பரபரப்பான அரசியல் சூழலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்ஸ் புறப்பட்டார்

பதிவு செய்த நாள் : 11 அக்டோபர் 2018 12:31

புதுடில்லி,     

ரபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசுமுறை பயணமாக நேற்று பிரான்ஸுக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது, இந்திய விமான படைக்கு ரபேல் போர் விமானங்கள் வாங்குவது என்றும் ஒரு விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, 2014ஆம் ஆண்டில் பாஜக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் போட்டதில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. ஆனால், பாஜக அதனை மறுத்து வருகிறது.

மத்திய அரசின் தலையீட்டினால் தான் ரபேல் ஒப்பந்தத்தில் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டது என சமீபத்தில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹோலண்டே இந்த விவகாரம் குறித்து அந்நாட்டு ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்தார். இது இந்திய அரசியலில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பிரான்ஸ் நாட்டிற்கு நேற்று இரவு புறப்பட்டு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஃப்ளோரன்ஸ் பார்லியை சந்தித்து பேசவுள்ளார்.

மேலும், 2015ஆம் ஆண்டு 36 ரபேல் போர்விமானங்கள் வாங்குவதற்காக பிரதமர் மோடி கையெழுத்திட்ட ஒப்பந்தங்கள் குறித்தும் அந்நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் நிர்மலா சீதாராமன், ரபேல் விமானங்களை தயாரிக்கும் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்திற்கும் செல்லவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ரபேல் போர் விமான விவகாரத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளிடையே கடந்த சில வாரங்களாக வார்த்தை போர் நடந்துவரும் சூழலில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் பிரான்ஸ் பயணம் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வேலை தொடங்கிவிட்டது

இதுகுறித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி,“ரபேல் விமானம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இது மிகவும் எளிமையானது. பிரதமர் முடிவெடுத்துவிட்டார். அவர் முடிவை நியாயப்படுத்தும் காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வேலை தொடங்கிவிட்டது. இதன் தொடர்பாகவே பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார்” என குறிப்பிட்டுள்ளார்.