நவம்பர் 1-ம் தேதி முதல் தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு துவக்கம்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 17:58

சென்னை

    தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்

இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பணி நிமித்தமாக சென்னையில் தங்கியுள்ள ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்படுவர். எனவே சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்நிலையில், தீபாவளிக்கான சிறப்பு பேருந்துகள் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நவம்பர் 3,4,5 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து சுமார் 11,367 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் செயல்படும். சென்னையில், கோயம்பேடு, அடையாறு, தாம்பரம், அண்ணாநகர் மற்றும் ஊரப்பாக்கம் ஆகிய 5 இடங்களில் இருந்து ஆங்காங்கே வெளியூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

இதுதவிர நவம்பர் 3,4,5 தேதிகளில் தமிழகத்தின் மற்ற இடங்களில் இருந்து சென்னைக்கு 9,200 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும். எனவே தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி சிறப்புப் பேருந்துகளுக்கான முன்பதிவு நவம்பர் 1-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர்  தெரிவித்தார்.

கடந்த ஆண்டு தீபாவளியில் மொத்தம் 5.35 லட்சம் மக்கள் பயணம் செய்தனர். எனவே அதே அளவிலான மக்கள் இம்முறையும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.