ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் பழனிசாமி

பதிவு செய்த நாள் : 14 செப்டம்பர் 2018 13:08

சென்னை

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள், இந்தோனேஷியாவின் ஜகர்த்தா மற்றும் பிளமிங் நகரங்களில் ஆகஸ்ட் 18 முதல் செப்டம்பர் 2 வரை நடைபெற்ற 18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 5 கோடியே 20  லட்சம் ரூபாய் மற்றும் அவ்வீரர்களின் 16 பயிற்றுநர்களுக்கு 78 லட்சம்  ரூபாய் அரசின் உயரிய ஊக்கத் தொகையாக வழங்கப்படுமென அறிவித்திருந்தார்.

பதக்கம் வென்ற வீரர்களுடன் முதல்வர் பழனிசாமி

இன்று (14.9.2018) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 12 விளையாட்டு  வீரர், வீராங்கனைகளுக்கு  3 கோடியே 70 லட்சம் ரூபாய் உயரிய ஊக்கத் தொகையாகவும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின்  11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாயும், என  மொத்தம்  4  கோடியே 21 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி  வழங்கினார்கள்,

18-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், தடகளத்தில் ஆண்களுக்கான 400 மீட்டர்  தடை தாண்டும் ஓட்டம் மற்றும் 4 x 400 மீட்டர்  தொடர் ஓட்டம் ஆகிய போட்டிகளில் 2 வெள்ளிப் பதக்கங்கள் வென்ற தருண் அவர்களுக்கு 60 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும்;

பெண்களுக்கான ஸ்குவாஷ் குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும், பெண்களுக்கான ஸ்குவாஷ் ஒற்றையர் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் வென்ற திருமதி தீபிகா கார்த்திக் மற்றும் செல்வி ஜோஸ்னா சின்னப்பா ஆகியோருக்கு தலா 50 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்;

ஆண்களுக்கான ஸ்குவாஷ் குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஹரிந்தர் பால் சிங் சந்தூ அவர்களுக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும்;

ஆண்களுக்கான பாய்மர படகு 49er-fx  போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற வருண் ஏ. தக்கர் மற்றும் கே.சி. கணபதி  ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்;

ஆண்களுக்கான குழு மற்றும் கலப்பு இரட்டையர் மேசைப்பந்து போட்டிகளில் 2 வெண்கலப் பதக்கங்கள் வென்ற  சரத்கமல் அவர்களுக்கு 40 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும்;

ஆண்களுக்கான குழுப் மேசைப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற   சத்யன் மற்றும் அமல்ராஜ் ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்;

ஆண்களுக்கான  ஹாக்கி குழுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ருபீந்தர் பால் சிங் மற்றும்   பி.ஆர். ஸ்ரீஜேஷ்  ஆகியோருக்கு தலா 20 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்;

பெண்களுக்கான பாய்மரப்படகு 49er-fx போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற செல்வி வர்ஷா கௌதம் அவர்களுக்கு 30 லட்சம் ரூபாய்க்கான காசோலையினையும்;    என மொத்தம் 3 கோடியே 70 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை 12 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும்;

விளையாட்டு வீரர்களின் பயிற்றுநர்களுடன் முதல்வர் பழனிசாமி

மேலும், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் பயிற்றுநர்கள்  டி. இராமச்சந்திரன்,  குன்ஹி முகமது,   அழகேசன்,   ஏ. பார்த்திபன்,  பி. பாலமுருகன்,  ஏ. சீனிவாசராவ்,  ஏ. முரளிதரராவ்,  எஸ். ராமன்,   அந்தோணி அற்புதராஜ்,   ஹர்மன் பிரீத்சிங், கே.எச். ஷான் ஆகிய 11 பயிற்றுநர்களுக்கு 51 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளையும்  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் இன்று வழங்கி வாழ்த்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்  பா. பாலகிருஷ்ணா ரெட்டி,  தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன்,  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர்  தீரஜ் குமார்,   தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர்   ரீட்டா ஹரிஷ் தக்கர்,   மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.