மலேசியாவில் மரண தண்டனையை ரத்துச்செய்ய அமைச்சரவை ஒப்புதல்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 18:03

கோலா லம்பூர்,

    மலேசியாவில் மரண தண்டனை வழங்கும் நடைமுறையை ரத்து செய்ய அந்நாட்டு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த தகவலை மலேசியாவின் மத்திய தகவல்தொடர்பு மற்றும் மல்டிமீடியா துறை அமைச்சர் கோபிந்த் சிங் தியோ செய்தியாளர்களிடம் இன்று தெரிவித்தார்.

பிரிட்டிஷாரின் ஆட்சிகாலம் முதல் மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிடும் வழக்கம் நடைமுறையில் உள்ளது. கொலை, ஆள் கடத்தல், சட்டவிரோத ஆயுத வர்த்தகம், போதை மருந்து கடத்தல், பயங்கரவாதம் போன்ற குற்றங்களுக்கு மலேசியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மலேசியாவில் 1200 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய பல காலம் காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இது மிகவும் கொடூரமான, காட்டுமிராண்டிதனமான நடைமுறை என்று பல மனித உரிமை ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மலேசியாவில் மரண தண்டனை விதிப்பது ரத்து செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கிடையில் கடந்த மே மாதம் மலேசியாவில் மூத்த அரசியல்வாதி மஹதிர் முகமது தலைமையிலான கூட்டணி கட்சி வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அதை தொடர்ந்து பிரதமராக பதவி ஏற்ற மஹதிர் முகமது விரைவில் மலேசியாவில் ஊழல் ஒழிக்கப்படும், மனித உரிமை மீறல்கள் தடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

அதன்படி தற்போது மலேசியாவில் மரண தண்டனையை ரத்து செய்ய அந்நாட்டு அரசு முடிவு எடுத்துள்ளது.

இது எங்களின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. விரைவில் அதற்கான சட்டம் அமல்படுத்தப்படும் என மலேசிய அமைச்சர் கோபிந்த் சிங் தியோ இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மரண தண்டனையை ரத்து செய்யும் சட்டத்திருத்த மசோதா வரும் அக்டோபர் 15ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என மலேசிய சட்ட அமைச்சர் லியூ வுய் கியோங் செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியாவில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டால் இந்த நடைமுறையை ரத்து செய்யும் முதல் ஆசிய நாடாக மலேசியா திகழும்.

இந்நிலையில் மலேசிய அரசின் இந்த முடிவை அந்நாட்டு மனித உரிமை ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர். சர்வதேச அமைப்பான ஆம்னெஸ்டி இண்டர்நேஷ்னல் இந்த சட்டம் அனைத்து குற்றங்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

மலேசிய அரசின் இந்த முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனித உரிமை ஆர்வலரான வழக்கறிஞர் என். சுரேந்திரன் ‘‘மரண தண்டனையை ரத்து செய்வதன் மூலம் மலேசியா மற்ற நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழும். மேலும் இந்த முடிவால் வெளிநாடுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர்களின் உயிரை காப்பாற்றும் போராட்டத்தில் நமக்கு தார்மீக அதிகாரம் கிடைக்கும்’’ என சுரேந்திரன் கூறினார்.