ஆதம்பாக்கம் நந்தி பாபா

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 19:16

சென்னை,    

ஆதம்பாக்கம் நந்தி பாபா, அப்படித் தான் அவரை எல்லோருக்கும் தெரியும். அவர் சுமார் இருப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஆதம்பாக்கம் ஶ்ரீ நந்தீஸ்வரர் கோவில் முன்பு இருந்து மக்களுக்கு அருளாட்சி வழங்கியுள்ளார். பாபா வட இந்தியர். ஹிந்தி மொழி மட்டுமே பேசி வந்தார். பல நேரங்களில் அவர் பார்வை மட்டுமே பல பிரச்சனைகளை தீர்த்து வைத்துள்ளது என மக்கள் பலர் தெரிவித்தனர். எப்போதும் மூன்று வேளை தனக்கு உரிய பாணியில் பூஜை செய்வார். அடிக்கடி வானம் அன்னாந்து பார்த்து வணக்கம் செய்வார். தான் சாப்பிடும் எந்த பொருளையும் நாலா பக்கம் உள்ள தேவதைகளுக்கு அர்ப்பணித்து, சூர்ய சந்த்ரர்களுக்கு அர்ப்பணித்துமே உண்டு வந்தார். எல்லோருக்கும் புரியாத புதிராகவே இருந்தாலும் அவரிடம் வரும் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே இருந்தது உண்மை.

தன்னை அனைவரும் “பப்லூ” என்று அழைப்பதையே அவர் விரும்பினார். யஜுர் வேதத்தில் வரும் ஶ்ரீ ருத்ரத்தில், “பப்லுசாய விவ்யாதினேனானாம்..” என்று வருகிறது. நந்தி மேல் அமர்ந்திருக்கும் சிவ பிரானை வேதம் அவ்வாறு துதிக்கிறது. ஶ்ரீ நந்தீஶ்வரர் கோவிலை தேர்வு செய்து, தன் கடை நாள் வரை அங்கேயே வசித்து வந்தார். இதனால் அவர் நந்தி பகவானின் மறு அவதாரமே என்பது பக்தர்கள் கருதினர். அதனாலேயே நந்தி பாபா என்றும் அழைக்கப்பட்டார். அவர் எண்ணற்ற அதிசயங்களை வாழ்ந்த காலத்தில் நிகழ்த்தி உள்ளார்.

பிள்ளைப்பேறு வேண்டி ஒரு வட இந்திய தம்பதி ஆதம்பாக்கம் சிவன் கோவில் வர, அங்கே இருந்த பாபா, அவர்களை அழைத்து அவர் தம் மனக்கிடக்கை இது தானே என தெள்ளத் தெளிவாகக் கூறி , குழந்தை பிறக்கும் என்று ஆசீர்வதித்தார். அவ்வாறே அவர்களுக்கும் மகப்பேறு உண்டாயிற்று.

நோயுற்றிருந்த தாயாரின் மகன் அவரைக் காண வருகையில், தன் கருணைப் பார்வையாலேயே கவலை கொள்ளாதே என தேற்றி, தாயாரைக் காப்பாற்றிய சம்பவமும் உண்டு. பல லட்சக்கணக்கான பேர் எழுதும் தேர்வில் சாதாரண மாணவனைத் தேற்றிய அற்புதமும் செய்திருக்கிறார். பல கதைகள் இவ்வாறு உண்டு.

ஒரு முறையாவது கோபித்தோ, அடித்து விரட்டியோ யாரையுமே அனுப்பியதில்லை. சிரித்த முகம், அனைவருக்கும் வணக்கம் சொல்லும் பண்பு, பகிர்ந்து உண்டு வாழும் மாண்பு என்று தான் கடைசிவரை இருந்தார். ஒருவன் வருவதற்கு முன்பே அவன் யார், மனதில் என்ன நினைத்து வருகிறான் என்பதெல்லாம் அவருக்கு நன்றாகத் தெரியும். சிலருக்கு சில பெயரிட்டு அழைப்பார். அந்த பெயர் அவ்வளவு பொருத்தமாக இருக்கும். அவரிடம் யாரும் எதையும் ஒளிக்கவோ மறைக்கவோ முடியாது.

ஆட்டோக்களில் அமர்வதையே அவர் வழக்கமாக வைத்திருந்தார். அவருக்கு என எந்த இடமோ, வசதியோ செய்து கொள்ளாமலே இத்துனை வருடங்கள் இருந்தார். தன் உடலை எப்போதுமே அவர் பொருட்படுத்தியதே இல்லை. தன்னைக் காண வரும் அடியவர் மன நிம்மதியுடன் செல்ல வேண்டும் என்பதில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வார்.

ஒரு தனியார் தொலைக்கட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் பாபா வந்த பின்பு அவரைக் காண மக்கள் இந்தியாவின் பல மூலை முடுக்குகளில் இருந்து வந்து குவிந்தனர்.

கடன் பிரச்சனை, தொழில் முடக்கம், குடும்பப் பிரச்சனை,திருமணத் தடை, உடல் உபாதை, எதிரிகள் தொல்லை, ஏவல் பில்லி சூனியம், என அனைத்து வகையான பிரச்சனைகள் கொண்ட மக்களும் பாபாவிடம் வந்து பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு இன்று சந்தோஷமாக இருப்பதை பக்தர்கள் கூறி நம்மால் அறியமுடிகிறது.

இவ்வாறு அருளாசி புரிந்து வந்த பாபா, தான் வந்த நோக்கம் நிறைவேறிய காரணத்தினால், ஆகஸ்ட் 8ஆம் தேதி இவ்வுடலை விட்டு சென்றடைந்தார். இப்போதும் அவர் ஜீவ சமாதியின் மூலமாக, வரும் பக்தர்களுக்கு ஆசிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்.

அவரது ஜீவ சமாதி காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேல்பேரமனல்லூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. காஞ்சீபுரம்-உத்திரமேரூர் சாலையில் இந்த இடம் அமைந்துள்ளது. மேல்பேரமனல்லூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து இறங்கி ஒரு கி.மீ தூரத்தில் சமாதி உள்ளது. நந்தி பாபாவின் குரு பூஜை வரும் செப்டம்பர் 24 , 2018அன்று விமரிசையாக நடை பெற உள்ளது.