சர்வாதிகாரத்தை நோக்கி அதிமுக அரசு: முத்தரசன் குற்றச்சாட்டு

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 17:40

சென்னை

    தமிழக அதிமுக அரசு ஜனநாயகப் பாதையில் இருந்து விலகி, சர்வாதிகாரத்தை நோக்கி நடைபோட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியது என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக, ஜனநாயக விரோத செயலில் தொடர்ந்து ஈடுபடுவது கடும் கண்டனத்திற்குரியது. அரசு குறித்தோ, அரசின் மக்கள் விரோத திட்டங்கள் குறித்தோ விமர்சிக்கக் கூடாது என்ற முறையில் சர்வாதிகாரமாக அரசு செயல்பட்டு வருகின்றது.
சேலம் - சென்னை எட்டுவழிச் சாலை பிரச்னையால் பாதிக்கப்படும் விவசாயிகள் தங்களது ஆட்சேபனையை தெரிவித்தால் அவர்கள் காவல்துறை மூலம் அச்சுறுத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றார்கள்.

 துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தால் கைது செய்யப்படுகின்றனர். அரசின் ஊழல் குறித்து, பொதுமக்களிடம் விளக்கமளித்து, துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்தார்கள் என்கின்ற காரணத்திற்காக திமுக தொண்டர்கள் தடுக்கப்பட்டு தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர்.

பொதுக் கூட்டம் - ஆர்ப்பாட்டம் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல்துறையினர் அனுமதி வழங்க மறுக்கின்றனர். ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் சென்று வழக்கு நடத்தி அனுமதி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் உயர்த்தப்பட்டுள்ள கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும், வருகைப் பதிவு குறைவான மாணவர்களுக்கு விதிக்கப்படும் அபதாரக் கட்டணத்தை குறைக்க வேண்டும் என ஜனநாயக முறையில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் கண்டிக்கத்தக்கது.

மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் திருச்சியில் மாநாடு, நடத்தியதற்காக நிர்வாகிகள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. நக்கீரன் ஆசிரியர் கோபால் 124 சட்டப்படி கைது வழக்குப் பதியப்பட்டது. மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய, மாநில அரசு செயல்படுத்தும்போது அவை குறித்து, மக்களின் கருத்தறிய வேண்டும் என்பதிலிருந்து விலக்கு அளித்திட வேண்டுமென்று, மாநில அரசு மத்திய அரசிடம் கோரியிருக்கும் ஜனநாயக விரோத செயல் என்று தொடர்கின்றது.

மொத்தத்தில் தமிழ்நாடு அரசு ஜனநாயகப் பாதையில் இருந்து விலகி, சர்வாதிகாரத்தை நோக்கி நடைபோட்டு வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும். அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான முறையில் தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்படுமேயானால் அதற்குரிய எதிர்விளைவுகளை அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என இரா.முத்தரசன் எச்சரித்துள்ளார்.