தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது: உச்சநீதிமன்றம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 17:42

புதுடில்லி

தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது என்றும், தொழுநோய் குறித்த விழிப்புணர்வு விளம்பரத்தை அதற்கேற்ற வகையில் மாற்றியமைக்குமாறும் உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை இன்று விசாரித்தது. பின்னர், தொழு நோயை முற்றிலுமாக ஒழித்தல் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல் ஆகியவற்றிற்கான வழிகாட்டுதலை மத்திய மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் தெரிவித்தனர்.
”தொழுநோய் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்

அவர்கள் தனிமைப்படுத்துவதைத் தவிர்க்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும்” என்று நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.

”பள்ளிகளில் தொழுநோய் பாதித்த குழந்தைகள் தனிமைப்படுத்தக்கூடாது. தொழு நோயாளிகளுக்கான அனைத்து நலத்திட்டங்களும் முழுமையாக செயல்படுத்தவேண்டும். தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படக்கூடாது. அவர்களுக்கும் சராசரி மக்களைப் போல வாழ உரிமை உண்டு” என்று தெரிவித்தனர்.

”மாற்றுத்திறனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்குவது போல தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் தனியாக சான்றிதழ் வழங்கப்படவேண்டும். மருத்துவமனைகளில் அவர்களுக்கு தேவையான சிகிச்சை பெறவும் அவர்களது பாதுகாப்பையும் உறுதிசெய்யவேண்டும். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான அட்டையை வழங்கவேண்டும். இதன்மூலம் அடிப்ப்டையான சில சேவைகளை அவர்களும் பெறமுடியும்” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த வழக்கில் விவாகரத்து செய்வதற்கான காரணங்களில் இருந்து தொழுநோயை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்த உச்சநீதிமன்றம், இன்று இந்த வழிகாட்டு நெறிகள அடங்கிய முக்கியத்துவம் மிக்க தீர்ப்பை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.