சீனா உதவியுடன் சர்வதேச விமானநிலையம் கட்டும் ஒப்பந்தம் ரத்து : சியரா லியோன் அரசு அறிவிப்பு

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 17:44

ஃப்ரீடவுன்,

    கிழக்கு ஆப்பரிக்க நாடான சியரா லியோனில் 40 கோடி டாலர் மதிப்பில் சீனா உதவியுடன் சர்வதேச விமான நிலையம் கட்டும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

பொருளாதார ரீதியாக பின்னடைந்துள்ள ஆப்பரிக்க நாடுகளுக்கு சீனா பனிபோர் காலம் முதல் உள்கட்டுமான திட்டங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் ஆப்பரிக்க நாடுகளில் சீனாவின் முதலீடு பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போது உலகின் பொருளாதார சக்தியாக மாறியுள்ள சீனா உலகளவில் தன் ஆதிக்கத்தை வளர்த்து கொள்ளும் நோக்கத்தில் ஆப்பரிக்க நாடுகளில் பல உள்கட்டுமான பணிகளுக்கு கடன் உதவி வழங்கி வருகிறது.
அந்த வகையில் சீனாவின் உதவியுடன் கட்டப்படும் துறைமுகம், விமானநிலையம் ஆகியவற்றை சீனாவால் கட்டுப்படுத்த முடியும்.

அதன் ஒரு பகுதியாக சியரா லியோனின் முன்னாள் அதிபர் எர்னெஸ்ட் பாய் கோரோமா தன் ஆட்சியின் போது சீனாவுடன் கடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டார். அதன்படி சியரா லியோனில் 40 கோடி டாலர் மதிப்பில் மமமாஹ் என்ற பெயரில் சர்வதேச விமானநிலையம் கட்ட சீனா கடன் உதவி செய்வதாக முடிவானது.

அந்த ஒப்பந்தத்தின் படி 2022ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் அந்த விமான நிலையத்தின் பராமரிப்பு சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

இந்த விமான நிலையம் திட்டம் அதிக செலவை இழுக்கும். சியரா லியோனின் பொருளாதார சூழ்நிலைக்கு இந்த திட்டம் உகந்ததல்ல என பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்புகளை மீறி இந்த ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் கடந்த மார்ச் மாதம் சியரா லியோனில் நடந்த பொது தேர்தலில் அதிபர் எர்னெஸ்ட் பாய் கோரோமா ஆட்சியை இழந்தார்.

சியரா லியோனின் புதிய அதிபராக பொறுப்பேற்ற ஜூலியஸ் மாடா பையோ இந்த சர்வதேச விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக உறுதி அளித்தார். மேலும் சீனாவின் உள்கட்டுமான உதவிகள் அனைத்தும் ஏமாற்று வேலை. அதனால் ஆப்பரிக்க மக்களுக்கு எந்தவித பொருளாதார முன்னேற்றமும் ஏற்படுவதில்லை என குற்றம்சாட்டினார்.

அதன்படி சர்வதேச விமான நிலையம் அமைக்க சீனாவுடன் போடப்பட்ட ஒப்பந்தம் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக நேற்று அரசு வெளியிட்ட அறிக்கையில் சியாரி லியோனின் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்தது.