ராஜா ராஜாதான் தொடர் – சிவக்குமார் 10–10–18

09 அக்டோபர் 2018, 05:48 PM

என் கல்­லுாரி நாட்­க­ளில் நண்­பர்­கள் இளை­ய­ரா­ஜா­வின் தீவிர ரசி­கர்­கள்!

(சென்ற வாரத் தொடர்ச்சி)

இரண்டு மாதங்­க­ளுக்கு முன் 'ஜானி' படத்­தில் வரும் ''காற்­றில் எந்­தன் கீதம்'' பாடலை கேட்­கத் துவங்கி அன்­றி­ரவு முழு­வ­தும் இளை­ய­ரா­ஜா­வின் பாடல்­க­ளாக கேட்­டுக் கொண்­டி­ருந்­தேன். அது போதா­மல் மறு­நாள் நண்­பர்­கள் வச­மி­ருந்த இளை­ய­ரா­ஜா­வின் பாடல்­கள் தொகுப்­பில் இருந்து 250 பாடல்­கள் கொண்ட இரண்டு குறுந்­த­க­டி­னை­யும் வாங்கி வந்து கேட்­கத் துவங்­கி­னேன். நாலைந்து நாட்­கள் இளை­ய­ராஜா பாடல்­களை மட்­டுமே கேட்­டுக் கொண்­டி­ருந்­தேன்.

ஜானகி, சித்ரா, ஜென்சி, பால­சுப்­பி­ர­ம­ணி­யம், ஜேசு­தாஸ், மலே­சியா வாசு­தே­வன், இளை­ய­ராஜா என்று மாறும் குரல்­க­ளும் இசை­ய­மைப்­பின் வியப்­பும் மேலிட இளை­ய­ரா­ஜா­வின் அலுத்து போகாத மேதமை இன்­றும் அதீத உற்­சா­கம் தரு­வ­தாக இருந்­தது.

இவ்­வ­ளவு திரை­யிசை பாடல்­களை தொடர்ச்­சி­யாக நான் கேட்­ட­தே­யில்லை. எப்­ப­டி­யும் நானூ­றுக்­கும் மேற்­பட்ட பாடல்­கள் கேட்­டி­ருப்­பேன்.

இதில் பகல் எல்­லாம் பாட்டு கேட்­பது, படுக்­கை­யில் கிடந்­த­ப­டியே இர­வெல்­லாம் கேட்­பது. விழித்து எழுந்­த­வு­டன் சில மணி நேரம் கேட்­பது என்று விருப்­ப­மான மனி­த­ரின் கையை பிடித்­துக் கொண்டு சுற்­றி­ய­லை­வது போல கேட்­டுக் கொண்­டே­யி­ருந்­தேன். புத்­த­கங்­கள், திரைப்­ப­டங்­கள் எதி­லும் நாட்­டம் திரும்­ப­வே­யில்லை.

சிறு­வ­ய­தில் பல பாடல்­களை இசைத்­தட்­டில் கேட்­கும் போது ஏற்­ப­டும் நெருக்­கம் திரை­யில் பார்க்­கும் போது ஏற்­ப­டாது. அதற்கு மாறாக சில பாடல்­க­ளைக் கேட்­கும் போது நடி­கர், நடி­கை­களை மறந்து  கேட்க முடி­வ­தே­யில்லை. எல்லா ஊர்­க­ளி­லும் அந்த காலத்­தில் ஒரு டி.எம்.எஸ்., ஒரு சுசீலா இருந்­தார்­கள்.

அவர்­கள் சினிமா பாடல்­களை அப்­ப­டியே அச்சு பிச­கா­மல் அதே குர­லில் பாடி கைத்­தட்­டல் வாங்­கு­வார்­கள்.  என் பள்­ளி­யில் கூட ஒரு சுசீலா படித்­தாள். அவளை தமிழ்த்­தாய் வாழ்த்து பாடு­வ­தற்­கா­கவே வைத்­தி­ருந்­தார்­கள். பள்ளி விழா நாட்­க­ளில் அவள் சினிமா பாடல்­களை பாடு­வாள். அந்த பாடல்­கள் அத்­த­னை­யும் சிறப்­பா­னவை. எப்­படி அதை தேர்வு செய்து அந்த பாடல் வரி­களை நினை­வில் வைத்­தி­ருந்து பாடு­கி­றாள் என்று வியப்­பாக இருக்­கும். அது எம்.எஸ். விஸ்­வ­நா­தன் காலம். ஒரு முறை எம். எஸ்.வி., கச்­சே­ரிக்­காக விரு­து­ந­கர் வந்­தி­ருந்­தார். கொட்­டும் மழை­யில் நனைந்து கொண்டே 'எங்கே நிம்­மதி' கேட்­டோம். அந்த நாட்­க­ளில் திரை­யிசை பாடல்­கள் மட்­டுமே வெகு­மக்­க­ளின் பிர­தான ரச­னை­யாக இருந்­தது. எல்லா வீடு­க­ளி­லும் அந்த பாடல்­கள் முணு­மு­ணுக்­கப்­பட்­டன. விசேஷ நாட்­க­ளில் காலை துவங்கி இரவு வரை ரிகார்ட் போட்­டார்­கள்.

அந்த நினை­வில் பாடல் என்­றாலே உரத்த சப்­தத்­தில் கேட்க வேண்­டும் என்று உள்­ளூர பதிந்து போயி­ருக்­கி­றது. அதி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு பல வரு­ஷங்­கள் ஆகிப்­போ­யின. என் கல்­லூரி நாட்­க­ளில் நண்­பர்­கள் இளை­ய­ரா­ஜா­வின் தீவிர ரசி­கர்­கள். அவ­ருக்­கா­கவே படம் பார்த்­தார்­கள். அப்­போது தான் டூ இன் ஒன் அறி­மு­க­மா­னது. ஆகவே பாடல்­களை ரிகார்­டிங் சென்­ட­ரில் போய் பதிந்து கொண்டு வந்து கேட்­பது என்­பது பெரிய விஷ­ய­மாக இருந்­தது.

'உதி­ரிப்­பூக்­கள்,' 'முள்­ளும் மல­ரும்,' 'கிழக்கே போகும் ரயில்,' 'புதிய வார்ப்­பு­கள்' என்று இளை­ய­ரா­ஜாவை பற்றி பேசாத  நாட்­களே இல்லை. அது வளர்ந்து எண்­ப­து­க­ளின் உச்­சத்தை அடைந்த போது நாளைக்கு ஒரு படம் பார்க்­கும் ஆளா­கி­யி­ருந்­தேன். ஏதா­வது ஒரு படத்தை இர­வுக்­காட்சி பார்ப்­பது என்­பது பல வரு­டங்­க­ளாக இருந்த எனது வழக்­கம். அப்­படி படம் பார்த்­து­விட்டு திரும்­பும் பின்­னி­ர­வில் ஆள் அர­வம் அற்­றுப்­போன தெரு­வில் சைக்­கிளை நிறுத்தி சாய்ந்து கொண்டு இளை­ய­ரா­ஜாவை பற்றி பேசிக் கொண்­டி­ருப்­போம்.

  எல்லா ஊர்­க­ளி­லும் பின்­னி­ர­விற்கு என்றே ஒரு டீக்­கடை திறந்­தி­ருக்­கும். அங்கே நிச்­ச­யம் இளை­ய­ரா­ஜா­வின் பாடல் ஒன்றை போட்­டுக் கொண்­டி­ருப்­பார்­கள்.  'ப்ரியா' பாடல் வந்த புதி­தில் அதை ஒரு நாளைக்கு ஐம்­பது தடவை கேட்ட நண்­பர்­கள் என்­னோடு இருந்­தார்­கள். அது ஒரு மயக்­கம். சினி­மாவை மீறிய பாடல்­களை கேட்­க­வும் பின்­னால் அலை­ய­வும் செய்த நாட்­கள் அவை.

இளை­ய­ரா­ஜா­வின் 'திரு­வா­ச­கம்' வெளி­யான நாட்­க­ளில் நானும் இயக்­கு­னர் ஜீவா­வும் ஒரு நாளி­ரவு காரில் மகா­ப­லி­பு­ரத்­திற்கு சென்­றி­ருந்­தோம். வழி முழு­வ­தும், காரில் 'திரு­வா­ச­கம்' ஒலித்­த­ப­டியே வந்­தது. முதன்­மு­றை­யாக கேட்­ட­போது அதை மனது ஏற்­றுக் கொள்ள மறுத்­தது. முக்­கிய கார­ணம் அந்த பாடல்­களை ஓது­வார்­கள் பாடி கேட்­டி­ருக்­கி­றேன். அது மன­தில் அழி­யா­மல் ஒலித்­த­ப­டியே இருந்­தது.

ஆனால் அன்­றைய இர­வில் கடற்­கரை அரு­கில் நல்ல இரு­ளில் மணல்­வெ­ளி­யில் அமர்ந்­த­ப­டியே 'திரு­வா­ச­கம்' கேட்­ட­போது 'புற்­றில் வாழ் அர­வம் வேண்­டேன்' என்ற வரி­க­ளும் இசை­யும் மனதை பாரம் போல அழுத்த துவங்கி முன்­ன­றி­யாத துய­ரும் விம்­ம­லும் உரு­வா­கின.

கட­லின் மீது தொலை­வில் தெரி­யும் ஆகா­சத்­தில் நட்­சத்­தி­ரங்­கள் மின்­னிக் கொண்­டி­ருந்­தன. வீதி­களை, வீடு­களை துயில் கொள்ள செய்­தி­ருந்­தது இருள்.  யாவற்­றை­யும் விழுங்­கி­ய­ப­டியே திரு­வா­ச­கம் மெல்ல ஒரு அலை கால­டி­யில் உள்ள மணலை இழுத்து போவது போல மனதை கொஞ்­சம் கொஞ்­ச­மாக தன்­வ­ச­மாக்கி கொண்­டி­ருந்­தது. பர­வ­ச­மும் தத்­த­ளிப்­பும் கூடிய அப்­ப­டி­யான மன­நிலை சில தரு­ணங்­க­ளி­லே­தான் ஏற்­ப­டு­கி­றது.

எங்கோ அந்த இரு­ளி­னுள் புன்­ன­கை­யு­டன் இளை­ய­ராஜா அமர்ந்­தி­ருப்­பது போன்ற நெருக்­கம் உண்­டா­னது. பால்ய வய­தி­லி­ருந்து கேட்­டி­ருந்த தேவா­ரம், திரு­வா­ச­கம் மன­தில் ஏற்­ப­டுத்­தி­யி­ருந்த அத்­தனை திரை­க­ளை­யும் விலக்கி இன்­னொரு தளத்­தில் 'திரு­வா­ச­கம்' ஒலிக்­கி­றது. அது ஆன்­மிக அனு­ப­வ­மல்ல. மாறாக தன்­னி­ருப்­பின் சாரத்தை வெளிப்­ப­டுத்­தும் அற்­பு­த­மான தரு­ணம். இசை உயர்­கி­றது. குரல் ஆழ்ந்த வேத­னையை வெளிப்­ப­டுத்­து­கி­றது. மனது நிலை கொள்ள மறுத்து நழு­வு­கி­றது. காற்­றில் பட­ப­டக்­கும் ஈரத்­து­ணி­யின் சில்­லி­ட­லைப் போல ஏதோ­வொரு சில்­லி­டலை தரு­கி­றது இசை.  இதே போன்ற ஒரு அனு­ப­வத்தை திருச்­சுழி கோயி­லில் ஒரு முறை அனு­ப­வித்­தி­ருக்­கி­றேன். பிரா­கா­ரத்­தில் நடந்து வரும் போது எங்­கி­ருந்தோ நாதஸ்­வ­ரத்­தின் மயக்­கும் இசை மிதந்து வந்­தது. கல்­ப­டி­யில் அமர்ந்­தி­ருந்­தேன். யானை­யின் காது அசை­வது போல, தன்­னி­யல்­பாக விரிந்து அசைந்து கொண்­டி­ருந்­தது இசை.

பிரா­கா­ரத்­தில் யாரு­மில்லை. நூற்­றாண்­டு­க­ளாக உறைந்து கிடந்த கற்­சிற்­பங்­க­ளில் கூட நெகிழ்வு கூடி கண்­கள் சொரு­கி­யி­ருப்­பது போன்று தோன்­றி­யது. நாதஸ்­வர இசை­யென்­பது தாழம்­பூ­வின் அடர்­ம­ணம் போன்­றது. தனி­யா­ன­தொரு சுகந்­தம்.

யார் வாசிக்­கி­றார்­கள் என்று எழுந்து போய் பார்க்க தோன்­ற­வில்லை. ஆனால் இசை நின்ற போது கண்­ணுக்கு தெரி­யாத குளிர்ச்சி அந்த மண்­ட­பம் எங்­கும் படர்ந்து கொண்­டி­ருப்­பதை உணர முடிந்­தது.

யாரோ முகம் தெரி­யாத ஒரு இசைக்­க­லை­ஞன் தன் நூற்­றாண்­டு­கால துய­ரத்தை நாதஸ்­வ­ரத்­தின் வழியே வழிய விட்­டி­ருக்­கி­றான்.

அரக்­கினை போல பிசு­பி­சுப்­பாக உட­லில் ஒட்­டு­கி­றது இசை. என்ன அனு­ப­வ­மது! உட­லின் நரம்­பு­கள் நடுங்க துவங்­கி­யி­ருந்­தன, கைரோ­மங்­கள் குத்­தி­யிட்டு நின்­றன!  சிவ­னின் மீது விழுந்த பிரம்­படி ஊரில் இருந்த யாவர் முது­கி­லும் விழுந்­தது என்ற புராண கதை­யைப் போன்று கோயி­லின் பூஜைக்கு வாசிக்­கப்­பட்ட இசை, பிரா­கா­ரம் தாண்டி, சிற்­பங்­கள், தாண்டி கல் மண்­ட­பம் தாண்டி தெப்­பம் கடந்து  திறந்த காதுள்ள யாவ­ருக்­குள்­ளும் நிரம்பி வழி­யும் சந்­தோ­ஷ­மும் ஒருங்கே தரு­வ­தா­க­யி­ருந்­தது.

கிட்­டத்­தட்ட அதற்கு நிக­ரான ஒரு அனு­ப­வத்தை 'திரு­வா­ச­கம்' கேட்­கும் போது உணர்ந்­தேன். அதன் பிறகு ஒரு வார­கா­லத்­திற்கு வேறு எதை­யும் கேட்­க­வில்லை. கேட்க தேவை­யி­ருப்­ப­தா­க­வும் மனம் உண­ர­வில்லை. நல்­லி­சை­யின் சுபா­வம் அது­தா­னில்­லையா?