காணொலிக் காட்சி மூலம் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 16:57

சென்னை

      தமிழக முதல்வர் மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள  பல்வேறு துறைகளின் பயன்பாட்டுக்கும் பொதுமக்களின் பயன்பாட்டுக்குமான கட்டிடங்களை காணொலிக்கட்சி மூலம் தமிழக முதல்வர் நேற்று திறந்து வைத்தார்கள்.


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி  10.10.2018 அன்று   தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் மொத்தம் 15 கோடியே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் நலப்பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான 10 விடுதிக் கட்டடங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பள்ளிகளுக்கான கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்  மற்றும் அறிவியல் ஆய்வுக் கூடங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.    

இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம். ராஜலெட்சுமி,  தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஒட்டெம் டாய், ஆதிதிராவிடர் நலத்துறை   இயக்குநர் க.வீ. முரளீதரன், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் சஜ்ஜன்சிங் ஆர். சவான், பழங்குடியினர் நலத்துறை இயக்குநர். டி. ரிட்டோ சிரியாக், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திறன் மிகு மையம் திறப்பு

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் 546 கோடியே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம், குரோம்பேட்டை, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பொறியியல் மற்றும் பல்தொழில்நுட்ப கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு  உலக தரத்திலான உயர் தொழில்நுட்ப பயிற்சிகள் வழங்குவதற்காக  அமைக்கப்பட்டுள்ள திறன்மிகு மையத்தை காணொலிக் காட்சி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 10.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில்துவக்கி வைத்தார்.

காஞ்சிபுரம் மற்றும் விழுப்புரம் - அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள்,  வேலூர் - தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரி, தரமணி - மத்திய பாலிடெக்னிக் கல்லூரி  மற்றும் ஆவடி - முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி ஆகிய கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப  திறன் வளர்ச்சி  மையங்களையும் திறந்து வைத்தார்கள்.

இந்த நிகழ்ச்சியில், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்,  ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா.பென்ஜமின், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மங்கத்ராம்

சர்மா, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை முதன்மைச் செயலாளர்

சுனீல் பாலீவால், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் பா.ஜோதி நிர்மலாசாமிமற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

வெர்மிகுலைட் விரிவாக்க  ஆலை திறப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி 10.10.2018 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் சார்பில் வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், செவ்வாத்தூர் கிராமத்தில் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள வெர்மிகுலைட்டை விரிவாக்கும், தொழிற்சாலையை திறந்து வைத்தார்கள்.

இத்தொழிற்சாலை, ஆண்டொன்றுக்கு  சுமார் 2520 டன்கள் விரிவாக்கப்பட்ட வெர்மிகுலைட் கனிமத்தினை உற்பத்தி செய்து, சுமார் 3 கோடியே 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான வெர்மிகுலைட் கனிமத்தினை விற்பனை செய்ய உள்ளது.  இத்தொழிற்சாலையில் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய இயந்திரங்கள் சுற்றுச்சூழல் மாசுபடாவண்ணம், பாதுகாப்பான முறையில் நிறுவப்பட்டுள்ளன. 

இந்த நிகழ்ச்சியில், வணிகவரித் துறை அமைச்சர்.கே.சி. வீரமணி, மாண்புமிகு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் நிலோபர் கபில், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கு. ஞானதேசிகன், தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குநர் மகேசன் காசிராஜன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.