றாக குறைக்கும். உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.

சூரிய ஒளி உடல் மீது படும் படி உடற்பயிற்சி மேற்கொள்வது நன்மை அளிக்கும். இன்று மக்கள் பெரும்பாலான நேரங்களில் வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடைப்பதால் சூரிய ஒளியில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி கிடைப்பதில்லை.

அதன் காரணமாக சிறியவர் முதல் பெரியவர் வரை பலர் எலும்பு தேய்மானம், மூட்டுவலியால் அவதிப்படுகிறார்கள். அதை தவிர்க்க சூரிய ஒளியில் நனைந்தப்படி உடற்பயிற்சி செய்வது நலம்.

நிபுணர்களின் ஆலோசனை அவசியம்

எந்த வகை உடல் பயிற்சி செய்தாலும் அதை உடற்பயிற்சி நிபுணர் அல்லது யோகா நிபுணர்களின் வழிக்காட்டுதலின்படி செய்வது அவசியம். எந்தவித வழிகாட்டுதலும் ஆலோசனைகளும் இல்லாமல் தான்தோன்றிதனமாக செய்தால் பயன் இருக்காது. உடல் நலனுக்கும் அது தீங்கை விளைவிக்கும்.

முக்கியமாக சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, எலும்பு தேய்மானம், மூட்டு வலி போன்ற உடல்நல பாதிப்புகள் இருப்பவர்கள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோர் மருத்துவர்கள் மற்றும் உடற்பயிற்சி நிபுணர்களின் ஆலோசனை படி உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆரம்பத்தில் 15 நிமிடம் என ஆரம்பித்து போக போக உடற்பயிற்சி செய்யும் நேரத்தை கூட்டி கொண்டே செல்லலாம். ஒரேயடியாக அதிக நேரம் பயிற்சி செய்தால் அது உடலுக்கு அதிக சோர்வை ஏற்படுத்தும். பசியை தூண்டி அதிக உணவை சாப்பிட தூண்டும். எனவே உடற்பயிற்சி செய்யும் நேரத்தை சிறிது சிறிதாக அதிகரிப்பது உடலுக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது.

முதலில் உடற்பயிற்சி செய்யும் போது உடலில் அதிக வலி ஏற்படுவது சகஜம். அதற்கு பயந்து பயிற்சியை விட்டுவிடாமல் வலியை பொறுத்து கொண்டு தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். உங்களின் மனதை உறுதியுடன் வைத்துகொள்ள வேண்டும். உங்கள் இலக்கை அடைய அதுவே வழி. 

குடும்பத்தினர் ஆதரவு தேவை

உடல் எடையை குறைக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு அவரது  குடும்பத்தினரும் நண்பர்களும் உறுதுணையாக இருந்து ஊக்கமளிக்க வேண்டும். அவர்கள் அளிக்கும் ஆதரவால் உடற்பருமன் பிரச்சனையை முறியடிப்பதற்கான மன உறுதி அதிகரிக்கும்.

உடல் எடை குறைப்பதற்கான பயிற்சியில் ஈடுபடும் போது சில நேரங்களில் உடலளவிலும் மனதளவிலும் சோர்வு ஏற்படுவது சகஜம். அப்போது உடன் இருப்பவர்கள் தரும் நம்பிக்கை உடல் பருமன் பிரச்சனை உள்ளவர்களுக்கு உற்ற துணையாக இருக்கும்.

சமூகத்தின் தவறான கண்ணோட்டம்

உடல் பருமன் பற்றி மக்களிடையே பல தவறான கண்ணோட்டங்கள் உள்ளன.

ஒரு மனிதன் தன் சாரசரி எடையில் இருந்தாலும் அவர் பார்க்க சிறிது சதை பற்றுடன் இருந்தால் கூட அவர் குண்டாக இருப்பதாக கூறும் வழக்கம் அதிகரித்து வருகிறது.

இது போன் இன்று உடல் எடை பற்றி மக்கள் மத்தியில் பரவி வரும் பல தவறான வதந்திகள் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பெண்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

பொதுவாக பெண்கள் வயதுக்கு வரும்போது அவர்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் ஏற்படும். இதுபோன்ற சமயங்களில் அவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு நல்ல போஷாக்கான உணவு வழங்கப்படும். அதன் காரணமாக புதிதாக பூப்படையும் பெண்கள் உடல் பூரிப்படைந்து சிறிது பூசினால் போல் இருப்பர். இது இயற்கை. ஆனால் பல பெண்கள் அதை பார்த்து தாங்கள் குண்டாகி விட்டதாக நினைத்து அதை பற்றியே சிந்தித்து சரியாக உணவு சாப்பிடாமல் தங்கள் உடல்நிலையை கெடுத்து கொள்கிறார்கள். பல இளம் பெண்கள் சரியான உடல் எடையுடன் இருந்தால் கூட தாங்கள் குண்டாக இருப்பதாக கற்பனை செய்து கொண்டு உணவு உண்பதை தவிர்க்கும் நிலை அதிகரித்து வருகிறது.

வீட்டில் பெற்றோர்கள் அல்லது பள்ளி, கல்லூரிகளில் உள்ள ஆசிரியர்கள் இதை கவனிக்காமல் விடும் பட்சத்தில் அவர்களுக்கு மனரீதியான பாதிப்புகள் ஏற்படும். புலிமியா, அனோரெக்சியா நெர்வோசா போன்ற மன வியாதிகளால் பாதிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

அதுபோன்ற பெண்களுக்கு சிறந்த ஆலோசனைகளையும் மன தைரியத்தையும் அளிக்க வேண்டும். அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிட வேண்டியதன் அவசியத்தை உணர்த்த வேண்டும்.

வணிக பிராண்டான உடல் பருமன்

இன்றைய நவீன காலக்கட்டத்தில் மக்கள் பெரும்பாலும் வெளித்தோற்றத்துக்கும் உடல்வாகுக்கும் அதிக முக்கியத்துவம் தருவதை நாம் பரவலாக காணலாம்.

இந்த சூழ்நிலையில் உடல் பருமன் குறித்து மக்களுக்கு ஏற்படும் அச்சத்தை சில நிறுவனங்கள் தங்கள் சுய லாபத்துக்காக பயன்படுத்தி வருகின்றன. உடல் பருமன் என்பது இன்று ஒரு பிராண்டாக மாறிவிட்டது.

உலகளவிலான சந்தை வளர்ச்சிக்காக பல உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் மக்கள் மத்தியில் உடல் பருமன் பற்றி பல தவறான கண்ணோட்டங்களை பரப்பி வருகின்றன. அதன் மூலம் தங்கள் நிறுவனம் தயாரிக்கும் பொருட்களின் விற்பனையை அதிகரித்து லாபம் சம்பாதித்து வருகின்றன.

குறைந்த காலத்தில் உடல் எடை குறைப்பதாக கூறி பலவித கருவிகள், மருந்துகளை விற்பனை செய்து வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எந்த ஒரு பிரச்சனைக்கும் குறுகிய கால தீர்வு பலன் தராது என்பதை மக்கள் மறந்துவிடுவதால் பலர் இதுபோன்ற நிறுவனங்களின் விளம்பரங்களை கண்டு மயங்கி தங்கள் பணத்தை வீணடித்து உடல் ஆரோக்கியத்தை கெடுத்து கொள்கிறார்கள்.  

முன்பு பெண்கள் சிறிது சதைப்பற்றுடன் இருப்பது பெரிய விஷயமாக கருதப்பட்டதில்லை. மாறாக அது அழகின் ஒரு அங்கமாக பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றோ நிலைமை தலைகீழாக மாறி ஒல்லியாக இருப்பது தான் அழகு என்பது டிரண்ட் ஆக மாறிவிட்டது. ஆண்களும் பெண்களும் இதில் சமமாகவே பாதிக்கப்படுகிறார்கள்.

சிறிது சதைப்பற்றுடன் இருப்பதற்கும் உடல் பருமனாக இருப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை இன்று பலர் அறிவதில்லை. எடுத்துக்கூறினாலும் பலர் புரிந்து கொள்வதில்லை.

அழகு என்பது உடல்வாகு மட்டும் சம்பந்தப்பட்டதா? ஆரோக்கியம், மனம் ஆகியவற்றுக்கும் தொடர்பு உள்ளதா?  என்பதை யோசிப்பவர்களே இதுபோன்ற மாயையில் சிக்காமல் தப்பித்து கொள்கிறார்கள்.

அறுவை சிகிச்சை

உடல் பருமனை குறைக்க இன்று பல மருத்துவமனைகள் மற்றும் கிளீனிக்குகள் அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றன. உடல் பருமனால் மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டவர்கள் தேவைப்பட்டால் தகுதியான மருத்துவர்களின் ஆலோசனைப்படி அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம்.

அதேசமயம் உடல் எடையை விரைவாக குறைக்க வேண்டும் என்று லட்சக்கணக்கில் பணத்தை செலவு செய்து அறுவை சிகிச்சை செய்து கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும். பணத்திற்காக சில கிளீனிக்குகள் இதுபோன்ற அறுவை சிகிச்சைகளை செய்து வருகின்றன. அவர்களின் ஆசை வார்த்தையில் மயங்காமல் மக்கள் ஜாக்கிரதையுடன் செயல்பட வேண்டும்.

விழிப்புணர்வு அவசியம்

மக்கள் தவறான வழிகளை தேர்ந்தெடுக்காமல் பாதுகாக்க அரசு பல விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த வேண்டும். மக்கள் நல ஆர்வலர்கள், மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் பொதுமக்களுக்கு உடற்பருமனை பற்றிய உண்மையை எடுத்து கூற வேண்டும்.

பொதுமக்களும் உண்மை நிலையை புரிந்து செயல்பட வேண்டும். குறுகிய கால தீர்வு என்பது நிலையானது இல்லை என்பதை உணர வேண்டும். விளம்பரங்களை கண்டு மயங்காமல் தகுதியானவர்களின் ஆலோசனைகளை பெறவேண்டும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சத்தான ஆகாரங்களை கொடுக்க வேண்டும். பிள்ளைகள் அடம்பிடிக்கிறார்கள் என்று ஆரோக்கியமற்ற உணவுகளை தரக் கூடாது.

அரசு எடுக்கவேண்டிய நடவடிக்கை

இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் உடல் பருமன் பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து அதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் எடுக்க வேண்டும்.  

உடல் பருமன் பிரச்சனையின் தீவிரத்தை ஆய்வு செய்ய கமிட்டி ஒன்றை சுகாதாரத் துறை அமைக்க வேண்டும். அந்த கமிட்டி அளிக்கும் பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் துரித உணவு மற்றும் குளிர்பானங்களின் விற்பனையை முற்றிலும் தடை செய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை அரசு உறுதியாக செயல்படுத்த வேண்டும்.

மருத்துவர்கள், சமுதாய நல ஆர்வலர்கள், உணவு நிபுணர்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் உடல் பருமன் பற்றி மக்கள் மத்தியில் சரியான விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவது அவசியம்.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கட்டாயம் விளையாட்டு வகுப்புகள் நடப்பதை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இளம் தலைமுறையினரின் ஆரோக்கியம் தான் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். 


கட்டுரையாளர்: சி. நிரஞ்சனா





உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :


Your comment will be posted after the moderation