ரஷிய துணை பிரதமருடன் சுஷ்மா ஸ்வராஜ் பேச்சுவார்த்தை

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 14:57

மாஸ்கோ

அரசுமுறைப் பயணமாக ரஷியா வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இன்று ரஷிய துணை பிரதமர் யூரி போரிசோவை சந்தித்து பேசினார்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் 2 நாள் அரசுமுறை பயணமாக நேற்று ரஷியாவுக்கு வந்தடைந்தார். 

ரஷியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாவ்ரோவை சுஷ்மா ஸ்வராஜ் நேற்று மாஸ்கோவில் சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பில், இருநாட்டு உறவுகள் மற்றும் பிராந்திர பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

ரஷியாவின் துணை பிரதமர் யூரி போரிசோவை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாச்சார பரிமாற்றம் உள்ளிட்ட இருதரப்பு துறைகளை மேம்படுத்துவதற்கான ஒத்துழைப்பு நல்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர், இந்தியா – ரஷியா இடையிலான வர்த்தகம், அறிவியல் தொழில்நுட்பம், பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான 23ஆவது மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ் கலந்துகொண்டார். இதில் ரஷிய துணை பிரதமரும் கலந்துகொண்டார். இந்த மாநாட்டில் இருதரப்பு விவகாரங்களும் விரிவாக விவாதிக்கப்பட்டன.