இந்தியாவின் வர்த்தக கொள்கைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டும் : உலக நாடுகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 18:35

வாஷிங்டன்,

    இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமை விவசாயிகளுக்கு இந்திய அரசு அதிகளவில் மானியங்கள் வழங்குகிறது. இதுபோன்ற வர்த்தகத்தை நாசமாக்கும் இந்திய கொள்கைகள் குறித்து அரிசி, கோதுமை உற்பத்தி செய்யும் உலக நாடுகள் கவனமாக இருக்க வேண்டும் என அமெரிக்கா நேற்று எச்சரித்தது.

வியாழக்கிழமை அன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் செனட் சபையின் விவசாயம், ஊட்டச்சத்து மற்றும் காடுகளுக்கான கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் அமெரிக்க வர்த்தக பிரதிநிதியின் தலைமை வேளாண் பரிந்துரையாளரான கிரகோரி டவுட் கலந்து கொண்டார். அங்கு அவர் இந்தியா தொடர்பாக மேற்குறிப்பிட்ட எச்சரிக்கையை விடுத்தார். 

இந்திய அரசு தன் விவசாயிகளுக்கு அதிக மானியம் வழங்குகிறது. உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக செயல்படும் இந்தியாவின் வர்த்தக கொள்கைகள் குறித்து உலகின் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தி செய்யும் அனைத்து நாடுகளும் கவனமாக இருக்க வேண்டும் என கிரகோரி டவுட் தெரிவித்தார்.

‘‘இந்தியாவில் அரிசி மற்றும் கோதுமை விவசாயிகளுக்கு தனித் தனியாக அரிசி மற்றும் கோதுமையின் மொத்த உற்பத்தி மதிப்பில் 10 சதவீதம் மட்டுமே மானியமாக வழங்க இந்திய அரசுக்கு அனுமதி உள்ளது. ஆனால் கடந்த 2010 முதல் 2014ம் ஆண்டு வரை அரிசி உற்பத்தியாளர்களுக்கு  74 முதல் 84.2 சதவீதம் மற்றும் கோதுமை உற்பத்தியாளர்களுக்கு 60.1 முதல் 68.5 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட்டுள்ளது’’

‘‘கடந்த 5 ஆண்டுகளில் இந்தியா 530 கோடி டாலர் முதல் 800 கோடி டாலர் மதிப்பிலான அரிசியை ஏற்றுமதி செய்துள்ளது. இது மற்ற நாடுகளை விட அதிகம். மேலும் அதே காலக்கட்டத்தில் இந்தியாவில் 7 கோடி முதல் 190 கோடி டாலர் மதிப்பிலான கோதுமை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது’’

‘‘சமீபத்தில் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதி மீது அமெரிக்கா 25 மற்றும் 10 சதவீதம் கூடுதல் வரி விதித்தது. அதற்கு பதிலடியாக அமெரிக்காவின் வர்த்தக கூட்டாளிகள் சுமார் 3000 கோடி டாலர் மதிப்பிலான தங்கள் வேளாண் ஏற்றுமதி பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்துள்ளனர். கூட்டணி நாடுகளின் இந்த நடவடிக்கை மிகவும் ஏமாற்றமளிப்பதாக உள்ளது’’ என விசாரணையின் போது கிரகோரி டவுட் கூறினார்.

‘‘இந்த கூடுதல் வரிகளால் அமெரிக்க விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் நான் சுமார் 150 கூட்டங்கள் நடத்தியுள்ளேன். அதில் தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்கள் குறித்து விவசாயிகள் என்னிடம் தெரிவித்தனர். இந்த கூடுதல் வரிகளுக்கு எதிராக உலக வர்த்தக மையத்திடம் அமெரிக்கா புகார் அளித்துள்ளது’’ என கிரகோரி டவுட் தெரிவித்தார்.

கடந்த மே மாதம் உலக வர்த்தக நிறுவனத்தின் விவசாய கமிட்டியில் முதல்முறையாக இந்தியாவின் அரிசி மற்றும் கோதுமை உற்பத்தியாளர்களுக்கு அளிக்கப்படும் சந்தை ஆதரவு விலைக்கு எதிராக கிரகோரி டவுட் அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.