மீடூ இயக்கம் மீது அதிபர் டிரம்ப் கிண்டல்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 18:16

வாஷிங்டன்,

     அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த தேர்தல் பேரணியில் பேசிய அதிபர் டொனால்ட் டிரம்ப் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக பேசி வரும் மீடு இயக்கத்தை கேலி செய்து பேசினார்.

கடந்த ஆண்டு பிரபல ஹாலிவுட் இயக்குனர் ஹார்வி வெயின்ஸ்டின் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இது மீடு (Metoo) என்ற இயக்கமாக மாறி வேகமெடுத்தது. பல பெண்கள் மீடூ ஹாஷ்டேக் போட்டு தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி வெளிப்படையாக சமூக ஊடகத்தில் பதிவிட்டனர். இதற்கு பலத்த ஆதரவு கிடைத்தது. அதிபர் டிரம்ப் உள்ளிட்ட பல பிரபலங்கள் மீது மீடூ இயக்கம் வழியே பெண்கள் பாலியல் புகார் கூறினர். ஹாலிவுட்டில் ஆரம்பித்த இந்த இயக்கம் தற்போது பாலிவுட்டைத் தாண்டி தமிழ் திரையுலகம் வரை பரவியுள்ளது.

இந்நிலையில் நேற்று அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடந்த தேர்தல் பிரச்சார பேரணி ஒன்றில் கலந்து கொண்ட அதிபர் டிரம்ப் மீடூ இயக்கத்தை கிண்டல் செய்து பேசினார்.

பென்சில்வேனியாவில் ஆளும் குடியரசு கட்சியினர் பல காலமாக வெற்றி பெற்றதில்லை . அதனால் பென்சில்வேனியா எப்போதும் கைவிட்டு போவதை ‘‘தி கர்ள் தட் காட் அவே’’ (the girl that got away) என மறைமுகமாக கூறுவர்.

ஆனால் மீடூ இயக்கத்தால் தற்போது அந்த வாசகத்தை நான் பயன்படுத்த முடியாது. அதற்கான அனுமதி எனக்கு கிடையாது. அதற்கு பதிலாக ‘‘இட்ஸ் தி பெர்சன் தட் காட் அவே’’ (It's the person that got away) என கூறுவேன்.

நான் பழைய படியே என் கருத்தை கூறுவேன். ஆனால் ‘‘தி கர்ள் தட் காட் அவே’’ என கூறினால் இங்குள்ள ஊடகங்கள் டிரம்ப் என்ன சொன்னார் என கேட்டீர்களா? டிரம்ப் என்ன சொன்னார் என்று கேட்டீர்களா ? என கூறி பரப்பரப்பை ஏற்படுத்துவார்கள். எனவே வழக்கமாக கூறுவதை மாற்றி பென்சில்வேனியாவை தி பெர்சன் தட் காட் அவே என்று தெரிவிப்பேன் என அதிபர் டிரம்ப் கூறினார்.

இதற்கு முன் ஜூலை மாதம் நடந்த ஒரு பேரணியிலும் அதிபர் டிரம்ப் மீடூ இயக்கத்தை கிண்டல் அடித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் அதிபர் டிரம்ப் தற்போது மீண்டும் மீடூ இயக்கத்தை கிண்டலடித்துள்ளதற்கு பலர் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.