உலக வர்த்தக விதிமுறைகளை அமெரிக்கா, சீனா மீற கூடாது : ஐ.எம்.ஃப், உலக வங்கி வலியுறுத்தல்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 15:28

நுசா துவா,

    அமெரிக்கா மற்றும் சீனா உலக வர்த்தக விதிமுறைகளை மீறாமல் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என உலக வங்கி மற்றும் பன்னாட்டு செலவாணி நிதியத்தின் (ஐ.எம்.எஃப்) தலைவர்கள் வலியுறுத்தினர்.

பாலி தீவில் உலக வங்கி மற்றும் பன்னாட்டு செலவாணி நிதியத்தின் வருடாந்திர மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்திய வங்கிகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் அரங்குக்கு வெளியே நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் மற்றும் பன்னாட்டு செலவாணி நிதியத்தின் தலைவர் கிறிஸ்டின் லகார்டே ஆகியோர் உரையாற்றினர்.

நிகழ்ச்சியில் அமெரிக்கா – சீனா இடையே வளர்ந்து வரும் வர்த்தக போர் குறித்து ஐ.எம்.எஃப் தலைவர் கிறிஸ்டின் லகார்டேவிடம் கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்து பேசிய கிறிஸ்டின் இந்த விவகாரத்தில் மூன்று ஆலோசனைகள் தருவதாக கூறினார்.

முதலாவதாக பிரச்சனையை பெரிதுபடுத்துவதை இருநாடுகளும் நிறுத்த வேண்டும். இரண்டாவதாக வர்த்தக அமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்பை சீர்செய்ய வேண்டும். மூன்றாவதாக உலக வர்த்தக அமைப்பை சீர்குலைக்காமல் தடுக்க வேண்டும்.

சீனா நவீன தொழில்நுட்பங்களை திருடுவதாக அமெரிக்கா கூறும் குற்றச்சாட்டை விசாரித்து தீர்வு காண உலக வர்த்தக நிறுவனத்திற்கு பல வழிகள் உள்ளன.

எங்களுடைய பரிந்துரை என்னவென்றால் மிகவும் வலுவான, நியாயமான உலகளாவிய வர்த்தக அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே என லகார்டே தெரிவித்தார்.

மானியம் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவும் உலக வர்த்தக மையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிறிஸ்டின் லகார்டே கூறினார்.

வர்த்தகம் பெருக வேண்டும்

வர்த்தக போர் குறித்து உலக வங்கியின் தலைவர் ஜிம் யாங் கிம் கூறுகையில் :

வர்த்தக போரால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக பல வளரும் நாடுகளுடன் இணைந்து உலக வங்கி பணியாற்றி வருகிறது.

இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து இறக்குமதி வரிகள் விதித்து வந்தால் அது வளரும் நாடுகளை கடுமையாக பாதிக்கும். பல தொழிற்சாலைகள் இழுத்து மூட வேண்டிய நிலைக்கு தள்ளப்படும்.

வர்த்தகம்  தான் பல மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுத்துள்ளது.  அதை பாதுகாக்க வேண்டியது அவசியம். வறுமையை ஒழிக்க வர்த்தகம் பெருக வேண்டும். குறைய கூடாது. அதை உறுதி செய்வது தான் எனது பணி என ஜிம் யாங் கிம் தெரிவித்தார்.