நக்கீரன் கோபால் விவகாரத்தில் ஆளுநர் மாளிகை மேல்முறையீடு

பதிவு செய்த நாள் : 10 அக்டோபர் 2018 21:14

சென்னை

     ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட நக்கீரன் இதழாசிரியர் கோபாலை சென்னை எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் நேற்று விடுதலை செய்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்வதா அல்லது சிஆர்பிசி பிரிவுகளின் அடிப்படையில் புது வழக்கு பதிவு செய்யலாமா எனபது குறித்து ஆளுநர மாளிகையில் தீவிரப் பரிசீலனை நடக்கிறது.

நக்கீரன் கோபால் மீது ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் துணைச் செயலாளர் செங்கோட்டையன் அளித்த புகாரின் அடிப்படையில் கோபால் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

 சட்டப்பிரிவு 124-ன் படி அவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை நீதிமன்றக் காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. ஆனால், நீதிபதி கோபிநாத் நீண்ட விசாரணைக்குப் பிறகு சட்டப்பிரிவு 124-ன் அடிப்படையில் நக்கீரன் கோபால் கைது செய்தது தவறு, அவரைச் சிறையில் அடைக்க உத்தரவிடமுடியாது என்ற அதிரடி தீர்ப்பை வழங்கினார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்பட்டார். ஆறுமாதத்துக்கு முன்பு வெளியான நக்கீரன் இதழை அடிப்படையாக வைத்தே இந்தப் புகார் ஆளுநர் மாளிகையிலிருந்து அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறையினர், ஐபிசி 124 எனும் ஒரு பிரிவின் கீழ் மட்டும் வழக்கு போட்டதால்தான் அந்த ஒரு பிரிவின் கீழ வழக்கு பதிவு செய்தது தவறு என கோபாலை விடுவிக்க வாய்ப்பு ஏற்பட்டது.

ஜாமீனில் வெளியிட முடியாத ஒன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்திருந்தால் கோபால் தப்பி இருக்க முடியாது என சட்ட ஆலோசகர்கள் ஆளுநரிடம் தெரிவித்துள்ளனர்.. சட்ட நிபுணர்க்ள் கூறும் இந்தக் கருத்து சரியானதுதான் என்று  ஆளுநர் மாளிகை அதிகாரிகள் உறுதியாக நம்புகிறார்கள்.

ஆளுநர் அலுவலகத்திலிருந்து அளித்த புகாரில் ஒருவர் கைது செய்யப்படாமல் விடுதலையானது இதுவரை நடக்காத நிகழ்வு. ஆளுநர் மாளிகைக்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது.

அதனால் சட்டக்குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க ஆளுநர் மாளிகை அதிகாரிகள் விரும்புகிறார்கள்.

அப்பீலா? புது வழக்கா?

நேற்றும் இன்றும் சட்டத்துறையினருடன் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.

இதே வழக்கில் மேல்முறையீடு செய்யலாம் என்ற முடிவுக்கு அப்போது வந்துள்ளார்கள். மேல்முறையீட்டிலும் தோல்வி கிடைத்தால் அதற்கப்புறம் எந்த முயற்சியும் செய்வது சரியாக இராது. அதனால் தோல்விக்கு இடமளிக்காமல் புது வழக்கு போடலாம் என்ற முடிவுக்கு ஆளுநர் மாளிகை அதிகாரிகள் வந்துள்ளனர்.

அதிகாரிகளின் கருத்தை நிராகரிக்கவில்லை என்றாலும் உள்துறை என்ன நினைக்கிறது என்ற கருத்து அவசியம் என ஆளுநர் நினைக்கிறார்.

அதனால் நேரில் சென்று உள்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளிடம் பேசலாமா? என்ற சிந்தனை தோன்றியுள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உடனே தாவ முடியாமல் ஆளுநர் மாளிகை அதிகாரிகள் அதனால் பதற்றத்துடன் உள்ளனர்.