”உலகம் ஒரே குடும்பம்” என்ற கருத்துதான் இந்தியாவின் பலம்: பிரதமர் மோடி பெருமிதம்

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 15:03

இந்தூர்

உலகம் என்பது ஒரே குடும்பம் என்ற கருத்துதான் இந்தியாவின் மிகப்பெரிய பலம் என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமையுடன் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள சயீப் மசூதியில், தாவூதி போரா முஸ்லிம் சமுதாயத்தினர் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார்.

பிரதமர் மோடி,”இங்கு உரையாற்றுவது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. இந்தியா தனது வரலாறை நினைத்து பெருமை கொள்கிறது. நமது வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பானது உலகம் முழுதும் பிரதிபலிக்கிறது” என்று கூறினார்.

மேலும்,”உங்களின் ஆசிக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். குஜராத் முதல்வராக நான் இருந்தபோது, போஹ்ரா சமுதாயத்தினர் எனக்கு பெரும் ஆதரவு அளித்தனர். அவர்களுடனான எனது உறவு பழமைவாய்ந்தது. இந்த அன்பு தான் என்னை மீண்டும் இங்கு அழைத்து வந்துள்ளது. இந்த சமுதாயத்தினர் எனது குடும்பத்தினர் போல் உள்ளனர்” என்று தெரிவித்தார்.

”போரா சமூகத்தினரின் முன்னாள் தலைவர் சைதேனா முகமது புர்ஹானுத்தீன் மகாத்மா காந்திக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். தண்டி யாத்திரையின் போது மகாத்மா காந்தி, இந்த சமூகத்தினருக்கு சொந்தமான கட்டிடத்தில்தான் தங்கினார். அந்த இடம் பின்னர், நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது” என்று கூறினார்.

”நாட்டின் அமைதியில் போரா சமுதாயத்தினர் முக்கிய பங்களிக்கின்றனர். இளைஞர்களின் முன் மாதிரியாக உள்ளனர். வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றனர். அமைதிக்காக நிறைய பணிகளைச் செய்துள்ளனர். ஏழைகள் முன்னேற்றம் காண உதவியுள்ளனர்” என்று புகழாரம் சூட்டினார்.

“உலகம் என்பது ஒரே குடும்பம் என்ற கருத்துதான் இந்தியாவின் மிகப்பெரிய பலமாகும். இதனாலேயே, அனைத்து நாடுகளின் மத்தியில் இந்தியா தனித்து விளங்குகிறது” என்று கூறினார்.

”ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின்கீழ் இந்திய நாட்டில் உள்ள 50 கோடி ஏழை எளிய மக்கள் பயனடைந்துள்ளனர். தூய்மை திட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும். ஸ்வச்சத்தா ஹி சேவா திட்டத்தை நாளை அறிமுகம் செய்யவுள்ளேன். நாட்டை சுத்தம் செய்யும் தொழிலாளர்கள் மற்றும் மக்களிடம் நாளை வீடியோ கான்பரன்சிங் மூலம் நான் உரையாற்ற இருக்கிறேன்” என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.