மேலப்பாளையத்தில் புகழ் ஓங்கும் அஹ்மது கபீர் ரிபாஈ நாயகம் (ரழி)

பதிவு செய்த நாள்

02
ஏப்ரல் 2016
22:13

இறைத்தூதர் பெருமானார் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் 18வது தலைமுறையில் முத்தாக வந்துதித்தவர்கள் செய்யிது அஹ்மது கபீர் ரிபாஈ நாயகம் (ரழியல்லாஹ் அன்ஹு). இஸ்லாமிய வருடம் ஹிஜ்ரி 512 (கி.பி. 1107) ரஜபு பிறை 27–ல் ஈராக் நாட்டில், பசரா என்ற ஊரில் தோன்றினார்கள். பெற்றோர் சையத்அலி அபுல் ஹசன் – பாத்திமா அல் அன்சாரி. தனது உடல் பொருள், ஆவி அனைத்தையும் இறைவனுக்காக தியாகம் செய்த ரிபாஈ (ரழி) கி.பி. 1183ம் ஆண்டு, ஹிஜ்ரி 578, ஜமாதுல் அவ்வல் பிறை 22–இல் இப்பூலகை விட்டு மறைந்தார்கள். ரிபாஈ (ரழி) அவர்களுக்கு 7 வயது இருக்கும் போதே தந்தையை இழந்ததால் தாய்மாமனார் மன்சூர் ரப்பானி (ரழி) அவர்களிடம் வளர்ந்தார்கள். 8 வயதிலேயே குர்ஆனைக் கற்று அதன் பொருள் அர்த்தம் புரிந்து நடந்தார்கள். சிறு வயதிலேயே கராமத்துக்கள் (அதிசயங்கள்) பலவற்றை செய்து காட்டி ரிபாஈ (ரழி) நாயகம் அவர்கள் அகமியம் அறிந்த தலைவரானார்கள். 

* உலகம் முழுவதும் ரிபாஈ தரீக்காக்கள்

அஹ்மது கபீர் ரிபாஈ நாயகம் (ரழி) அவர்களின் புகழ் உலகெங்கும் பரவி, ரிபாஈ  தரீக்காக்கள் இலங்கை, பர்மா, ஈரான், ஈராக், பாக்தாத், சிறியா, சீனா, ஜப்பான் போன்ற  உலக நாடுகளில் செயல்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் பெங்களூரு டொட்பல்லாபுதூர், பில்குண்டான், சன்னாபட்னா ஆகிய இடங்களிலும், தமிழகத்தில் சென்னை திருவல்லிக்கேணி, நெல்லை மேலப்பாளையம், தூத்துக்குடி ஆழ்வாதிருநகரி உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ரிபாஈ தரீக்காக்கள் உள்ளன. 

* மேலப்பாளையத்தில் தலைமை பீடம்

ரிபாஈ (ரழி) ஆண்டவர்கள் தரீக்காவின் தென்னிந்திய தலைமைப் பீடம் நெல்லை மேலப்பாளையத்தில் கடந்த 250 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. மெஞ்ஞான ஒளி ரிபாஈ மவுலானா வெள்ளை கலீபா ஹாஜாமுஈனுத்தீன் செய்யிது அஹ்மதுல்லாஷா சதர் சர் கலீபத்துர் ரிபாஈயுல் அஹ்மதியத்துல் காதிரி (ரஹ்) அவர்களின் புதல்வர் வெள்ளை கலீபா சாஹிப் அமீர் ஹம்ஸா செய்யிது ஹவ்துல்லாஷா ரிபாஈயுய்யுல் அஹ்மதியத்துல் காதிரி 6வது தலைமுறையாக இதனை நடத்தி வருகிறார்.

மேலப்பாளையத்தில் ரிபாஈ தரீகா தோன்றி வளர்ந்த அரிய வரலாறு பற்றி மேலப்பாளையம் ரிபாஈ கலீபாக்களில் ஒருவரான தாவூதலி குலாம் அஹ்மது  செய்யிது நூருல்லாஷா கலீபத்துர் ரிபாஈ அஹ்மதியத்துல் காதிரி கூறும் சுவாரஷ்யமான விஷயங்கள்...

* ஆன்மிகப் பேரொளி வெள்ளை கலீபா (ரழி) தோன்றினார்கள்

ரிபாஈ நாயகத்தின் வழியைப் பின்பற்றிய பாக்தாத் அரேபியரான ஹாபிஸ் பதுருத்தீன் (ரழி) இஸ்லாமிய மதப்பிரசாரத்துக்காக தென்னிந்தியாவுக்கு வந்தார்கள். மேலப்பாளையத்தில் தங்கியிருந்து ரிபாஈ தரீக்காவை வளர்த்தார்கள். அல்லாஹ் வழங்கிய அருட்கொடைகள் மூலம், ரிபாஈ  நாயகம் நடத்திக் காட்டிய அதிசயங்கள் (கராமத்துக்கள்) பற்றியும், நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மறுபக்கமாக அவர்கள் வாழ்ந்து காட்டியது பற்றியும் மக்களுக்கு எடுத்துச் சொன்னார்கள். பின்பு மேலப்பாளையத்திலேயே மணம் புரிந்து மெஞ்ஞான சொரூபர் காமில் வெள்ளை கலீபா முகம்மது ஹவ்து (ரழி) அவர்களை பெற்றெடுத்தார்கள். 

* வெள்ளை கலீபா தெரு என பெயர் சூட்டிய நவாப்புகள்

வெள்ளை கலீபா முகம்மது ஹவ்து (ரழி) அவர்கள் சிறுவயதிலேயே பொறுமை குணம் மிகுந்தவர்களாகவும், ஆன்மிகக் கல்வியில் சிறந்தவர்களாகவும் விளங்கி ரிபாஈ தரீக்காவில் ‘கிலாபத்’ என்னும் குருத்துவ கலீபா பட்டம் பெற்றார்கள்.  இதனைத் தொடர்ந்து வெள்ளை கலீபா சாகிபு என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டார்கள். சென்னை கோட்டையில் அரசு உயர் அதிகாரிகளாக இருந்த இஃதிபார்கான் நவாப் குடும்பத்தினர்களால், வெள்ளை கலீபா அவர்கள் வாழ்ந்து வந்த தெருவுக்கு வெள்ளை கலீபா சாகிபு தெரு என பெயர் சூட்டினர்.

* ஆன்மிகத்துக்காக அரும்பாடு பட்ட வெள்ளை கலீபா முஹம்மது ஹவ்து (ரழி)

வெள்ளை கலீபா முகம்மது ஹவ்து (ரழி) அவர்கள் தனது தொடர் தியான வலிமை மூலம், அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்டினார்கள். கடுமையான விஷம் நிறைந்த பாம்புகள் கூட அவர்களுக்கு அடிபணிந்து நடந்தன. அல்லாஹ்வின் மீது கொண்ட தீராத காதலாலும், ரிபாஈ நாயகத்தின் மீது கொண்ட அளவற்ற பற்றின் காரணமாகவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை, திங்கள் இரவுகளிலும், பிறை 14ம் இரவுகளிலும் மற்றும் ஆண்டு தோறும் பெரிய ராத்திபு திக்ரு (இறை தியானம்) மஜ்லிஸ் நிகழ்ச்சிகள் நடத்தி 120 ஆண்டு காலங்கள் இவ்வுலகில் வாழ்ந்து ரிபாஈ தரீக்கா செழித்தோங்க வெள்ளை கலீபா அவர்கள் அரும்பாடு பட்டார்கள். 

* ரிபாஈ மவுலானா வெள்ளை கலீபா செய்யது அஹ்மதுல்லாஷா (ரஹ்)

5வது தலைமுறை ரிபாஈ கலீபாவானார்கள்!

வெள்ளை கலீபா முஹம்மது கவுது (ரழி) அவர்கள் 120 ஆண்டு காலம் இவ்வுலகில் வாழ்ந்து ஆன்மிகத் தொண்டு ஆற்றி வந்த நிலையில், இவர்களது வழியில் 4–வது தலைமுறையாக வெள்ளை கலீபா அமீர் ஹம்ஸா (ரஹ்) அவர்கள் கிலாபத் பட்டம் பெற்று கலீபா ஆனார்கள். அதனையடுத்து இவரது 2வது மகன்  ரிபாஈ மவுலானா வெள்ளை கலீபா ஹாஜா முஈனுத்தின் செய்யிது அஹ்மதுல்லாஷா சர்கலீபத்துர் ரிபாஈயுல் அஹ்மதியத்துல் காதிரி (ரஹ்) அவர்கள் 5வது தலைமுறை ரிபாஈ கலீபாவாக பட்டம் பெற்றார்கள்.

* தனது சொந்த இல்லத்தை ரிபாஈ நாயகத்துக்கு அர்ப்பணித்தார்!

அஹ்மதுல்லாஷா கலீபா (ரஹ்) அவர்களும் தங்களது பாட்டனார் வெள்ளை கலீபா முஹம்மது ஹவ்து போலவே மெஞ்ஞானத்தில் சிறந்து விளங்கினார்கள். 5 நேர தொழுகையை தவறாமல் நிறைவேற்றி, உலக ஆசைகளை புறந்தள்ளி, எப்போதும் அல்லாஹ்வை திக்ரு (தியானம்) செய்வதிலேயே அதிக நேரங்களை செலவிட்டார்கள். தான் தங்கியிருந்த சொந்த இல்லத்தை ரிபாஈ நாயகத்துக்காக அர்ப்பணித்து அவர்களது திருப்பெயரால் ரிபாஈ தர்காவை கட்டினார். அங்கு தினந்தோறும் சிறப்பு இறை வழிபாடுகள் நடந்து வந்தன. ஆன்மிகப் பேரொளி அஹ்மதுல்லாஷாவின் புகழ் திக்கெட்டும் பரவி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என உலக நாடுகள்  முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் மேலப்பாளையம் வந்து அஹ்மதுல்லாஷாவிடம் வந்து முரீது (ஞான தீட்சை), பக்கிரியத்து (இறை அர்ப்பணிப்பு), கிலாபத் (குருத்துவம்) பட்டங்கள் பெற்றுச் சென்றனர். 

* ஆழ்வார்திருநகரி ஆன்மிக ஒளி பூஅலி ஹம்சா செய்யிது ரஹ்மத்துல்லாஷா ரிபாஈ (ரஹ்)!

ஆழ்வார்திருநகரியில் வாழ்ந்து வந்த ஆன்மிக ஒளி அல்வலிய்யுல் காமில் பூஅலி ஹம்ஸா முஹம்மது செய்யிது ரஹ்மத்துல்லாஷா கலீபத்துர் ரிபாஈ அஹ்மதியத்துல் காதிரி (ரஹ்) அவர்களுக்கு, வெள்ளை கலீபா அஹ்மதுல்லாஷா அவர்கள் பக்கீரியத் என்னும் ஞான தீட்சை வழங்கினார்கள். பெங்களூரு பில்குண்டான் பாபாஜான் செய்யிது ஹவ்துல்லாஷா (ரஹ்) கலீபா அவர்களிடம் பூஅலி ஹம்சா ரஹ்மத்துல்லாஷாவும், அவரது உற்ற தோழர் மேலப்பாளையம் அப்துல் காதிர் செய்யிது அன்வாருல்லாஷா கலீபாவும் கிலாபத்து என்னும் குருத்துவம் பெற்று ரிபாஈ கலீபா ஆனார்கள். ரஹ்மத்துல்லாஷா கலீபா தான் வாழ்ந்த வீட்டை ரிபாஈ நாயகத்துக்காக அர்ப்பணித்து அங்கு ஆன்மிகப்பணிகள் இறை திக்ரு, தியானம் மேலோங்க செய்தார்கள். ஆண்டுதோறும் ரஜபு பிறை 12–ல் ரிபாஈ ஆண்டவர்கள் கந்தூரி விழா அங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

* அஹ்மதுல்லாஷா மறைவின் அற்புதம்!

ரிபாஈ நாயகம் (ரழி) அவர்கள் அல்லாஹ்வின்பால் அழைக்கப்பட்ட நாளான ஜமாத்துல் அவ்வல் பிறை 22–க்கு அடுத்த நாளான 23ம் பிறையன்று வியாழக்கிழமை,  அஹ்மதுல்லாஷா கலீபா அவர்கள் (19. 10. .1995, ஹிஜிரி 1416) தனது 76வது வயதில் இகபர மோட்சம் அடைந்தார்கள். மாஷா அல்லாஹ், ரிபாஈ நாயகம் அவர்கள் வபாத்தான மாதம் மற்றும் கிழமையில் அஹ்மதுல்லாஷா கலீபா அவர்களும் வபாத் ஆனது மிகப்பெரும் அற்புதம் எனலாம். இந்த நிகழ்வு அஹ்மதுல்லாஷாவுக்கு அல்லாஹ் வழங்கிய பெரும் பாக்கியம் ஆகும். அஹ்மதுல்லாஷாவுக்குப் பிறகு வெள்ளை கலீபா சாஹிபு ஹைதர் அலி செய்யிது அமீருல்லாஷா சர் கலீபத்துர் ரிபாஈ அஹ்மதியத்துல் காதிரி (ரஹ்) அவர்கள் ரிபாஈ தரீக்காவை வழி நடத்தினார்கள்.

* ரிபாஈ தரீக்காவின் 6 வது தலைமுறை!

ஹைதர் அலி கலீபாவை அடுத்து வெள்ளை கலீபா அப்துல் கரீம் செய்யிது அஹ்மதுல்லாஷா கலீபத்துர் ரிபாஈ அஹ்மதியத்துல் காதிரி ரிபாஈ கலீபாவாக பொறுப்பேற்றார்கள். இளம் வயதிலேயே அவர்கள் இறைவனடி சேர்ந்தார்கள். அவர்களை அடுத்து ரிபாஈ தரீக்காவின் 6–வது தலைமுறையாக  தற்போது வெள்ளை கலீபா சாஹிபு அமீர் ஹம்ஸா செய்யிது ஹவ்துல்லாஷா ரிபாஈயுல் அஹ்மதியத்துல் காதிரி தலைமையில் கலீபாக்கள், பக்கீர்கள், முரீதுகள் உறுதுணையாலும் மேலப்பாளையத்தில் ரிபாஈ தரீக்கா மேலாங்கி நிற்கிறது.

* வருடா வருடம் ரிபாஈ (ரழி) கந்தூரி விழா! 

ரிபாஈ நாயகம் (ரழி) அவர்கள் மறைந்த தினமான ஜமாத்துல் அவ்வல் பிறை 22–ல் (கி.பி. 1183, செப்டம்பர்–23, வியாழக்கிழமை), ரிபாஈ நாயகத்தை நினைவு கூறும் வகையில் மேலப்பாளையம் ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப்பில் ‘செய்யிது அஹ்மது கபீர் ரிபாஈ (ரழி) நாயகம்’ அவர்களின் பெரிய ராத்திபு கந்தூரி விழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

* பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்தும் காதிரிய்யா!

கந்தூரி பைவத்தின் போது ரிபாஈ ஆண்டவர்கள் தர்கா ஷரீப்பில் திக்ரு மஜ்லீஸ், ரிபாஈ ஆண்டவர்களின் சரிதைகள், தரீக்காவின் மகத்துவங்கள், புகழ் மாலைகள், ஆன்மிக சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. மேலும், ரிபாஈ ஆண்டவர்களின் மகத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் பக்கீர்கள் செய்யும் கராமத் (அதிசய) காதிரிய்யா நிகழ்ச்சிகள் பார்ப்பவர்களை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. தாயிரா, டங்கா முழங்கி, ரிபாஈ நாயகத்தின் சிறப்புக்களை கூறும் வகையில் பைத்துக்களை ஓதிக் கொண்டு தப்பூஸ், தல்லார், அல்வான், அல்மதத், கத்தி, கட்டாரி, குத்துவாள் போன்ற கூர்மையான ஆயுதங்களை பக்கீர்கள் தங்கள்  உடம்பில் பல பாகங்களில் செலுத்தி ரத்தம் இன்றி அற்புதமான காதிரிய்யா நிகழ்ச்சியை செய்து காட்டுகிறார்கள். குறிப்பாக நீளமான ஊசி கம்பிகளை உதடு, மார்பு, காது மடல்கள், நாக்கு, கன்னம் போன்ற இடங்களில் செலுத்தியும், வாளால் தங்கள் உடல்களை வெட்டுவதும் போன்ற எண்ணற்ற கராமத்துக்களை செய்து காட்டுகின்றனர். இப்படி செய்யும் போது ஒரு துளி ரத்தம் கூட காண முடியாது. அதுவே ரிபாஈ நாயகத்தின் மகத்துவம், அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள மிகப்பெரிய நிஃமத் ஆகும்.

* காதிரிய்யா குத்துவதால் நோய்கள் தீரும் அதிசயம்!

முக்கியமாக தீராத நோய் உள்ள இடங்களில் நேமிதம் பெயரில் காதிரிய்யா குத்துவதன் பலனாக அந்த நோய்கள் தீர்கின்றன. வாய் பேசாதோறுக்கு நாக்கில் காதிரிய்யா குத்துவதன் மூலம் அல்லாஹ்வின் அருளால் பேச்சுத்திறன் வரும். ரிபாஈ நாயகத்தின் மூலம் அல்லாஹ்வின் தஜல்லியத்தை (வல்லமையை) நாமும் காணலாம் என்கின்றனர் ரிபாஈ நாயகத்தின் சீடர்கள் என்னும் முரீதுகள். நாமும் ரிபாஈ நாயகத்தின் வழியைப் பின்பற்றி வெள்ளை கலீபா அஹ்மதுல்லாஷா கலீபாவைப் போல் தரீக்கத் மேலோங்க அரும் பாடுபடுவோமாக!

– செய்யிது ஆஷிக்குல்லாஷா ரிபாஈ