புதிய எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் கொள்கை அறிவிப்பு: மாநில அரசுகள் கையில் பொறுப்பை மாற்ற முயற்சி

பதிவு செய்த நாள் : 12 செப்டம்பர் 2018 19:41

புதுடில்லி,

எண்ணெய் வித்துக்களுக்கான புதிய கொள்முதல் கொள்கையை மத்திய அரசு இன்று அறிவித்தது. இந்த புதிய கொள்முதல் கொள்கை மூன்று மாற்று தீர்வுகளை முன்வைக்கிறது.

ஒன்று பழைய முறையில் உணவு காப்பரேஷன் கையில் கொள்முதல் பொறுப்பை விட்டுவிடுதல். அல்லது மாநில அரசு தானே கொள்முதல் செய்தல். அல்லது தனியார் வியாபாரிகள் மூலமாக கொள்முதல் பணியை செய்ய அனுமதித்தல் என மூன்று மாற்று வழிகளை மத்திய அமைச்சரவை முன்வைத்துள்ளது.

இதுவரை கொள்முதல் பொறுப்புகளை கவனித்து வந்த உணவு காப்பரேஷன் இந்த பணியில் இருந்து மெதுவாக நழுவி கொள்ளவும் அந்த பணியை மாநில அரசுகள் தலைக்கு மாற்றி விடவும் மத்திய அமைச்சரவை வழிவகுத்துள்ளது.

விவசாயம் மத்திய மாநில அரசுகளின் கூட்டு பொறுப்பில் இருப்பதால் மாநில அரசு மட்டும் ஏன் கொள்முதல் பணியை செய்ய வேண்டும் என்று ஆட்சேபம் தெரிவிக்கும் மாநில அரசுகளின் வாயை அடைக்க தனியார் கையில் கொள்முதல் பொறுப்பை கொடுத்துவிடுங்கள் என்று மத்திய அரசு தெளிவாக இந்த கொள்கை மூலம் தெரிவித்துள்ளது.

மத்திய அரசு வேளாண் விளை பொருட்களில் 23 பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அறிவிக்கிறது. அவற்றில் எண்ணெய் வித்துக்களும் ஒன்று.

இந்தியாவின் தேவைக்கு ஏற்ற அளவு எண்ணெய் வித்துக்கள் இங்கு விளையவில்லை. ஒட்டுமொத்த தேவையில் 70 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் வித்துகளின் அளவு 1.4 கோடி முதல் 1.5 கோடி வரையில் ஆகும்.

இந்த எண்ணெய் வித்துக்கள் கொள்முதல் பற்றிய பிரச்சனைக்கு மட்டும் தீர்வு காணுகின்ற வகையில் புதிய கொள்முதல் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய விவசாய அமைச்சகம் முன்வைத்த வரைவு கொள்கையினை மத்திய அமைச்சரவை பரிசீலித்து இந்த கொள்முதல் கொள்கைக்கு ஒப்புதல் தந்திருப்பதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

எண்ணெய் வித்துக்கள் கொள்முதலை மாநில அரசுகளின் கையில் ஒப்படைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. மாநில அரசுகள் விரும்பினால் தாங்களே கொள்முதல் செய்யலாம். இல்லாவிட்டால் உணவு காப்பரேஷனை கொள்முதல் செய்யட்டும் என விட்டு விடலாம்.

எண்ணெய் வித்துக்களின் சந்தை விலை அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் குறைவாக சரிந்தால் மட்டுமே உணவு காப்பரேஷன் கொள்முதலில் இறங்கும்.

மாநில அரசுகள் கொள்முதல் செய்ய விரும்பினால் அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் மூன்று மாத மொத்த விற்பனை விலைக்கும் இடையில் உள்ள குறைவை மாநில அரசு வழங்கலாம். இந்த கொள்முதல் நடைமுறையை நாட்டில் உற்பத்தியாகும் ஒட்டுமொத்த எண்ணெய் வித்துகளின் 25 சதவீதத்துக்கு மட்டுமே அமல் செய்ய முடியும்.

மாநில அரசுகள் தானே கொள்முதல் செய்வதற்கு பதிலாக தனியார் துறை வர்த்தகர்களையும் எண்ணெய் வித்துக்கள் கொள்முதலில் பயன்படுத்தி கொள்ளலாம். அவர்களை பழைய குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை பின்பற்றும்படி கூறலாம். அல்லது சந்தை விலைக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கும் உள்ள வித்தியாசத்தை வழங்கும்படி கேட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு மத்திய அரசு அறிவித்த புதிய எண்ணெய் வித்து கொள்முதல் கொள்கை அறிவிக்கப்பட்டுள்ளது.